பிரதமர் அலுவலகம்

கோழிக்கோட்டில் நடைபெற்ற “இந்திய சிந்தனைகளை உலகமயமாக்கல்” பற்றிய சர்வதேச மாநாட்டில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் உரை

கருணை, நல்லிணக்கம், நீதி, சேவை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகிய கருத்துக்களை சார்ந்ததாகவே இந்திய மாண்புகள் அமைந்துள்ளது என்றார்

வளர்ச்சிப் பாதையில் இந்தியா வேகமாக முன்னேறி வரும் வேளையில், இந்தியாவின் நடைமுறைகள் மற்றும் பாரம்பரியங்களை நோக்கியே செல்வது பெருமிதமளிப்பதாகவும் கூறினார்

சுவாமி விவேகானந்தரின் முழு உருவச் சிலையையும் திறந்து வைத்தார்

Posted On: 16 JAN 2020 6:03PM by PIB Chennai

கோழிக்கோடு இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் (ஐஐஎம்)-ல் அமைக்கப்பட்டுள்ள சுவாமி விவேகானந்தரின் முழு உருவச் சிலையை பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று (16.01.2020) காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

கோழிக்கோடு இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “இந்திய சிந்தனைகளை உலகமயமாக்கல்” பற்றிய சர்வதேச மாநாட்டில் அவர் கலந்து கொண்டார்.

     மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், “இந்திய சிந்தனைகள் வலிமையானவை மற்றும் பன்முகத்தன்மை கொண்டவை” என்றார். இது நிலையானது மற்றும் வெளிப்படக் கூடியது. சொற்பொழிவுகள் அல்லது கருத்தரங்கம் அல்லது புத்தகங்களில் கூட குறிப்பிட முடியாத அளவிற்கு மிகப் பெரியது. ஆனால், பொதுவாக, சில கருத்துக்கள் இந்திய மாண்புகளுக்கு பொதுவானவையாகவே தொடர்ந்து திகழ்கின்றன. அவை- கருணை, நல்லிணக்கம், நீதி, சேவை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவையாகும்”.

அமைதி, நல்லிணக்கம் & சகோதரத்துவம்

உலக நாடுகளை இந்தியா ஈர்ப்பதற்கான காரணம் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், “அமைதி, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் ஆகியவைதான் முதலாவதாகவும், முதன்மையானதாகவும் நினைவுக்கு வரும்” என்றார்.

பல்வேறு நாகரீகங்கள் தோல்வியடைந்த நிலையில், நல்லிணக்கம் மற்றும் அமைதி காரணமாக, நமது நாகரீகம் வளம் பெற்று, இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

“ஏராளமான மாநிலங்கள். ஏராளமான மொழிகள். ஏராளமான பேச்சு வழக்கு மொழிகள். ஏராளமான நம்பிக்கைகள். ஏராளமான பழக்கவழக்கங்கள் மற்றும் பாரம்பரியங்கள். ஏராளமான உணவுப் பழக்கங்கள். ஏராளமான வாழ்க்கை முறைகள். பல்வேறு விதமாக உடையணிதல். இருப்பினும், பல நூற்றாண்டு காலமாக நாம் தொடர்ந்து அமைதியுடன் வாழ்ந்து வருகிறோம். பல நூற்றாண்டு காலமாக உலக நாடுகளை நம் நாட்டிற்கு வரவேற்ற வண்ணம் இருக்கிறோம்.

பல்வேறு நாகரீகங்கள் வெற்றியடையாத நிலையில், நமது நாகரீகம் செழிப்புடன் உள்ளது. ஏன்? இங்கு அமைதி மற்றும் நல்லிணக்கம் திகழ்வதே காரணமாகும்”.

எளிமையான மற்றும் ஒன்றொடொன்று தொடர்புடைய நடைமுறைகளால் வழிகாட்டப்படும் நமது சிந்தனைகள் வாழும் பாரம்பரியமாக மாறியிருப்பதே நமது வலிமை என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இந்த நடைமுறைகள் கடினமானவையோ அல்லது ஒற்றைப் பரிமாணம் கொண்டவையோ அல்ல. இவற்றை தனித்தனியாக பின்பற்றலாம் என்பதில்தான் இவற்றின் அழகு அடங்கி இருக்கிறது” என்றும் அவர் கூறினார்.

இந்து மதம், பௌத்த மதம், ஜைன மதம் மற்றும் சீக்கிய மதம் போன்ற வலிமையான நம்பிக்கைகளை அளிக்கும் பூமியாக இந்தியா திகழ்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

“இந்த பூமியில்தான் ஃசுபி மதமும் தோன்றியது” எனவும் அவர் கூறினார்.

அஹிம்சையே இந்த அனைத்து மதங்களுக்கும் அடிப்படை என்று குறிப்பிட்ட அவர், மகாத்மா காந்தி “இந்த சிந்தனைகளை முன்னெடுத்துச் சென்றார்”, அதுவே இந்திய சுதந்திரத்திற்கு வழிவகுத்தது என்றும் தெரிவித்தார்.

“மோதலை தவிர்ப்பது என்ற இந்தியாவின் வழிமுறை, கொடூரமான சக்திகளால் வந்ததல்ல, மாறாக பேச்சுவார்த்தைகளின் வலிமை” என்றும் அவர் தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் மீது நேசம்:

“அமைதி மற்றும் நல்லிணக்கத்தில்தான் இந்தியா நம்பிக்கை கொண்டிருக்கிறது என்று நான் கூறும் வேளையில், தாய் இயல்பு மற்றும் நமது சுற்றுச்சூழல் மீதான நல்லிணக்கமும் அடக்கம்” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த உணர்வுகளின் ஆணிவேரை இப்போது மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகளில் காணலாம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

“தூய்மையான எதிர்காலத்திற்கான சூரிய மின் சக்தியை பயன்படுத்துவதற்கான சர்வதேச சூரியசக்தி கூட்டணி”-ஐ உருவாக்குவதில் இந்தியா உலகிற்கு முன்னோடியாக திகழ்ந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 5 ஆண்டுகளில் 36 கோடி எல்இடி பல்புகள் வினியோகிக்கப்பட்டிருப்பதுடன் 1 கோடி தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றியிருப்பதன் மூலம், ரூ.25 ஆயிரம் கோடி சேமிக்கப்பட்டிருப்பதுடன், கரியமில வாயு வெளியேற்றமும் சுமார் 4 கோடி டன் அளவிற்கு குறைந்திருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

புலி மற்றும் சிங்கங்களை பாதுகாத்தல்

2006-க்குப் பிறகு இந்தியாவில் வசிக்கும் புலிகளின் எண்ணிக்கை 2 மடங்காகி உள்ளது என்று அவர் கூறினார். “தற்போது, இந்தியாவில் ஏறத்தாழ 2970 புலிகள் வசிக்கின்றன. உலகில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் முக்கால் அளவு இந்தியாவில்தான் உள்ளன. புலிகள் வசிப்பதற்கு மிகவும் உகந்த இடமாக நம் நாடு உள்ளது. 2022 ஆம் ஆண்டுக்குள் புலிகளின் எண்ணிக்கையை 2 மடங்காக அதிகரிப்பதென 2010 ஆம் ஆண்டில் உலக நாடுகள் ஒப்புக் கொண்டன. நாம் இதனை முன்கூட்டியே நிறைவேற்றி சாதனை படைத்துள்ளோம்” என்றும் அவர் கூறினார்.

அதே போன்று சிங்கங்களின் எண்ணிக்கையும் 2010 ஆம் ஆண்டில் இருந்ததை விட 2015 ஆம் ஆண்டில் 30% அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வனப்பரப்பு அதிகரித்தல்

நாட்டின் வனப்பரப்பும் அதிகரித்துள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

“2014-ல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளின் எண்ணிக்கை 692 ஆக இருந்தது. இது 2019-ல் 860-க்கு மேல் அதிகரிக்கப்பட்டது. 2014-ல் 43 சமுதாய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் இருந்தன. தற்போது அவை 100-க்கு மேல் உள்ளன. இதுவே ஏராளமான சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரின ஆர்வலர்களை இந்தியாவிற்கு ஈர்க்கிறது”.

மகளிர் நலன்

“இந்த பூமியில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், பெண்களுக்கு அளிக்கப்படும் மரியாதை, முக்கியத்துவம் மற்றும் கண்ணியம்தான். தெய்வீகத்தின் வெளிப்பாடாகவும் பெண்கள் கருதப்படுகின்றனர்” என்று பிரதமர் தெரிவித்தார்.

அந்த வகையில், ராஜா ராம் மோகன் ராய், ஈஸ்வர் சந்திர வித்யாசாகர். மகாத்மா பூலே மற்றும் சாவித்ரி பாய் பூலே ஆகிய புனிதர்களின் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.

மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்க பல நூறு ஆண்டுகள் ஆன நிலையில், இந்திய அரசியல் சாசனம் செயல்படத் தொடங்கிய முதல் நாளிலேயே பெண்களுக்கு வாக்குரிமை வழங்கியிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

“தற்போது, முத்ரா கடன் பெற்ற பயனாளிகளில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பெண்கள் ஆவர். நமது ஆயுதப் படைகளிலும் பெண்கள் தீவிரப் பங்களிப்பை அளித்து வருகின்றனர். கடற்படையைச் சேர்ந்த பெண் அதிகாரிகள் குழுவினர், கடல் மார்க்கமாகவே உலகைச் சுற்றி வந்தனர்! இது வரலாற்றுச் சாதனை. தற்போது இந்தியாவில்தான் அதிக அளவில் பெண் எம்.பி.க்கள் உள்ளனர். 2019 மக்களவைத் தேர்தலில் பெண் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

வெளிப்படைத்தன்மையைக் கொண்டாடுதல்

வெளிப்படைத்தன்மையை இந்தியா கொண்டாடுவதாக பிரதமர் தெரிவித்தார். எங்கு வெளிப்படைத்தன்மை இருக்கிறதோ அங்கு பல்வேறு கருத்துக்களுக்கு மதிப்பளிப்பதும், புதுமைகள் படைக்கப்படுவதும் இயற்கையானதே. இந்தியர்களின் புதுமை முயற்சிகள் உலக நாடுகளை இந்தியாவை நோக்கி ஈர்க்கின்றன. இந்தியாவின் சிந்தனைகள் உலகிற்கு ஏராளமானவற்றை வழங்கியிருப்பதுடன், இன்னும் அதிக பங்களிப்பை வழங்கும் திறனும் உள்ளது. இந்த கிரகம் எதிர்கொள்ளும் பெரும்பாலான முக்கிய சவால்களுக்கு தீர்வு காணும் திறனும் இந்தியாவிற்கு உள்ளது என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

*********



(Release ID: 1599640) Visitor Counter : 200