உள்துறை அமைச்சகம்

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அரசின் நடவடிக்கைகள்

Posted On: 10 DEC 2019 1:25PM by PIB Chennai

பெண்களின் பாதுகாப்பு அரசின் முன்னுரிமை என்றும், பெண்களின் பாதுகாப்புக்காக நாடுமுழுவதும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் மக்களவையில் இன்று பெண்களுக்கு எதிரான குற்றம் குறித்த கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு. ஜி. கிஷன் ரெட்டி தெரிவித்தார். மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விவரங்கள்:

  • பாலியல் குற்றங்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுப்பதற்காக குற்றவியல் (திருத்த) சட்டம் 2013 இயற்றப்பட்டது.  மேலும், 12 வயதுக்குட்பட்ட சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால், மரண தண்டனை விதிப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளுக்காக குற்றவியல் (திருத்த) சட்டம் 2018 நிறைவேற்றப்பட்டது.  இரண்டு மாதங்களில் காவல்துறையின் விசாரணை முடித்து, இரண்டு மாதங்களில் நீதிமன்ற விசாரணையையும் முடிப்பதை இந்தச் சட்டம் கட்டாயமாக்குகிறது.
  • நாடுமுழுவதும் பயன்படுத்தக்கூடிய சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எண் (112) அடிப்படையில், அவசரகாலத்தில் பாதிப்புக்குள்ளானோர் இருக்கும் இடத்தைக் கனிணி உதவியுடன் கண்டறிவதற்கான வசதி உருவாக்கப்பட்டது.
  • சட்ட அமலாக்க முகமைகள் நாடுமுழுவதும் உள்ள பாலியல் குற்றவாளிகளைக் கண்டறியவும் விசாரணை நடத்தவும் ஏதுவாக மத்திய உள்துறை அமைச்சகம் செப்டம்பர் 20, 2018 அன்று ‘பாலியல் குற்றவாளிகளின் தேசிய தகவல் தொகுப்பை’ உருவாக்கியது.
  • மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உதவும் வகையில், குற்றவியல் (திருத்த) சட்டம் 2018-ன்படி, பாலியல் குற்ற வழக்குகளில் காலவரம்புக்குள் பாலியல் குற்றவாளிகளைக் கண்டறிந்து, விசாரணை செய்வதற்கான இணையதளப் பகுப்பாய்வு கருவியை  உள்துறை அமைச்சகம் பிப்ரவரி 19, 2019 அன்று தொடங்கி வைத்தது.
  • வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்குத் தற்காலிகப் புகலிடம் வழங்கவும், மருத்துவ உதவி, காவல்துறை உதவி, சட்ட ஆலோசனை, நீதிமன்ற வழக்கு நடத்துதல் போன்ற சேவைகளை ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து அளிப்பதற்கான ஓ.எஸ்.சி திட்டம் ஏப்ரல் 1, 2015-லிருந்து அமல்படுத்தப்படுகிறது. கிடைத்துள்ள தகவல்படி, 728 ஓ.எஸ்.சி-க்கள் அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளன. இவற்றில், 595 நாடுமுழுவதும் செயல்படுகின்றன.
  • இவை தவிர, பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கையாள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உதவும் வகையில், ஆலோசனைக் குறிப்புகளும், அவ்வப்போது உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்படுகின்றன. அதுபற்றிய விவரங்கள் www.mha.gov.in என்ற இணையதளத்தில் உள்ளன.

 

******



(Release ID: 1595732) Visitor Counter : 683