கனரகத் தொழில்கள் அமைச்சகம்

பெருந்தொழில்கள் அமைச்சகத்தின் ஓராண்டு சாதனைகள்-2019


ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டம் 2019 ஏப்ரல் 1 முதல் தொடங்கியது

ஃபேம் –II-ன் கீழ் மூன்றாண்டுகளுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு

ஃபேம் –II-ன் கீழ் 26 மாநிலங்களில் 64 நகரங்களுக்கு 5,595 இ-பேருந்துகள்

Posted On: 20 DEC 2019 6:04PM by PIB Chennai

இந்தியப் பொருளாதாரத்தின் முக்கிய சக்திகளில் ஒன்றாக ஆட்டோ மொபைல் தொழில் உள்ளது.  தற்போது உலகில் உள்ள பெரும்பாலான ஆட்டோ மொபைல் தொழில் துறையினர் இந்தியாவில் உள்ளனர். இரண்டு சக்கர, மூன்று சக்கர வண்டிகள், பயணியர் பேருந்துகள், இலகு ரக வணிக வாகனங்கள், டிரக்குகள், டிராக்டர்கள், கனரக வணிக வாகனங்கள் போன்ற அனைத்து வகையான வாகனங்களும் நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. 

2018-19-ல் ஆட்டோ மொபைல் தொழில் துறையின் மொத்த வருவாய் 118 பில்லியன் அமெரிக்க டாலராக (ரூ.8.2 லட்சம் கோடி) இருந்தது.   இது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 7.1 சதவீதமாகும்.  தொழில் துறை ஜிடிபி 27 சதவீதம், உற்பத்தித்துறை ஜிடிபி 49 சதவீதம்.  அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கொண்டுள்ளதில் இந்தத் துறையும் ஒன்றாகும்.  இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 37 மில்லியன் வேலைவாய்ப்பு உள்ளது.   தற்போது வருடாந்தர (2018-19) வாகனங்கள் விற்பனை அனைத்து வகைகளையும் சேர்த்து 26 மில்லியனாக உள்ளது.  இதனை 2030-க்குள் 3 மடங்குக்கும் அதிகமாக சுமார் 84.5 மில்லியனாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 

தற்போது இந்தியா காற்று மாசு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.  உலகில் மிகவும் மாசுபாடுள்ள 20 நகரங்களில் 14 இந்தியாவில் உள்ளன.  இந்த சவால்களை சந்திக்க அரசின் பல்வேறு துறைகள் உத்திகளை வகுத்துள்ளன.  பிஎஸ்-4 லிருந்து பிஎஸ்-6 க்கு நேரடியாக செல்லுதல், கனரக வர்த்தக வாகனங்களில் எரிபொருள் சிக்கனத்திற்கான வழிகள்  போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. 

தேசிய மின்சாரப் போக்குவரத்து திட்டம் 2020 ஆவணம், மின்சார வாகனங்கள் உற்பத்திக்கான தொலைநோக்கைக் கொண்டுள்ளது.  குறைந்த செலவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கிடைப்பதற்கும்,  தேசிய எரிசக்திப் பாதுகாப்பை விரிவுப்படுத்தும் வகையிலும், உலக அளவில் உற்பத்திக்குத் தலைமை தாங்குவது என்ற இலக்கை எட்ட இந்திய ஆட்டோமொபைல் தொழில்துறையை வலுப்படுத்தும் வகையிலும் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ஃபேம் இந்தியா திட்டத்தின் அனுபவ அடிப்படையில், இரண்டாம் கட்ட திட்டம்  மத்திய அமைச்சரவை ஒப்புதலுடன் 2019 மார்ச் 8 அன்று அறிவிக்கை செய்யப்பட்டது.   இதைத் தொடர்ந்து மூன்றாண்டு காலத்திற்கு ரூ. 10,000 கோடி ஒதுக்கீட்டுடன்  2019 ஏப்ரல் 1 முதல்  இது அமலுக்கு வந்தது.

இதற்கான முன்மொழிவை ஆய்வு செய்த பின், 26 மாநிலங்கள்  மற்றும் யூனியன் பிரதேசங்களின் நகரங்களுக்கு இடையேயும், நகரங்களுக்கு உள்ளேயும் இயக்குவதற்கு 64 நகரங்களில் 5,595 இ-பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்த காலத்தில் இந்தப் பேருந்துகள் சுமார் 4 பில்லியன் கிலோமீட்டர் தூரம் ஓடும்.  இந்த ஒப்பந்தக் காலத்தில் சுமார் 1.2 பில்லியன் லிட்டர் எரிபொருள் சேமிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   இதன் பயனாக 2.6 மில்லியன் டன் கரியமில வாயு வெளியேற்றம் தவிர்க்கப்படும். 

ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாவது கட்டத்தோடு அரசின் பல்வேறு துறைகளும், நாட்டில் மின்சார வாகனப் போக்குவரத்தை மேம்படுத்தப் பணியாற்றி வருகின்றன.  அவற்றில் சில முக்கிய செயல்பாடுகள் வருமாறு;

மின்சார வாகனங்களுக்கு ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மின்சார வாகனம் வாங்குவதற்கான கடன் மீதான வட்டிக்கு ரூ.1.5 லட்சம் வரை கூடுதல் வருமான வரிக் கழிவு அளிக்கப்படுகிறது.

மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் மின்சார விற்பனையை ‘சேவை’ என அனுமதிக்க மின்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.  சார்ஜ் செய்யும்  கட்டமைப்புக்கான  மூலதனத்தை ஈர்ப்பதற்கு இது ஊக்கமளிப்பதாக இருக்கும். 

பேட்டரியால் இயங்கும் வர்த்தக வாகனங்களுக்குப் பர்மிட் பெறுவதில் இலக்கு அளிப்பது தொடர்பான அறிவிக்கையை மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மின்சார வாகனங்களின் பயன்பாட்டிற்குப் பச்சை நிற நம்பர் பிளேட்டுக்கான அறிவிக்கையையும் இது வெளியிடப்பட்டுள்ளது. 

மின்சார வாகனங்களுக்கான பாகங்கள் உற்பத்தியை உள்நாட்டில் அதிகரிக்க சுங்கத் தீர்வையை நிதியமைச்சகம் மாற்றியமைத்துள்ளது.

****************



(Release ID: 1597242) Visitor Counter : 353


Read this release in: English , Hindi , Bengali , Kannada