தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

முதலாவது சர்வதேச யோகா தின ஊடக விருதுகளை 30 ஊடக நிறுவனங்களுக்கு தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் வழங்கினார்


சென்னை தூர்தர்ஷன், ஹலோ எஃப் எம் வானொலிக்கு விருது

Posted On: 07 JAN 2020 12:52PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலாவது சர்வதேச யோகா தின ஊடக விருதுகளை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் இன்று (07.01.2020)  வழங்கினார்.

தமிழ் மொழியில் சிறப்பான முறையில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பியதற்காக, சென்னை தூர்தர்ஷன் கேந்திரா மற்றும் தனியார் பண்பலை வானொலியான ஹலோ எஃப்.எம். நிறுவனத்திற்கு அமைச்சர் இந்த விருதை வழங்கினார். 

நிகழ்ச்சியில் பேசிய திரு. பிரகாஷ் ஜவடேகர், சமுதாயம் பலன் அடையும் வகையில், யோகாவை பரப்பியதில் முக்கிய பங்கு வகித்த ஊடக நிறுவனங்களை கவுரவிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது என்றார்.  பல்வேறு ஊடக நிறுவனங்களின் முயற்சிகளையும் பாராட்டிய அமைச்சர், இதுபோன்ற நிகழ்ச்சி நடத்தப்படுவது இதுவே முதன்முறை என்றார். செய்தி, கருத்து வெளியீடு மற்றும் விளம்பரங்களுக்கு அப்பாற்பட்டு, சமுதாயம் அதிக பலன் பெறும் விதமாக மிகச்சிறப்பான முறையில் பணியாற்றிய ஊடக நிறுவனங்களை அங்கீகரிக்க இந்த புதிய நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். 

“சுயராஜ்ஜியம்” குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான ஊடகமாக “கேசரி” என்ற பத்திரிகையை லோக்மான்ய திலகர் தொடங்கியதையும் திரு பிரகாஷ் ஜவடேகர் நினைவுகூர்ந்தார்.  தற்போது நல்ல ஆரோக்கியம், கல்வி மற்றும் அடிப்படை வசதிகள் அனைவருக்கும் கிடைக்கச் செய்வது குறித்த “சுராஜ்” பற்றி, ஊடக நிறுவனங்கள் பொதுமக்களிடையே பெருமளவுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக அவர் கூறினார்.  இந்தியாவின் ஜனநாயக முதிர்ச்சிக்கு இதுவொரு உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வரும்முன் காக்கும் ஆரோக்கியத்திற்கு யோகா மாபெரும் திறவுகோலாக உள்ளது என்றும் திரு ஜவடேகர் குறிப்பிட்டார்.  இந்தியர்களின் கலையான யோகா, பிரதமர் திரு நரேந்திர மோடியின் முயற்சிகள் மற்றும் தொலைநோக்கு சிந்தனை காரணமாக உலகளாவிய மரியாதையை பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார்.  சர்வதேச யோகா தினம் கொண்டாட வேண்டும் என்ற இந்தியாவின் பரிந்துரைக்க ஐக்கிய நாடுகள் சபை பெரும் ஆதரவு அளித்ததையும் அவர் நினைவுகூர்ந்தார்.  விருதுபெற்ற நிறுவனங்களையும், அவர்களை தேர்வு செய்த நடுவர் குழு உறுப்பினர்களையும் பாராட்டிய அமைச்சர் அவர்களுக்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.

மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ஸ்ரீபத் யசோ நாயக், இந்திய பத்திரிகை கவுன்சில் தலைவரும், தேர்வுக் குழு தலைவருமான நீதிபதி சி கே பிரசாத், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை செயலாளர் திரு ரவி மிட்டல், கூடுதல் செயலாளர் திரு அதுல் திவாரி, இணைச் செயலாளர் திரு விக்ரம் சஹாய் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

*****************



(Release ID: 1598634) Visitor Counter : 174