பிரதமர் அலுவலகம்

அரசியல் சாசன தின 70 ஆவது ஆண்டுவிழாவையொட்டி, நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் நிகழ்த்திய உரையின் சுருக்கம்

Posted On: 26 NOV 2019 5:00PM by PIB Chennai

மாண்புமிகு குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், மக்களவைத் தலைவர், திரு பிரகலாத் மற்றும் மதிப்புக்குரிய பங்கேற்பாளர்களே,

 

குறிப்பிட்ட சில நிகழ்வுகளும், சில தினங்களும், கடந்த காலத்துடனான நமது உறவுகளை வலுப்படுத்துகின்றன.  சிறப்பான எதிர்காலத்திற்காக பணியாற்றுவதற்கு நம்மை அவை ஊக்கப்படுத்துகின்றன.  நவம்பர் 26 ஆம் தேதியான இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்.  70 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில்தான் நாம் நமது மதிப்புமிக்க அரசியல் சாசனத்தை முறைப்படி ஏற்றுக்கொண்டோம்.

 

ஆனால், 2008 ஆம் ஆண்டு இதேநாளில்தான் மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர் என்பதை நினைவுகூர்ந்த பிரதமர், அந்த கொடிய நாளில் உயிரிழந்தோருக்கு அஞ்சலியையும் செலுத்தினார். 

 

உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பின்பற்றப்படும் உயரிய தத்துவத்தை அழிக்க, மும்பையில் தீவிரவாதிகள் முயற்சித்த நவம்பர் 26 ஆம் தேதி மிகுந்த மனவேதனையை ஏற்படுத்திய தினமும் இன்று தான்.  உயிரிழந்த ஆன்மாக்களுக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்.

 

 

அரசியல் சாசன நிர்ணய சபையில் நடைபெற்ற பலகட்ட விவாதங்கள் மற்றும் ஆலோசனைகளின் விளைவாக கிடைத்ததுதான், நமது அரசியல் சாசனம்.  நாட்டிற்கு ஒரு அரசியல் சாசனத்தை வகுப்பதற்காக, தங்களது அரிய முயற்சிகளை வழங்கிய அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

 

70 ஆண்டுகளுக்கு முன்பு, இதே மைய மண்டபத்தில் அரசியல் சாசனத்தின் ஒவ்வொரு பிரிவும் விரிவாக விவாதிக்கப்பட்டு, நமது எதிர்பார்ப்புகள், சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.  டாக்டர் ராஜேந்திர பிரசாத், டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர், சர்தார் வல்லபாய் பட்டேல், பண்டித நேரு, ஆச்சாரியா கிருபளானி,  மவுலானா அபுல் கலாம் ஆசாத் மற்றும் பல்வேறு மூத்த தலைவர்கள் விவாதித்து, நமக்கு இந்த பாரம்பரியத்தை அளித்துள்ளனர்.  இந்த அரசியல் சாசனத்தை வகுப்பதற்கு காரணமான அனைவருக்கும் எனது பாராட்டுக்களை உரித்தாக்குகிறேன்.

 

அரசியல் சாசன நிர்ணய சபையில் உறுப்பினராக இருந்தவர்களின் கனவுகள், எழுத்து வடிவமாகி, நமது அரசியல் சாசனத்தில் நன்மதிப்பை பெற்றுள்ளன.

 

1949 நவம்பர் 25 ஆம் தேதி நடைபெற்ற இறுதிக்கட்ட விவாதத்தில் பேசிய பாபா சாஹேப் பீம் ராவ் அம்பேத்கர், கடந்த காலத்தில், நாம் செய்த தவறுகளால், நமது சுதந்திரம் மற்றும் நாட்டின் குடியாட்சித் தன்மையை இழந்தோம் என்பதை மக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இப்போதாவது இந்த நாடு சுதந்திரத்தையும் அதன் ஜனநாயகத் தன்மையையும் நிலைநிறுத்த வேண்டும் என்று நாட்டு மக்களை அம்பேத்கர் எச்சரித்தார்.

 

பாபா சாஹேப் அம்பேத்கர் தற்போது உயிரோடு இருந்திருந்தால், அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கக்கூடும்.  இந்தியா தனது நற்பண்புகளை  நிலைநிறுத்தியிருப்பதோடு மட்டுமின்றி, ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தையும் வலிமைப்படுத்தியிருக்கிறது.

 

எனவேதான், அரசியல் சாசனத்தின் சிறகுகளாக கருதப்படும் சட்டமன்றம், நிர்வாகம் மற்றும் நீதித்துறைக்கு நான் தலைவணங்குகிறேன், 

 

இந்த அமைப்புகள்தான் அரசியல் சாசனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நற்பண்புகள் மற்றும் கருத்துக்களை பேணிக்காக்க உதவுகின்றன. அரசியல் சாசனத்தை நிலைநிறுத்த பாடுபடும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் நான் தலைவணங்குகிறேன்.

 

இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கைக் கொண்டிருப்பதோடு, அரசியல் சாசனத்தை ஒரு புதிய நூலாகவும், கலங்கரை விளக்கமாகவும் கருதும் 130 கோடி இந்தியர்களுக்கு நான் தலைவணங்குகிறேன். 

 

கடந்த 70 ஆண்டுகளில் மகிழ்ச்சி, உயர்வான எண்ணம் மற்றும் மனநிறைவை அரசியல் சாசனம் ஏற்படுத்தியுள்ளது.

 

அரசியல் சாசனத்தின் சாராம்சம் மற்றும் நற்பண்புகள் மீதான தீர்க்கமான எண்ணம் காரணமாக இந்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.  இதற்கு எதிரான  எந்தவொரு முயற்சியையும் நாட்டு மக்கள் நிராகரித்துள்ளனர்.

 

ஒரே பாரதம் – உன்னத பாரதம்  என்ற இலக்கை நோக்கி நாம் செல்வதற்கு அரசியல் சாசனத்தில் உள்ள நற்பண்புகள் மீது வைத்துள்ள உயர்வான எண்ணமே காரணமாகும்.

 

மிகப்பெரிய, பன்முகத்தன்மை கொண்ட நமது நாடு, தனது விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் மற்றும் முன்னேற்றத்திற்கு அரசியல் சாசனமே காரணம் என்ற முடிவுக்கு நாம் வந்துள்ளோம்.

 

நமது வாழ்க்கை, நமது சமுதாயம், நமது பாரம்பரியம், நமது பண்புகள் மற்றும் நாம் எதிர்கொள்ளும் அனைத்து சவால்களுக்கும் தீர்வு காணும் திரட்டாக கருதப்படும் அரசியல் சாசனம் நமக்கு மிகவும் புனிதமான நூலாகும்.

 

கண்ணியம், ஒற்றுமை என்ற இரட்டை தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு அரசியல் சட்டம் வகுக்கப்பட்டுள்ளது.  அரசியல் சாசனத்தின் இரண்டு தாரக மந்திரங்கள் ‘இந்தியர்களுக்கு கண்ணியம்’, இந்தியாவின் ஒற்றுமை’ என்பதே ஆகும். இந்தியாவின் ஒற்றுமையை பாதுகாக்கும் அதேவேளையில் நமது குடிமக்களின் கண்ணியத்திற்கு அரசியல் சாசனம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.

 

உலக ஜனநாயகத்தின் மிகச்சிறந்த வெளிப்பாடு நமது அரசியல் சாசனம் ஆகும். நமது உரிமைகளை மட்டுமின்றி, நமது கடமைகளையும் அறிந்து கொள்ள இது உதவுகிறது.

 

குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகளை இந்திய அரசியல் சாசனம் சுட்டிக்காட்டியுள்ளது.  இதுவே நமது அரசியல் சாசனத்தின் சிறப்பு அம்சம்.  உரிமைகளுக்கும், கடமைகளுக்கும் உள்ள உறவு மற்றும் நடுநிலைமையை தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் மிக நன்றாகவே அறிந்திருந்தார்.

 

இந்த உணர்வை வளர்த்து, அரசியல் சாசனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கடமைகளை நாட்டுமக்கள் பின்பற்ற வேண்டும்.

 

நமது அரசியல் சாசனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கடமைகளை நாம் எந்த அளவுக்கு நிறைவேற்றி இருக்கிறோம் என்பதைப் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

 

சேவைக்கும், கடமைக்கும் இடையேயான வித்தியாசத்தை நாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.  சேவை என்பது நாமாக முன்வந்து பணியாற்றுவது, அதாவது தெருவில் செல்வோருக்கு  உதவுவதாகும்.  ஆனால், வாகனம் ஓட்டும்போது போக்குவரத்து விதிமுறைகளை முழுமையாக பின்பற்றுவது உங்களது கடமைகளை நிறைவேற்றுவதாகும். 

 

மக்களுடனான கலந்துரையாடல்களின்போது, கடமையை வலியுறுத்த நாம் முயற்சி மேற்கொள்ள வேண்டும். 

 

இந்தியாவின் கவுரவமான குடிமக்கள் என்ற முறையில், நமது செயல்பாடுகள் நாட்டை எந்த அளவுக்கு மேலும் வலுப்படுத்த உதவுகிறது என்பது பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.

 

‘இந்திய மக்களாகிய நாம்’ என்ற வார்த்தைகளுடன் நமது அரசியல் சாசனம் தொடங்குகிறது.   மக்களாகிய நாம்தான் அரசியல் சாசனத்தின் வலிமை, உத்வேகம் மற்றும் நோக்கம் என்பதை நாம் உணர வேண்டும்.

 

நன்றி!

 

****************


(Release ID: 1596564) Visitor Counter : 193