பாதுகாப்பு அமைச்சகம்
சோமாலி கடலோரப் பகுதியில் சிக்கிய படகிற்கு உதவி செய்தது ஐ என் எஸ் சுமேதா கப்பல்
Posted On:
08 JAN 2020 10:17AM by PIB Chennai
கடற்கொள்ளை தடுப்புக்காக ஏதன் வளைகுடாவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய கப்பற் படையின் ஐ என் எஸ் சுமேதா 2020 ஜனவரி 06, அன்று ஏ1 – ஹமீது என்ற படகின் ஊழியர்களை மீட்கச் சென்றது. ஐ என் எஸ் சுமேதாவின் மேல்தளத்தில் இருந்து பறந்து சென்ற இந்தியக் கப்பற் படையின் ஹெலிகாப்டர் ஏ1 ஹமீது என்ற பாரம்பரிய மரக்கலன் “தௌ” என்பதைக் கண்டறிந்தது. இந்த மரக்கலன் இடர்ப்பாட்டில் இருப்பதும், இது சோமாலியா கடற்கரையை நோக்கி அடித்து வரப்படுவதும், உறுதி செய்யப்பட்டது.
வழக்கமான சோதனைகளில் ஈடுபட்டு வந்த கப்பலின் தொழில்நுட்பக் குழுவினர், ஏ1 ஹமீது படகுக்கு சென்று உதவி செய்தனர். இந்தப் படகில் 13 இந்தியர்கள் இருந்தது தெரியவந்தது. இந்தப் படகில் உள்ள எந்திரத்தின் பிரதான எந்திரத் தண்டு உடைந்திருப்பதைத் தொழில்நுட்பக் குழுவினர் கண்டனர். ஆனால் இது கடற்பகுதியில் சரி செய்ய முடியாததாக இருந்தது. இதையடுத்து, இந்தப் படகு பத்திரமாக சோமாலி கடற்கரையில் இருந்து தள்ளிக் கொண்டுவரப்பட்டது.
இதற்கிடையே பாதிப்புக்குள்ளான ஏ1 ஹமீது படகின் பழுதினை நீக்க துறைமுகத்திற்குக் கொண்டுசெல்ல அதன் உரிமையாளர் மற்றொரு படகினை அனுப்பி வைத்திருந்தார். அந்தப் பகுதியிலிருந்து ஐ என் எஸ் சுமேதா புறப்படுவதற்கு முன், படகின் ஊழியர்களுக்கு நல்ல தண்ணீரும், மருந்து பொருட்களும் வழங்கப்பட்டன.
----
(Release ID: 1598692)
Visitor Counter : 173