சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின் ஓராண்டு சாதனைகள் – 2019


மெட்ரிக் படிப்புக்கு முந்தைய கல்வி உதவித் தொகை பெற 80 லட்சம் மாணவர்களுக்கு அனுமதி

1.2 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது

Posted On: 20 DEC 2019 5:30PM by PIB Chennai

2019 ஆம் ஆண்டில் மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வியின் ஆற்றல்மிக்கத் தலைமையின்கீழ், சிறுபான்மையினர் நல அமைச்சகம், சிறுபான்மையினருக்குக் கல்வி சார்ந்த அதிகாரமளிப்பதிலும் குறிப்பாக, முஸ்லீம் இளம் பெண்களுக்குக் கல்வி அளிப்பதிலும், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான திறன் அளிப்பதிலும் கவனம் செலுத்தியுள்ளது.  “கவுரவத்துடன் மேம்பாடு” என்பது சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின் இலக்காக உள்ளது. 

கல்வி சார்ந்த அதிகாரமளித்தல்

இரண்டாவது முறை அமைந்துள்ள மோடி அரசின் முதல் ஆறு மாதங்களில் மெட்ரிக் கல்விக்கு முந்தைய, பிந்தைய, தகுதிவாய்ந்தவர்களுக்கான கல்வி உதவித் தொகை, ஜைன, பார்சி, புத்த, கிறிஸ்தவ, சீக்கிய, முஸ்லீம் என குறிப்பிடப்பட்ட ஆறு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 80 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.  இவர்களில் 60 சதவீதம் பேர் பெண்கள்.

இதுதவிர, இந்த ஆண்டு மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படும் நிலையில், ஆறு சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த, பொருளாதார ரீதியில் பின்தங்கிய 3 லட்சம் மாணவிகளுக்கு சிறுபான்மையினர் நல அமைச்சகம் “பேகம் ஹஸ்ரத் மஹால் மாணவியர் கல்வி உதவித் தொகை” வழங்கியுள்ளது.

மதரஸாக்களை முறைசார் கல்வியுடன் இணைக்கும் திட்டத்தின்கீழ், பல்வேறு மாநிலங்களில் உள்ள மதரஸாக்களைச் சார்ந்த, 750-க்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டு சிறுபான்மையினர் நல அமைச்சகம் பயிற்சி அளித்துள்ளது.  இவர்களில்  அதிக எண்ணிக்கையிலானவர்கள் ஆசிரியைகள்.  இதன்மூலம் நாடுமுழுவதும் உள்ள மதரஸாக்களின் மாணவர்களுக்கு இந்த ஆசிரியர்கள் மைய நீரோட்டக் கல்வியின்  முக்கியத்துவத்தை எடுத்துரைக்க முடியும்.

திறன் மேம்பாடு / வேலைவாய்ப்புகள்

2019-ல் “கரிப் நவாஸ் வேலைவாய்ப்புத் திட்டம்”, “சீகோ அவுர் காமோ”, “நை மன்ஸில்”, “உஸ்தாத்”, “நை ராஷ்னி” போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 25 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 

முதல்நிலை கலைஞர்கள், கைவினைக் கலைஞர்கள், பாரம்பரிய சமையல் நிபுணர்கள் ஆகியோருக்கு சந்தை மற்றும் வேலைவாய்ப்புகள் கிடைக்க அடுத்த ஐந்தாண்டுகளில் நாடுமுழுவதும் 100 இடங்களில் கண்காட்சி நடத்த சிறுபான்மையினர் நல அமைச்சகம் முடிவு செய்துள்ளது.  2 ஆவது முறை அமைந்த மோடி அரசால் முதலாவது கண்காட்சி ஜெய்ப்பூரில் கடந்த ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 1 வரை நடத்தப்பட்டது.  இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் அதிகமான முதல் நிலை கலைஞர்களும், பாரம்பரிய சமையல் நிபுணர்களும்  பங்கேற்றனர். இவர்களில் பெரும்பாலோர் பெண்கள். 

ஹஜ்

2020-க்கான ஹஜ் நடைமுறை முழுவதும் டிஜிட்டல்மயமாக்கப்படுவதில், உலகிலேயே இதில் இந்தியா முதலாவது நாடாகிறது.  இணைய தளத்தின் மூலம் விண்ணப்பம், இ-விசா, ஹஜ் செல்பேசி செயலி உட்பட அனைத்துத் தகவல்களும் டிஜிட்டல் வழி வழங்கப்படும். 

2020 ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயணம் தொடர்பான ஒப்பந்தம் இந்தியா-சவூதி அரேபியா இடையே 2019 டிசம்பர் 1 அன்று ஜெட்டாவில் கையெழுத்தானது.  இதில் மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வியும், சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் டாக்டர் முகமத் சாலேஹ் பின் தாகர் பென்டனும் கையெழுத்திட்டனர். 

2 ஆவது முறை அமைந்த மோடி அரசின் முதல் ஆறு மாதங்களில் மானியம் ஏதும் இல்லாத போதும் சாதனை அளவாக 48 சதவீத பெண்கள் உட்பட 2 லட்சம் இந்திய முஸ்லீம்கள் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டனர்.  மேலும் மற்றொரு சாதனையாக ஆண் துணை இல்லாமல் இந்த ஆண்டு 2,340 முஸ்லீம் பெண்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர். 

வக்ஃப்

மற்றொரு பெரும் சாதனையாக நாடுமுழுவதும் உள்ள வக்ஃப் சொத்துக்கள் முழுவதையும் டிஜிட்டல்மயமாக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.  நாடுமுழுவதும் பதிவு செய்யப்பட்ட 6 லட்சம் வக்ஃப் சொத்துக்கள் உள்ளன.  வக்ஃப் சொத்துக்களை சிறப்பாக நிர்வகித்த 8 முத்தவலிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முதன் முறையாக இத்தகைய விருது வழங்கப்பட்டுள்ளது.

****************



(Release ID: 1597268) Visitor Counter : 421


Read this release in: English , Hindi , Bengali , Kannada