வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியாவும் – பங்களாதேஷும் வர்த்தகத்துறை செயலாளர் நிலையிலான கூட்டத்தை புதுதில்லியில் நடத்தின
Posted On:
16 JAN 2020 4:53PM by PIB Chennai
இந்தியா – பங்களாதேஷ் இடையே வர்த்தகத்துறை செயலாளர் நிலையிலான கூட்டம் புதுதில்லியில் ஜனவரி 15, 16 தேதிகளில் நடைபெற்றது. இதில் மத்திய வர்த்தகத்துறை செயலாளர் திரு அனுப் வாதவன் தலைமையிலான இந்தியக் குழுவும், பங்களாதேஷ் அரசின் வர்த்தக அமைச்சக செயலாளர் டாக்டர் முகமது ஜாஃபர் உதின் தலைமையிலான குழுவும் கலந்து கொண்டன.
எல்லைப்புற சந்தைகள், உத்தேச பொருளாதார பங்களிப்பு ஒப்பந்தம் குறித்த கூட்டு ஆய்வு, இந்தியா – பங்களாதேஷ் தலைமை நிர்வாகிகள் அமைப்பு, வர்த்தகத் தகவல் பரிமாற்றம், மண்டலப் போக்குவரத்துத் தொடர்பு நடவடிக்கைகள், தரம் குறித்த ஒத்திசைவு, எல்லைப்புற வர்த்தகத்திற்கான அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு, வணிக விசாக்கள் வழங்குவது போன்ற பரஸ்பர நலன் சார்ந்த பல விஷயங்கள் இந்தக் கூட்டத்தில் இருதரப்பினராலும் விரிவாக விவாதிக்கப்பட்டன.
புதுதில்லியில் ஜனவரி 13, 14 தேதிகளில் நடைபெற்ற மத்திய தொழில் வர்த்தக அமைச்சகம், பங்களாதேஷின் வர்த்தக அமைச்சகம் ஆகியவற்றின் கூடுதல் செயலாளர்கள் நிலையிலான வர்த்தகம் குறித்த கூட்டுப்பணிக்குழுவின் 12-வது கூட்டத்தைத் தொடர்ந்து செயலாளர்கள் நிலையிலான இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இருதரப்பினருக்கும் வசதியான தேதிகளில் வர்த்தகத் துறை செயலாளர்கள் மற்றும் கூட்டுப்பணிக்குழுவின் அடுத்தக் கூட்டங்களை பங்களாதேஷில் நடத்த இக்கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது.
(Release ID: 1599624)
Visitor Counter : 214