குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

சமூகத் தீமைகளை முடிவுக்குக் கொண்டுவர இளைஞர்கள் பாடுபட வேண்டுமென்று குடியரசுத் துணைத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்

பெண்களை, குருவை, மூத்தோரை, இயற்கையை மதிப்பது போன்ற இந்திய மாண்புகளை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்: குடியரசுத் துணைத் தலைவர்

இடுகை இடப்பட்ட நாள்: 08 DEC 2019 4:39PM by PIB Chennai

பாலினம், சாதி அடிப்படையில் பாகுபாடு செய்வது போன்ற சமூக தீமைகளையும், பெண்கள் அவமதிக்கப்படுவதையும் முடிவுக்குக் கொண்டு வந்து சமத்துவத்தை நோக்கி தேசத்தை வழி நடத்த இளைஞர்கள் உறுதி ஏற்க வேண்டுமென்று குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம்.வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.

சமூகத்தில் மாண்புகள் அரிக்கப்படுவது, குறிப்பாக அண்மையில் நடந்த பெண்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்த குடியரசுத் துணைத் தலைவர், வெறும் மசோதாக்களும், சட்டங்களும் மட்டுமே பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கு போதுமானவை அல்ல என்றார். இத்தகைய மனப்போக்கையும், சம்பவங்களையும் கட்டுப்படுத்த மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

புனேயில் இன்று சிம்பியோசிஸ் சர்வதேச (நிகர்நிலை பல்கலைக்கழக) 16-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய திரு.நாயுடு, பெண்கள், குரு, முதியோருக்கு மதிப்பளிப்பது போன்ற இந்தியக் கலாச்சாரம் முன்மொழிந்தவற்றைக் கல்வி நிறுவனங்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் குழந்தைகளுக்கு கற்றுத் தர வலியுறுத்தினார்.

இந்தியாவின் பன்னெடுங்கால நீதிநெறிகளை, மாண்புகளை மீட்கவும், புத்தாக்கம் செய்யவும் நாட்டில் கலாச்சார மறுமலர்ச்சி ஏற்பட வேண்டுமென்று திரு.நாயுடு கூறினார். ‘நமது வேர்களைத் தேடி செல்ல வேண்டிய தருணம்’ இது என்றும் அவர் கூறினார்.

16—வது பட்டமளிப்பு விழாவில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற பிரபல விஞ்ஞானி டாக்டர் டெஸ்சி தாமஸ், பிரபலக் கவிஞர், பாடலாசிரியர், திரைப்பட எழுத்தாளர் திரு.ஜாவேத் அக்தர் ஆகியோருக்குக் குடியரசுத் துணைத் தலைவர் பாராட்டுத் தெரிவித்தார்.

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவருக்கு மதிப்பளிப்பதை வெளிப்படுத்தும் விதமாக பூடான், மலாவி, சூடான், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் நாட்டின் கொடியை வழங்கினர். பல்கலைக்கழகத்தின் இயக்குனர்கள், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள் நாடு முழுவதும் உள்ள சிம்பியோசிஸ் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள், 85 நாடுகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் வெளிநாட்டு மாணவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1595483) வருகையாளர் எண்ணிக்கை : 226
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali