குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

சாதிகள் இல்லாத, வகுப்புகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் அறைகூவல்

Posted On: 30 DEC 2019 3:17PM by PIB Chennai

சாதிகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் திரு. எம். வெங்கைய நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார். நாம் இலக்காக கொண்டுள்ள நாட்டின் பண்புகளில், ஒவ்வொருவரும் அவர்களது திறன்கள் முழுவதையும் பயன்படுத்தி, நிறைவான வாழ்க்கை வாழ சமமான வாய்ப்புகளை அளிக்கும் வகையில் அமைய வேண்டும் என்று அவர் கூறினார்.

கேரள மாநிலம், வர்க்கெலா-வில் இன்று சிவகிரி மடத்தின் 87வது சிவகிரி புனித யாத்திரையை குடியரசு துணைத்தலைவர் தொடங்கி வைத்துப் பேசினார்.

அனைத்துவிதமான பாகுபாடுகளையும் குறிப்பாக, சாதியின் பெயரால் நிலவும் பாகுபாடுகளை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சிகளில், அனைத்து குருக்கள், மவுல்விக்கள், ஆயர்கள் மற்றும் இதர சமயத் தலைவர்கள் ஈடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். ஸ்ரீ நாராயண குருவின் முன்மாதிரியைப் பின்பற்றி, சமயத் தலைவர்கள் கிராமங்களில் கூடுதல் நேரத்தை செலவிட்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்கு உழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

“கல்வியின் மூலம் ஞானம், அமைப்புகள் மூலம் பலம், தொழில்கள் மூலம் பொருளாதார சுதந்திரம்” ஆகிய குருவின் மந்திரங்களை மேற்கோள் காட்டிய திரு. நாயுடு, குருவின் போதனைகள் இன்றைக்கும் பொருத்தமுடையவை, குறிப்பாக, சமூக நீதியை மேம்படுத்த நாம் எடுக்கும் முயற்சிகளில் மிகுந்த இயைபு உடையவை என்று கூறினார்.

அனைத்து மதங்களையும் சமமாக மதித்து போற்றியதுடன், உலக அமைதி, நல்லிணக்கம், வளம் ஆகியவற்றை அடைய சமயப் பிணக்குகளையும், வன்முறைகளையும் தவிர்க்க வேண்டும் என்று ஸ்ரீ நாராயண குரு கேட்டுக் கொண்டார் என்று குடியரசு துணைத் தலைவர் சுட்டிக்காட்டினார்.

 மக்கள் மனதில் அத்வைதத்தின் உண்மையான செய்தியை மீண்டும் கொண்டு வந்த  ஸ்ரீ நாராயண குரு, “ஒரே சாதி, ஒரே சமயம், ஒரே கடவுள்” என்ற சக்திவாய்ந்த செயல்முறை வாழ்க்கை தத்துவத்தை உருவாக்கினார் என்றும் திரு. நாயுடு குறிப்பிட்டார்.

எதிர்கால இந்தியா, சாதிகளும், வகுப்புகளுமற்றதாக இருக்க வேண்டும் என்றும், இதன் அடிப்படையில், உள்நோக்கிச் சிந்தித்து, பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்  அவர் வலியுறுத்தினார்.

சாதி அமைப்பை நிராகரிக்கும் உணர்வு, சமுதாய மக்களின் மனத்திலிருந்தும், இதயப்பூர்வமாகவும் ஏற்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், இதற்கான புரட்சி அறிவார்ந்ததாகவும், கருணை நிறைந்ததாகவும், மனிதாபிமானம் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நம்மைப் பிரிக்கும் சக்திகள், நம்மை இணைக்கும் சக்திகளை விட வலுவானதாக இருக்க அனுமதிக்கக்கூடாது என்று மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

வலுவான, ஒருமைப்பாட்டுடன் கூடிய, அமைதியான நல்லிணக்க சமுதாயத்தை உருவாக்கும் நமது முயற்சிகளுக்கு குருவின் ஞானம் தொடர்ந்து வழிகாட்டட்டும் என்று அவர் வேண்டிக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் கேரள ஆளுநர் திரு. ஆரிஃப் முஹமது கான், வெளியுறவுத்துறை இணையமைச்சர் திரு. வி.முரளிதரன், கேரள அமைச்சர் திரு. கனகம்பள்ளி சுரேந்திரன், முன்னாள் முதலமைச்சர் திரு. உமன்சாண்டி மற்றும் பல பிரமுகர்கள் பங்கேற்றனர்.

<><><><><>


(Release ID: 1597984)
Read this release in: English , Urdu , Hindi , Marathi