வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

தில்லி மெட்ரோவின் நான்காம் கட்டத்தின்கீழ் வரும் மூன்று முன்னுரிமை வழித்தடங்களுக்கான மாற்றியமைக்கப்பட்ட நிதியுதவித் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 11 DEC 2019 6:23PM by PIB Chennai

தில்லி மெட்ரோவின் நான்காம் கட்டத்தின்கீழ் வரும் மூன்று முன்னுரிமை வழித்தடங்களுக்கான மாற்றியமைக்கப்பட்ட நிதியுதவித் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஏரோசிட்டி முதல் துக்ளகாபாத், ஆர் கே ஆஷ்ரம் முதல் ஜனக்புரி (மேற்கு), முகுந்த்பூர் முதல் மவ்ஜ்பூர் ஆகிய இந்த மூன்று வழித்தடங்களுக்கானது இந்தத்திட்டம். இந்த வழித்தடங்கள் திட்டத்தில் நிலத்துக்கான விலையை மத்திய அரசு, தில்லி தேசிய தலைநகரப்பகுதி அரசு ஆகியவை 50:50 என்ற விகிதாச்சாரத்தில் பகிர்ந்துகொள்ளும். தில்லிக்கு மட்டுமே பொருந்தக்கூடிய 2017 திருத்தப்பட்ட மெட்ரோ ரயில் கொள்கையின்படியும், உச்சநீதிமன்றம் 6.9.2019 அன்று அளித்த தீர்ப்புக்கு ஏற்பவும், மாற்றியமைக்கப்பட்ட திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத்திட்டத்தின் மொத்தச் செலவினமான ரூ.24,948.65 கோடியில் எவ்வித மாற்றமும் இல்லை. இதில் மத்திய அரசின் பங்களிப்பு தற்போதுள்ள ரூ.4,154.20 கோடியிலிருந்து ரூ.4,643.638 கோடியாக, அதாவது ரூ.489.438 கோடி அதிகரித்துள்ளது. இருதரப்பு மற்றும் பலதரப்பு அமைப்புகளிலிருந்து பெறப்பட்ட வெளிக்கடன் தொகையில் தில்லி மெட்ரோ ரயில் கழகம் திரும்பச் செலுத்த வேண்டிய தொகை தற்போதுள்ள ரூ.11,462.60 கோடியிலிருந்து ரூ.12,930.914 கோடியாக அதாவது ரூ.1,468.314 கோடி அதிகரித்து அமைகிறது.

 

 

பின்னணி:

தில்லி மெட்ரோ நான்காவது கட்டத்தில் மூன்று முன்னுரிமை பாதைகளுக்கான திட்டத்துக்கு மத்திய அரசு 2019 மார்ச் மாதம் ஒப்புதல் அளித்தது. இதற்கான திட்ட நிறைவுச் செலவு ரூ.24,948.65 கோடி. இதற்கான நிதியுதவித் திட்டம் 2017 மெட்ரோ ரயில் கொள்கை பிரிவுகளின்படி உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய வீட்டு வசதி நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் திட்டத்துக்கான செலவினப்பகிர்வினை ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி, மாற்றி அமைத்தால் அன்றி, இந்த வழிப்பாதைகளில் பணிகளை தொடங்க வேண்டாம் என்று தில்லி மெட்ரோ ரயில் கழகத்துக்கு தில்லி தேசிய தலைநகரப்பகுதி அரசு உத்தரவிட்டிருந்தது.

     உச்சநீதிமன்றத்தின் தலையீட்டை அடுத்து திட்டத்துக்கான பணி 2019 ஜுலையில் தொடங்கியது. திட்டச் செயல்பாடு இழப்புகள், வெளிக்கடன் திரும்பச் செலுத்துகை மற்றும் செலாவணி மதிப்பு மாறுதல் சார்ந்த கட்டணங்களை திட்டத்துக்கான சிறப்பு நிதிய அமைப்பினால் (இந்த விஷயத்தில் தில்லி மெட்ரோ ரயில் கழகம்) ஏற்க இயலாத நிலையில் அரசுதான் ஏற்க வேண்டும் என்ற 2017 மெட்ரோ ரயில் கொள்கைப் பிரிவை ஏற்றுக்கொண்டு, உச்சநீதிமன்றம் 6.9.2019 அன்று பிறப்பித்த உத்தரவின்படி பணிகள் தொடங்கின. இந்தக் கொள்கையிலிருந்து விதி விலக்காக தில்லிக்கு மட்டும் என நில கட்டணத்தை மத்திய அரசும், தில்லி தலைநகரப்பகுதி அரசும் சம அளவில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு ஏற்ப, 2017 மெட்ரோ ரயில் கொள்கையில் சம்பந்தப்பட்ட பகுதி திருத்தியமைக்கப்பட்டது.

                                                                                               

****


(வெளியீட்டு அடையாள எண்: 1596147) வருகையாளர் எண்ணிக்கை : 193
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu , Kannada