பிரதமர் அலுவலகம்
ஒடிசா மாநிலம் சம்பல்பூர் பல்கலைக்கழக 30வது பட்டமளிப்பு விழா
பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பிரமோத்குமார் மிஸ்ரா உரை
Posted On:
29 NOV 2019 5:56PM by PIB Chennai
ஒடிசா மாநில ஆளுநர் மேதகு பேராசிரியர் கணேஷ் லால் அவர்களே; துணை வேந்தர் பேராசிரியர் தீபக் பெஹரா அவர்களே, செனட், சிண்டிகேட் மற்றும் கல்விக் கவுன்சில் உறுப்பினர்களே; கல்வியாளர்கள் மற்றும் அலுவலர்களே; மதிப்புக்குரிய விருந்தினர்களே, பெற்றோர்களே, எனதருமை மாணவர்களே,
சம்பல்பூர் பல்கலைக்கழகத்தின் 30வது பட்டமளிப்பு விழாவுக்கு என்னை அழைத்தமைக்காக பேராசிரியர் பெஹரா மற்றும் அவருடைய குழுவினருக்கு முதலில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பசுமையான மரங்கள் நிறைந்த, அமைதியான சூழலில் அமைந்துள்ள ஜோதி விஹாரில் உங்கள் மத்தியில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நாட்டின் வரலாறு மற்றும் பாரம்பர்யத்துடன் உங்கள் பல்கலைக்கழகம் பிணைந்துள்ளது. இந்தப் பகுதியில் வழிபாட்டுக்குரிய கடவுள் மா சாமளேஸ்வரி கோவில் இங்கிருந்து அதிக தொலைவு கிடையாது. 1857 சுதந்திரப் போருக்கு முந்தைய காலத்திலேயே காலனி ஆதிக்கத்துக்கு எதிராக எதிர்த்து நின்ற வீர சுரேந்திர சாய் வாழ்ந்த பூமியாகவும் இது உள்ளது. அருகில் உள்ள ஹிரகுட் அணை, நவீன இந்தியாவின் கட்டமைப்பின் அடையாளமாக உள்ளது.
என்னுடைய கல்வியில் பல்கலைக்கழக அளவிலான மூன்று தேர்வுகளும், இந்தப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்துக்கு உள்பட்டவையாக இருந்தன என்பதால், உங்கள் பல்கலைக்கழகம் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட பிறகு, முதலில் வெளியான தேர்வு முடிவுகளில் படித்தவர்களில் நானும் ஒருவன். அந்த ஆரம்ப காலங்களின் நினைவுகள் மிகவும் மறக்க முடியாதவை!
எனதருமை மாணவர்களே, உங்களில் பலர் இளநிலைப் பட்டம், முதுநிலைப் பட்டம், ஆய்வுக் கல்விப் பட்டம், விருதுகள் மற்றும் பதக்கங்களை இன்று பெற்றிருக்கிறீர்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் பெருமையுடன் கொண்டாட வேண்டிய, உங்கள் வாழ்வின் மகிழ்சிக்கு உரிய தருணமாக இது உள்ளது. அதேசமயத்தில், இதுபோன்ற பல இலக்குகளை எட்டுவது, இந்த அடித்தளத்தின் மீது அவற்றைக் கட்டமைக்க வேண்டியது போன்ற எதிர்காலம் பற்றியும் நீங்கள் சிந்திக்க வேண்டும்.
உங்கள் படிப்பு காலம் முடிந்து பலரும் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறுவீர்கள். அவ்வாறு செல்லும் போது உங்கள் மதிப்பெண்கள் அல்லது பட்டங்களுக்கும் மேலானவற்றையும் எடுத்துச் செல்லுங்கள். கடந்த காலங்களில் கற்றுக் கொண்ட விஷயங்களை எடுத்துச் செல்லுங்கள். வகுப்புகளில் கற்றதைவிட வெளியில் நீங்கள் நிறைய கற்றுக் கொள்வீர்கள் என்பது நிச்சயம். உங்கள் ஆசிரியர்கள், கற்பித்தலில் ஈடுபடாத அலுவலர்கள், முன்னோடிகள், விருந்தினர்களுடன் உங்களுக்கு ஏற்பட்ட கலந்துரையாடல்கள், நிலையான முத்திரைகளை ஏற்படுத்தியிருக்கும். இந்தக் கலந்தாடல்கள் மற்றும் பிணைப்புகள் குறித்து பெருமையாக உணர்ந்திடுங்கள்.
இன்று நீங்கள் எட்டியுள்ள சாதனைக்கு உங்களுடைய முயற்சி மட்டுமே காரணம் அல்ல என்பதையும், உங்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் உங்களைச் சுற்றியுள்ள கணக்கிலடங்காத நபர்களின் பங்களிப்பும் அதில் உள்ளது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். உங்கள் வெற்றியில் அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு பங்களிப்பு செய்துள்ளனர். அவர்களுடைய பங்களிப்பை நீங்கள் நன்றியுடன் நினைவுகூர வேண்டும். எந்த ஒரு நபரும் தனிப்பட்ட முயற்சியால் வெற்றியாளராகிவிட முடியாது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
இன்றைக்கு உங்கள் வாழ்வில் புதிய அத்தியாயத்தில் நீங்கள் காலடி எடுத்து வைக்கும் நிலையில், ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. தேசத்தில் புதியதொரு உத்வேகம் மற்றும் விழிப்புநிலை உருவாகியுள்ளது.
புதிய இந்தியா என்ற நமது பிரதமரின் தொலைநோக்கு சிந்தனையை நிறைவேற்றும் வகையில் எண்ணிலடங்காத முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன! குறிப்பாக பொருளாதார விஷயத்தில், 2024க்குள் ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாற வேண்டும் என்று அவர் இலக்கு நிர்ணயித்துள்ளார். இது உயர்லட்சிய விருப்பமாக உள்ள நிலையில், அதை எட்டுவதற்கான சரியான பாதையில் நாம் சென்று கொண்டிருக்கிறோம், அதை எட்டுவதற்கு முழுமையாக உறுதி ஏற்றிருக்கிறோம்.
நமது பொருளாதார அடிப்படைகள் வலிமையாக உள்ளன. 2014 முதல் 2019 வரையிலான காலத்தில் ஏற்பட்ட 7.5 சதவீத ஜிடிபி வளர்ச்சி தான், சுதந்திர இந்தியாவில் அதிகபட்ச அளவாக உள்ளது. ஜி 20 நாடுகளில் இதுதான் அதிகபட்சமானதாக இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரிய பொருளாதார ஸ்திரத்தன்மை உறுதியாக இருந்ததால், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. குறைவான பணவீக்கம், நிதிச் செலவு சீரமைப்பு ஆகியவற்றை எட்டியதுடன், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அளவும் கட்டுக்குள் பராமரிக்கப்படுகிறது. 2009 - 14 மற்றும் 2014 - 19 என இரண்டு கால கட்டங்களை நாம் ஒப்பிட்டுப் பார்த்தால், பணவீக்கம் 10.3 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. நிதிப் பற்றாக்குறை ஜிடிபியில் 5.3 சதவீதம் என்பதில் இருந்து 3.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, ஜிடிபியில் 3.3 சதவீதம் என்பதில் இருந்து 1.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.
அடிப்படை அளவிலான மற்றும் தடம் பதிக்கும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 2016ல் திவால் மற்றும் வங்கிமுறி நடைமுறை அமலுக்கு வந்ததால், நாட்டில் நிதி நிலைமை தூய்மை செய்யப்பட்டு, பலப்படுத்தப்பட்டது. வங்கி நடைமுறைகளில் தவறு செய்வது காப்பரேட் நிறுவனங்களாக இருந்தாலும், கடன்களை திருப்பிச் செலுத்தாவிட்டால் அவர்களுடைய சொத்துகளை இழக்க நேரிடும் என்ற சூழ்நிலை வரும் என்று 4 அல்லது 5 ஆண்டுகளுக்கு முன்பு யாரும் கற்பனைகூட செய்திருக்க மாட்டார்கள். 2017ல் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அமல் செய்யப்பட்டது. இந்தியா முழுக்க ஒரே பொதுவான சந்தை என்ற சூழ்நிலையை உருவாக்கும் வகையில், ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாக அது உள்ளது. தொழில் செய்வதில் வெளிப்படைத்தன்மை மற்றும் எளிமையை உருவாக்கியதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு இது உதவியாக அமைந்துள்ளது. தொடர்ந்து வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கு வாய்ப்புகள் ஏற்படுத்தித் தருவது மற்றும் விதிகளைத் தளர்த்துவதன் காரணமாக முன் எப்போதும் இல்லாத வகையில் நாட்டுக்கு வெளிநாட்டு நேரடி முதலீடுகள் வந்து கொண்டிருக்கின்றன.
சமூக மேம்பாடு மற்றும் சமத்துவத்தை உருவாக்குவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளும் ஏராளமானவையாக உள்ளன. ஏழைகளுக்கு மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யும் ஆயுஷ்மான் பாரத் திட்டம்; விவசாயிகளின் வருமானத்துக்கு உதவும் பிரதமரின் - விவசாயிகள் நலத் திட்டம்; பழைய கல்வி முறையை சீரமைப்பதற்காக புதிய கல்விக் கொள்கை போன்ற முத்திரை பதிக்கும் திட்டங்கள் இவற்றில் அடங்கும்.
சமீப காலமாக இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது. இதற்கான பல்வேறு காரணிகளைப் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். குறிப்பாக அவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவையாக உள்ளதைப் புரிந்து கொள்ள வேண்டும். உலக அளவிலும் வளர்ச்சி குறைந்துள்ளது. வெளிப்படைத்தன்மையை உருவாக்குதல், நிதி வீணாவதைத் தடுத்தல் மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளும் நடைமுறையில் சில தடங்கல்களை ஏற்படுத்தியிருக்கலாம். கடந்த 5 ஆண்டுகளில் சட்டத்தின் ஆட்சி மற்றும் பொருளாதாரத்தை முறைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதால், அவை குறுகிய கால பின்னடைவு ஏற்படுத்தும்.
அரசு எச்சரிக்கையுடனும் மற்றும் துடிப்புடனும் இருக்கிறது. நிதித் துறை மற்றும் பொருளாதாரத்தை சீரமைக்கவும், புத்துயிரூட்டவும் அரசு நிறைய நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. உற்பத்தியை அதிகரிப்பதுடன் தொடர்புடைய நிலம், தொழிலாளர் மற்றும் முதலீடு போன்ற முக்கிய காரணிகள் விஷயத்தில் முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், வலுவான அடிப்படைகள், தடம் பதிக்கும் தூய்மையாக்கல் நடவடிக்கை மற்றும் லட்சிய நோக்குடைய சீர்திருத்த செயல் திட்டம் ஆகியவை தொடங்கப்பட்டிருப்பதால், வரக்கூடிய மாதங்கள் மற்றும் ஆண்டுகளில் இந்தியா அதிகமான வளர்ச்சி வேகத்தை எட்டும். உங்கள் அனைவருக்கும் அருமையான பொருளாதார வாய்ப்புகள் உருவாகவுள்ளன.
ஸ்மார்ட்போன் புரட்சி, செயற்கைப் புலனறிதல், பெரிய அளவில் தகவல் தொகுப்பு பகுப்பாய்வு, மேம்படுத்தப்பட்ட யதார்த்த நிலை, 3 டி பிரிண்டிங், ரோபோட்டிக்ஸ் மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பம் போன்ற, போக்கை மாற்றக் கூடிய தொழில்நுட்பங்கள் காரணமாக, நமது உலகின் அடிப்படைகளும், அவற்றில் நாம் பங்கேற்கும் வழிமுறைகளும் மாறிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும், முன் எப்போதும் இல்லாத வேகத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. மற்றவர்களுடன் நாம் தொடர்பு கொள்வது தொடங்கி, ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குச் செல்வது வரையில், பணம் அனுப்புவது மற்றும் பெறுவது வரையில் அல்லது நமது உணவை நாம் பெறுவது வரையில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. எல்லா இடங்களிலும் தடங்கல்கள் இருக்கின்றன! நாங்கள் பல்கலைக்கழகத்தில் இருந்த காலத்தை விட்டுத் தள்ளுங்கள். பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமைகளை ஒப்பிட்டுப் பார்த்தாலும், இப்போதிருப்பது வேறுபட்ட உலகமாக உள்ளது.
வாய்ப்புகள் உருவாகும் போது, புதிய சவால்களும் உருவாகின்றன. மாற்றங்களை நாம் அறிந்து கொண்டவர்களாக இருந்து, புதியனவற்றைக் கற்றுக் கொண்டு மற்றும் பிறருடன் போட்டியை சமாளிக்கத் தயார் ஆகாவிட்டால், நாம் பின்தங்கிவிடுவோம். இந்த சவாலைத்தான் நீங்கள் அனைவரும் வெற்றி கொண்டாக வேண்டும். அறிவு மற்றும் தொடர்ச்சியாகக் கற்பது போன்ற விஷயங்களை நமது பழங்கால சுவடிகள் வலியுறுத்துகின்றன. தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றங்கள் நிகழும் இன்றைய காலக்கட்டத்திலும் இது பொருத்தமானதாக உள்ளது.
பார்த்தி ஹரி என்ற பெருமைக்குரிய துறவி அறிவின் முக்கியத்துவத்தைப் பின்வருமாறு கூறியுள்ளார்:
विद्या नाम नरस्य रूपमधिकं प्रच्छन्नगुप्तं धनम्
विद्या भोगकरी यशः सुखकरी विद्या गुरूणां गुरुः ।
विद्या बन्धुजनो विदेशगमने विद्या परं दैवतम्
विद्या राजसु पूज्यते न हि धनं विद्याविहीनः पशुः ॥
தனிப்பட்ட ஒருவரின் வளர்ச்சியை - அறிவு - எப்படி மேம்படுத்துகிறது என்பதை பார்த்தி ஹரி விவரித்துள்ளார். யாராலும் பறிக்க முடியாத ரகசியமான சொத்தாக அது இருக்கிறது. அது நமக்கு மகிழ்ச்சி மற்றும் ஐஸ்வர்யத்தைத் தருகிறது. ஆசான்களுக்கெல்லாம் ஆசானாக அறிவு இருக்கிறது. வெளி உலகில் அது நமது நண்பனாக இருக்கிறது. பொருள் சார்ந்த மற்ற சொத்துகளைக் காட்டிலும் அறிவைத்தான் உயர் தெய்வீகமான சொத்தாக மன்னர்கள் (தலைவர்கள்) வழிபட்டிருக்கிறார்கள். அறிவு வளம் இல்லாதவர்கள் விலங்குகள் போன்றவர்கள்.
இன்னும் சொல்லப் போனால், அறிவு வளத்துக்கு முடிவு என்பதே கிடையாது. அது ஆழமான மாண்புகள் மற்றும் தன்மைகளை உருவாக்குகிறது. ஹிதோபதேசத்தில் ஒரு ஸ்லோகம் இதை மிக அழகாக எடுத்துக் காட்டுகிறது:
विद्या ददाति विनयं विनयाद् याति पात्रताम्।
पात्रत्वाद् धनमाप्नोति धनाद्धर्मं ततः सुखम्॥
``அறிவு ஒருவருக்குப் பணிவைத் தருகிறது. பணிவுடன் மதிப்பு வந்து சேருகிறது. அது சொத்துகளை உருவாக்குகிறது. அவ்வாறு சொத்து பெருகும்போது சரியான நடத்தை வருகிறது.சரியான நடத்தை வரும்போது மன நிறைவு ஏற்படுகிறது'' என்பது இதன் அர்த்தம்.
அந்த வகையில் சுபஷிகானியில் உள்ள பழங்கால பாடத்தை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டியது முக்கியமாகிறது:
विद्या विवादाय धनं मदाय शक्तिः परेषां परिपीडनाय ।
खलस्य साधोर्विपरीतमेतत् ज्ञानाय दानाय च रक्षणाय ॥
குறுக்கு புத்தியாளர்களுக்கு `அறிவு' என்பது வாதங்கள் செய்வதற்கானதாக இருக்கிறது. `சொத்து' என்பது பெருமையைக் காட்டுவதாக, `அதிகாரம்' என்பது பிறருக்குத் தொல்லை தருவதற்கானதாக உள்ளது. மாண்புமிக்கவர்களைப் பொருத்த வரையில், இவையெல்லாம் முற்றிலும் எதிர் கருத்துகள் கொண்டவை. அவர்களைப் பொருத்த வரையில் `அறிவு' என்பது ஞானம், `சொத்து' என்பது பிறருக்குக் கொடுப்பதற்கானது, மற்றும் `அதிகாரம்' என்பது நலிந்தவர்களைக் காப்பாற்றுவதற்கானது என்பவையாக உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு 2019 நவம்பர் 26 ஆம் தேதியன்று, நாடு அரசியல்சாசன தினத்தைக் கொண்டாடியது. 2020 ஏப்ரல் வரையில், அடுத்த நான்கு மாதங்களுக்கு ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நமது அரசியல்சாசனத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளவாறான அடிப்படைக் கடமைகள் என்பது இந்த ஆண்டுக்கான வலியுறுத்தப்படும் கருத்தாக உள்ளது. நாம் எப்போதும் நமது உரிமைகள் பற்றி யோசிக்கிறோம். நமது கடமைகள் மற்றும் பொறுப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. ``நாம் அனைவரும் நமது கடமைகளை சரியாகச் செய்தால், நமது உரிமைகளை கேட்க வேண்டிய தேவை இருக்காது. கடமைகளைச் சரியாகச் செய்யாவிட்டால், உரிமைகளைத் தேடி ஓடுவோம். அவை கை நழுவிப் போய்க் கொண்டிருக்கும்'' என்று காந்திஜி கூறியுள்ளார். 1947 ஆம் ஆண்டு, மனித உரிமைகள் குறித்து கட்டுரை அளிக்குமாறு அப்போதைய யுனெஸ்கோ டைரக்டர் ஜெனரல் ஜூலியன் ஹக்ஸ்லே விடுத்த வேண்டுகோளை அவர் நிராகரித்துவிட்டார். ``கல்வி அறிவில்லாத ஆனால் நன்றாக கடமைகளைச் செய்வதன் மூலம் எல்லா உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்ற கருத்துடைய தாயகத்திடம் இருந்து நான் கற்கிறேன். எனவே, உலகின் குடிமக்களாக கடமைகளை நாம் செய்யும் போது தான், உரிமை என்ற விஷயமே அர்த்தம் பெறுகிறது'' என்று அப்போது அவர் கூறினார்.
நண்பர்களே, நமது கடமைகள் பற்றி உணரச் செய்யும் அவருடைய அடிப்படை பாடத்தை நினைவுகூர்வதைத் தவிர, அவருடைய 150வது பிறந்த ஆண்டைக் கொண்டாடுவதில் பெரியதாக எது இருக்கப் போகிறது. நம் சக மக்கள், நமது சமூகம், பரந்த நிலையில் நமது உலகிற்கும், வரக் கூடிய தலைமுறையினருக்கும் நாம் கடமைகளைச் செய்ய வேண்டியுள்ளது. சுற்றுச்சூழலுக்கும், ஒட்டுமொத்த பூமிக்கும் நமது கடமைகளைச் செய்ய வேண்டியுள்ளது. இந்தப் புரிதல் இருந்தால் மாற்றத்துக்கான விதையாக இருக்கும். விஸ்வ குரு பாரத் என்ற, இந்தியாவின் தலைமையிடம் இருந்து உலகம் இதைத் தான் எதிர்நோக்கியுள்ளது.
இதைத் தொடங்குவதற்கு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களான உங்களிடம் நான் ஒரு கோரிக்கையை வைக்கட்டுமா? `கடமை' என்ற அடிப்படைக் கொள்கையை வலியுறுத்தும் வகையில், இந்தியா சுதந்திரம் பெற்ற 75 மற்றும் 100வது ஆண்டுகளான 2022 மற்றும் 2047 வது ஆண்டுக்கான ஒரு தொலைநோக்கு திட்டத்தை சம்பல்பூர் பல்கலைக்கழகம் உருவாக்க முடியுமா? தன்னுடைய கடமைகள் என்ன, சமுதாயத்திற்கு எந்தக் கடமைகளை அளிக்க முடியும் என்பதற்கான தொலைநோக்குத் திட்டமாக அது இருக்க வேண்டும்!
அன்பு மாணவர்களே, இப்போது நான் கூறியவற்றைத் தொகுப்பாகக் குறிப்பிட்டு நிறைவு செய்ய விரும்புகிறேன். பட்டங்கள் மற்றும் பதக்கங்களை இன்று பெற்றிருக்கும் நீங்கள், சாதித்துள்ள விஷயங்கள் குறித்து பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள். அதேசமயத்தில், நீங்கள் இதைச் சாதிப்பதற்கு உறுதுணையாக இருந்த எண்ணற்ற மக்களுக்கு நன்றி கூறுங்கள்.
அறிவு, சிந்தனைகள் மற்றும் தொடர்புகள் உங்களுக்குக் கிடைத்துள்ளன. எல்லாவற்றையும் விட மிகச் சிறந்த பரிசாக இவை உள்ளன. இருந்தபோதிலும், உண்மையான அறிவு ஒருவருக்குப் பணிவை ஏற்படுத்தும், அந்தப் பணிவு வளமை மற்றும் நிறைவை உருவாக்கும் என்ற ஹிதோபதேசத்தின் மறக்க முடியாத பாடத்தை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மேலும், கடமை என்பது இல்லாமல் அறிவு என்பதற்கு அர்த்தம் எதுவும் இல்லை, அவசியமான பயன் என்பது இல்லாமல் கடமை என்பதற்கு எந்த அர்த்தமும் இல்லை என்று விதுர நீதியில் கூறப்பட்டிருக்கிறது.
असम्यगुपयुक्तं हि ज्ञानं सुकुशलैरपि ।
उपलभ्यं चाविदितं विदितं चाननुष्ठितम् ॥
நாம் புதிய இந்தியாவைக் கட்டமைக்கும் முயற்சியில் உள்ள நிலையில், உங்கள் வாழ்வின் புதிய அத்தியாயத்தில் நீங்கள் நுழைகிறீர்கள். அனைவருக்கும் அமைதி, முன்னேற்றம் மற்றும் வளமையை அளிக்கும் ஒரு இந்தியாவை உருவாக்க நாம் முயற்சி மேற்கொண்டிருக்கிறோம். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். இவை அனைத்திலும், உங்கள் கடமையை, உங்கள் தர்மத்தை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். நமது பாரம்பர்யம் மற்றும் மாண்புகளுக்கு இவைதான் அடிப்படைகளாக உள்ளன. இவை தான் நம்மை உருவாக்குகின்றன, முன் எப்போதையும்விட இவை இப்போது மிகவும் தேவையாக உள்ளன.
எப்போதும் மாறிக் கொண்டிருக்கும் மற்றும் தொழில்நுட்ப அளவில் சுருங்கிக் கொண்டிருக்கும் ஒரு உலகில் நீங்கள் காலடி எடுத்து வைக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இன்றைக்கு நீங்கள் செய்யக் கூடிய விஷயத்தை, உலகில் வேறு ஒரு பகுதியில் இன்னொருவர் இதைவிட சிறப்பாகச் செய்ய முடியும். எனவே, நீங்கள் தொடர்ந்து கற்க வேண்டும், தொடர்ந்து வளர்ச்சி அடைய வேண்டும், அறிவின் வாய்ப்புகளை தொடர்ந்து நாடிக் கொண்டிருக்க வேண்டும்!
உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நான் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகவும் மகிழ்ச்சியான மற்றும் வளமையான 2020 புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
*****
(Release ID: 1594892)
Visitor Counter : 303