பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
எரிசக்தி கிடைக்கச் செய்தல், எரிசக்தி திறன் மேம்பாடு, எரிசக்தி நிலைத்தன்மை, எரிசக்தி பாதுகாப்பு ஆகிய முன்னுரிமை துறைகளில் பெட்ரோலியம் இயற்கைவாயு அமைச்சகத்தின் திட்டங்கள்
Posted On:
18 DEC 2019 3:35PM by PIB Chennai
எண்ணெய், இயற்கைவாயு துரப்பணம் மற்றும் உற்பத்தி, எண்ணெய் சுத்திகரிப்பு, எண்ணெய் விநியோகம் மற்றும் விற்பனை, ஏற்றுமதி, இறக்குமதி, பெட்ரோலியம் பொருட்களைச் சிக்கனப்படுத்துதல் ஆகியவற்றை பெட்ரோலியம் மற்றும் இயற்கைஎரிவாயு அமைச்சகம் கவனித்து வருகிறது. எண்ணெய் மற்றும் இயற்கைஎரிவாயு, நமது பொருளாதாரத்தின் முக்கிய இறக்குமதியாக இருப்பதையடுத்து உள்நாட்டு பெட்ரோலியம் ஆதாரங்களை அதிகம் பயன்படுத்துவதற்கான திட்டங்களை அமைச்சகம் எடுத்து வருகிறது. அதன் மூலம் எரிசக்தி கிடைக்கச் செய்தல், எரிசக்தி திறன் மேம்பாடு, எரிசக்தி நிலைத்தன்மை, எரிசக்தி பாதுகாப்பு ஆகிய முன்னுரிமைத் துறைகளில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.
· பிரதமரின் உஜ்வாலா திட்டம் எளிய பிரிவினரின் வீடுகளுக்கு தூய்மையான சமையல் எரிவாயு வழங்குவதை நோக்கமாகக் கொண்டது இத்திட்டம். ஐந்து கோடி இணைப்புகள் என்ற இலக்குடன் 2016 மே மாதம் தொடங்கப்பட்டது. இந்த இலக்கு பின்னர் 2020 மார்ச்சில் 8 கோடி இணைப்புகள் என உயர்த்தப்பட்டது. உயர்த்தப்பட்ட இலக்கு உரிய காலத்திற்கு 7 மாதங்கள் முன்னதாகவே அதாவது 2019 செப்டம்பர் 7-ஆம் தேதி எட்டப்பட்டுள்ளது.
· பாகல் : பாகல் திட்டம் 2014 நவம்பர் 15ஆம் தேதி நாட்டின் 54 மாவட்டங்களில் தொடங்கியது. பின்னர் 1.1.2015 முதல் நாடு முழுமைக்கும் விரிவாக்கப்பட்டது. பாகல் மூலம் சமையல் எரிவாயு நுகர்வோர் வங்கி கணக்குகளில் எரிவாயு மானியம் நேரிடையாக செலுத்தப்படுகிறது. 2019 டிசம்பர் 13 நிலவரப்படி 25.84 கோடி நுகர்வோர் பாகல் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு ரூ.1,22,666.82 கோடி ரூபாய் மானியத்தொகை நேரிடையாக வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது.
· துரப்பணப் பணியில் சீர்திருத்தம் மற்றும் உரிமங்கள் கொள்கை : எண்ணெய் இயற்கைஎரிவாயு சார்ந்த உள்நாட்டு துரப்பணம் மற்றும் உற்பத்தியைப் பெருக்குவதற்காக 2019 பிப்ரவரி 28ஆம் தேதி துரப்பணம் மற்றும் உரிமங்கள் கொள்கைச் சீர்திருத்தங்களை அரசு அறிவிக்கையாக வெளியிட்டது. இதன்படி, கீழ்கண்டவை உட்பட பல சீர்திருத்தக் கொள்கைகள் அமல்படுத்தப்படும்.
- வருவாய் என்பதிலிருந்து உற்பத்தியை அதிகப்படுத்துதல் என்பதற்கு கவனம்
- 2ஆம் மற்றும் 3ஆம் பிரிவு படுகைத் திட்டங்களைப் பொறுத்தவரை அரசுடன் வருவாய் பகிர்வு இல்லை.
- விரைவான மேம்பாட்டுக்கென குறுகிய துரப்பண காலம்
- இயற்கை வாயுவுக்கு, சந்தைப்படுத்துதல் மற்றும் விலை நிர்ணய சுதந்திரம்
- தேசிய எண்ணெய் நிறுவனங்கள் செயல்படுத்தும் 66 சிறிய மற்றும் குறுகிய உற்பத்தி வயல்களுக்கு வெளி ஏல முறையைக் கொண்டு வருதல்
- திறந்த பரப்பு உரிமக்கொள்கை ஏலச்சுற்றுகள் : 2019ஆம் ஆண்டில் 59,000 சதுர கிலோ மீட்டர் பரப்பில் அமைந்துள்ள 32 பகுதிகளுக்கு இத்திட்டத்தின்கீழ், 2ஆம் மற்றும் 3ஆம் சுற்று ஏலம் விடப்பட்டது. 4ஆம் சுற்று ஏலத்தில் 18,500 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள 7 பிரிவுகள் ஏலம் விடப்பட்டன.
- பெட்ரோலியம் துரப்பண உரிமங்கள் : கரையோரத்தில் உள்ள படுகைகளுக்கு மத்திய அரசு பெட்ரோலியம் துரப்பண உரிமங்களை ஏற்கெனவே வழங்கியுள்ளது. இதேபோல் நிலப்பரப்பு படுகைகளுக்கு ஹைட்ரோ கார்பன் துரப்பணம் மற்றும் உரிமக்கொள்கையின் கீழ் உரிமங்களை வழங்குமாறு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
- தேசியத் தரவு வைப்பகம் : தேசியத் தரவு வைப்பகம் 2017 ஜூன் 28ஆம் தேதி நொய்டாவில் தொடங்கப்பட்டது. 2019 நவம்பர் 30ஆம் தேதி வரை 2.3 மில்லியன் கிலோ மீட்டருக்கான 2 டி நில அதிர்வு தரவுகள், 0.78 மில்லியன் சதுர கிலோ மீட்டர் 3 டி நில அதிர்வு தரவுகள் மற்றும் 17,588 துரப்பணக் கிணறுகள் தொடர்பான தரவுகள் சேமிக்கப்பட்டுள்ளன.
- தேசியத் துரப்பண உரிமக் கொள்கையின் கீழ் 2019 அக்டோபர் 31ஆம் தேதிவரை 42 கண்டுபிடிப்புகள் பணமாக்கப்பட்டுள்ளன
- எண்ணெய் சுத்திகரிப்பு : நாட்டில் மொத்தமுள்ள 23 எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் 18 பொதுத்துறையிலும், 3 தனியார்துறையிலும், 2 கூட்டுத்துறையிலும் செயல்படுகின்றன. இவற்றின் மொத்த சுத்திகரிப்பு திறன் 249.366 எம்எம்டிபிஏ ஆகும். உள்நாட்டு நுகர்வைப் பொறுத்தவரை எண்ணெய் சுத்திகரிப்பு திறனில் நாடு தன்னிறைவை அடைந்துள்ளது. போதுமான அளவு பெட்ரோலியம் உற்பத்திப் பொருட்கள் ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.
- வாகன எரிபொருள் தொலைநோக்கு மற்றும் கொள்கை :
- இதன்படி வாகனஎரிபொருளில் பிஎஸ் –IV தரத்திலிருந்து நேரடியாக பிஎஸ்-VI தரத்தை 1.4.2020 முதல் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
- தில்லியின் கடுமையான காற்றுமாசு நிலையைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்தப் பகுதியில் பிஎஸ்-VI ரக எரிபொருளை 1.4.2018 முதல் வழங்கத் தொடங்கியுள்ளது.
- ராஜஸ்தான், உத்தரப்பிரதேஷம், ஹரியானா, தில்லி பகுதிகளில் இருபது மாவட்டங்களில் அரசு பிஎஸ்-VI ரக எரிபொருளை வழங்கத் தொடங்கியுள்ளது.
- சில்லரை விற்பனைத் துறையில் தனியார் பங்கேற்புக்கான நெறிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. போக்குவரத்து எரிபொருட்களான மோட்டார் ஸ்பிரிட், உயர்வேக டீசல் ஆகியவற்றை சந்தைப்படுத்துவதற்கான நெறிமுறைகளுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அரசு அறிவிக்கை இந்திய அரசிதழில் 8.11.2019 அன்று வெளியிடப்பட்டது.
- தேசிய எரிவாயு கட்டமைப்பு : கூடுதலாக 15,000 கிலோ மீட்டர் எரிவாயு குழாய்பாதை மேம்பாட்டு பணிகளை அரசு அடையாளம் கண்டு தேசிய எரிவாயு கட்டமைப்பை நிறைவு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, a) ஜகதீஷ்பூர்-ஹால்டியா, பொக்காரோ-தாம்ரா குழாய்பாதை திட்டங்கள் 2020 டிசம்பர் முடிவடையவுள்ளன. b) பரூனி -குவஹாத்தி குழாய்பாதை: 729 கிலோ மீட்டர் தூரத்திற்கான இத்திட்டம் 2021 டிசம்பரில் நிறைவு பெறும். c) வடகிழக்கு எரிவாயு கட்டமைப்பு : 5 அரசுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இணைந்து ‘இந்திரதனுஷ் வாயுக்கட்டமைப்பு’ என்ற பெயரில் செயல்படுத்தும் இந்தக் குழாய்பாதை திட்டம் பெட்ரோலியம் இயற்கைவாயு அமைச்சகத்தின் வடகிழக்கு பகுதிக்கான தொலைநோக்கு ஆவணத்தின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அசாம், சிக்கிம், மிசோரம், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய அனைத்து வடகிழக்கு மாகாணங்களுக்கான இத்திட்டம் ரூ.9265 கோடி செலவில் பல கட்டங்களாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. d) கொச்சி – கொட்டநாடு – மங்களூரு-பெங்களூரு குழாய்பாதை திட்டம் மற்றும் எண்ணூர்-திருவள்ளூர்-பெங்களுரு-புதுச்சேரி-நாகப்பட்டினம்-மதுரை- தூத்துக்குடி குழாய்பாதை திட்டம் ஆகியன திட்டமிட்டப்படி முன்னேறி வருகின்றன. இந்த இரண்டு திட்டங்களையும் தற்போதுள்ள வாயு கட்டமைப்புடன் இணைத்து தென் மாநில நகரங்களுக்கு இயற்கை எரிவாயு கிடைக்கச் செய்வதே இதன் நோக்கமாகும்.
- எல்என்ஜி/சிஎன்ஜி : 2019 அக்டோபர் வரை 55.17 லட்சம் வீடுகள் சமையலுக்கென PNG வாயுவைப் பயன்படுத்துகின்றன. இதனை 2024ஆம் ஆண்டில் கூடுதலாக ஒரு கோடி வீடுகளுக்கு விரிவுப்படுத்தும் திட்டங்களை எண்ணெய் நிறுவனங்கள் இறுதி செய்துள்ளன.
- நகர எரிவாயு விநியோக ஏலம் : பெட்ரோலியம் மற்றும் இயற்கைவாயு கட்டுப்பாட்டு வாரியம் நகர்ப்புற வாயு விநியோக கட்டமைப்புக்கு அனுமதி வழங்கும் அமைப்பாகும். இந்த அமைப்பின் 9வது, 10வது நகர எரிவாயு விநியோக ஏலச்சுற்றுகளின்போது முறையே 86 மற்றும் 50 பகுதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏலத்தின் 10வது சுற்று நிறைவடையும்போது 27 மாநிலங்களைச் சேர்ந்த 407 மாவட்டங்களில் 229 எரிவாயு அனுமதிகள் கிடைத்துவிடும்.
- தூய்மை இந்தியா திட்டம் : தூய்மை இந்தியா செயல்திட்டப்பிரிவில் பெட்ரோலியம், இயற்கைஎரிவாயு அமைச்சகத்திற்கு தூய்மை இந்தியா திட்ட விருது வழங்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தியடிகளின் 150வது பிறந்ததினத்தை முன்னிட்டு 2019 அக்டோபர் 11 முதல் 27 வரை ஒற்றைப் பயன்பாடு பிளாஸ்டிக்-கை நிறுத்துவோம் என்ற மக்கள் இயக்கத்தை அமைச்சகம் மேற்கொண்டது.
- சர்வதேச ஒத்துழைப்பு/ஒப்பந்தங்கள்/உடன்பாடுகள் : பெட்ரோடெக் 2019 என்ற மாபெரும் ஹைட்ரோ கார்பன் மாநாடு புதுதில்லியில் 2019 பிப்ரவரியில் நடைபெற்றது. 2019 செப்டம்பர் 22ல் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் அமெரிக்க எரிசக்தி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரிகள் வட்டமேஜை மாநாட்டை பிரதமர் நடத்தினார். தெற்காசியாவின் முதலாவது எல்லை தாண்டிய எரிவாயு குழாயை பிரதமரும் நேபாள பிரதமரும் கூட்டாக 10.9.2019 அன்று தொடங்கி வைத்தனர். இவை உள்ளிட்ட 8 கூட்டு திட்டங்கள் / ஒப்பந்தங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
- எத்தனால் கலந்த பெட்ரோல் : இந்தத் திட்டத்தின்கீழ் 2019-20ஆம் ஆண்டுக்கான பல்வேறு வகை எத்தனால் கொள்முதல் விலைகளை அரசு நிர்ணயித்துள்ளது. எத்தனால் பொருட்களின் உற்பத்தி, கொண்டு செல்லுதல், இருப்பு வைத்தல் ஆகியவற்றின் மீதான கட்டுப்பாட்டை மத்திய அரசுக்கு வழங்கும் சட்டத்திருத்தங்கள் 13 மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளன.
- பயோ டீசல் : பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து பயோ டீசல் உற்பத்தி செய்வதற்கான ஆர்வம் தெரிவிக்கும் விருப்பத்தை 10.8.2019 அன்று எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. பயோ டீசல் விற்பனை நெறிமுறைகள் சார்ந்த பொதுவான அரசிதழ் அறிவிக்கையை அமைச்சகம் 30.4.2019 அன்று வெளியிட்டது.
- 2ம் தலைமுறை எத்தனால் : எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் 2ம் தலைமுறை உயிரி எண்ணெய் சுத்திகரிப்புக்கான 12 ஆலைகளை ரூ.14,000 கோடியில் அமைத்து வருகின்றன. இவற்றில் 5 தொடர்பான கட்டுமானம் மிக முன்னேறிய நிலையில் உள்ளது. 2ம் தலைமுறை எத்தனாலை ஊக்குவிக்க பிரதமரின் ஜி-வான் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, உயிரி எத்தனால் திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும். இதுதொடர்பான செயல் விளக்க ஆலை பானிபட்டில் அமைக்கப்படவுள்ளது.
(Release ID: 1596949)
Visitor Counter : 358