பிரதமர் அலுவலகம்

குரு நானக் தேவ் ஜி-யின் போதனைகளைப் பின்பற்ற பிரதமர் வேண்டுகோள் கர்தார்பூர் வழித்தடத்தில் தேரா பாபா நானக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் குரு நானக் தேவின் 550-வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் சிறப்பு நாணயத்தை வெளியிட்டார்

Posted On: 09 NOV 2019 1:56PM by PIB Chennai

குரு நானக் தேவ் ஜி-யின் உயரிய நெறிகளையும், போதனைகளையும் பின்பற்ற வேண்டும் என பிரதமர் திரு.நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். கர்தார்பூர் வழித்தடத்தில் தேரா பாபா நானக் என்ற இடத்தில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை தொடங்கி வைக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.  குரு நானக் தேவ்-இன் 550வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், சிறப்பு நாணயம் ஒன்றையும் அவர் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் திரண்டிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், தேரா பாபா நானக் புனித தலத்தில் கர்தார்பூர் வழித்தடத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதில் தாம் பெருமையடைவதாகக் குறிப்பிட்டார்.

முன்னதாக, ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி பிரதமருக்கு குவாமி சேவா விருதை வழங்கிக் கவுரவித்தது. இந்த விருதை குரு நானக் தேவின் கமலப் பாதத்தில் சமர்ப்பிப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

குரு நானக்-கின் 550-வது பிறந்தநாளையொட்டி,  கர்தார்பூர் வழித்தடத்தில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை தொடங்கி வைப்பது அவரது அருளாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார். பாகிஸ்தானில் உள்ள குருத்வாரா தர்பார் சாகிப்-புக்கு பயணம் செய்வது தற்போது எளிதாகியிருக்கிறது.

யாத்ரீகர்கள் எல்லைகடந்து பயணம் செய்வதற்கு ஏற்ற வகையில், குறிப்பிட்ட காலத்திற்குள், சாதனை நிகழ்வாக வழித்தடத்தை அமைத்துள்ள பஞ்சாப் மாநில அரசு, குருத்வாரா பிரபந்தக் கமிட்டிக்கு பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார். பாகிஸ்தான் தரப்பில் சாலை அமைத்ததற்கு காரணமான பாகிஸ்தான் பிரதமர் திரு.இம்ரான் கான் மற்றும் இதில் தொடர்புடையவர்களுக்கு பிரதமர் தமது நன்றியைத் தெரிவித்தார்.

குரு நானக் தேவ் ஜி இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், உலகிற்கே உந்து சக்தியாகத் திகழ்ந்தார் என பிரதமர் குறிப்பிட்டார். குருநானக் வெறும் குரு மட்டுமல்லாமல், தத்தவ ஞானியாக நமது வாழ்க்கைக்கு ஆதரவான தூணாகத் திகழ்கிறார் என்று அவர் கூறினார். குரு நானக்  உண்மையான நன்னெறிகளுடன் வாழ்வதன் முக்கியத்துவத்தை போதித்தார் என்றும், நேர்மை மற்றும் தன்னம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார முறையை நமக்கு வழங்கினார் என்றும் அவர் தெரிவித்தார்.

குரு நானக், சமத்துவம், சகோதரத்துவம், சமுதாயத்தில் அமைதி ஆகியவற்றைப் போதித்ததாகக் கூறிய  பிரதமர்,  பல்வேறு சமுதாயத் தீமைகளை அகற்றவும் அவர் போராடினார் என்று தெரிவித்தார்.

குரு நானக்-கின்  புனிதத்தால் நிரப்பப்பட்ட இடமாக, கர்தார்பூர் திகழ்கிறது என்று கூறிய பிரதமர், ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கும், புனித யாத்ரீகர்களுக்கும் இந்த வழித்தடம் பயன் அளிக்கும் என்று கூறினார்.

கடந்த ஐந்தாண்டுகளாக அரசு நாட்டின் வளமான பாரம்பரியம், கலாச்சாரத்தைப் பாதுகாக்க முயற்சித்து வருவதாக பிரதமர் தெரிவித்தார். குரு நானக்-கின் 550-வது பிறந்தநாளையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், உலகில் நமது தூதரகங்கள் மூலம் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும், அவர் கூறினார்.

குரு கோவிந்த் சிங்-கின் 350-வது பிறந்தநாள் நாடு முழுவதும் அண்மையில் கொண்டாடப்பட்டது. குரு கோவிந்த் சிங்கைக் கவுரவிக்கும் வகையில், குஜராத்தின் ஜாம் நகரில் 750 படுக்கைகளைக் கொண்ட நவீன மருத்துவமனை கட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இளைய சமுதாயத்தினருக்கு பயன் அளிக்கும் வகையில், யுனஸ்கோவின் உதவியுடன் பல்வேறு உலக மொழிகளில் “குரு வாணி”யை மொழியாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் கூறினார். சுல்தான்பூர் லோதி பாரம்பரிய நகரமாக மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், குருநானக்-குடன் தொடர்புடைய முக்கிய அனைத்து நகரங்களை இணைக்கும் வகையில், சிறப்பு ரயில் ஒன்று விடப்படும் என்றும் அவர் அறிவித்தார். ஸ்ரீ அகால் தக்த் தம் தமா சாகிப், தேஜ்பூர் சாகிப், கேஷ்கர் சாகிப், பட்னா சாகிப், ஹுசூர் சாகிப், ஆகியவை வழியாக ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து அதிகரிக்கப்படும் என்று அவர் கூறினார்.அமிர்தசரஸுக்கும் நான்டெட்-டுக்கும் இடையே சிறப்பு விமானம் தனது சேவையை துவங்கியுள்ளது. அமிர்தசரஸில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு மேலும் ஒரு முக்கிய முடிவை உலகம் முழுவதும் வசிக்கும் சீக்கிய குடும்பங்கள் நலனுக்காக எடுத்துள்ளது என்று தெரிவித்த பிரதமர், உலகம் முழுவதும் பல ஆண்டுகளாக இந்தியாவிற்கு வருவதில் இருந்த சிரமங்கள் களையப்பட்டுள்ளன என்றார். தற்போது ஏராளமான குடும்பங்கள் விசா மற்றும் ஓசிஐ அட்டைகளுக்கு விண்ணப்பிக்கலாம் அவர்கள் இந்தியாவில் உள்ள தங்கள் உறவினர்களை எளிதாகப் பார்க்க முடிவதுடன் புனிதத் தலங்களுக்கும் செல்ல வழியேற்பட்டுள்ளது.

மத்திய அரசு எடுத்துள்ள மேலும் 2 முடிவுகளும் சீக்கிய சமுதாயத்திற்கு உதவியுள்ளதாக அவர் கூறினார். ஒன்று 370-வது பிரிவு நீக்கப்பட்டது. ஜம்மு, காஷ்மீர், லே ஆகிய பகுதிகளைச்  சேர்ந்த சீக்கிய சமுதாயத்தினருக்கு மற்ற பகுதிகளில் உள்ள அதே உரிமைகளைப் பெறுவார்கள். அதே போல குடியுரிமை திருத்த மசோதாவும் சீக்கியர்கள் நாட்டில் குடியுரிமை பெறுவதை எளிதாக்கியிருக்கிறது.

குருநானக்கில் இருந்து குரு கோவிந்த் வரை பல்வேறு ஆன்மீக குருக்கள் தங்களது வாழ்க்கையை நாட்டின் ஒற்றுமைக்காகவும் பாதுகாப்புக்காகவும் அர்ப்பணித்தனர் என்று அவர் கூறினார். ஏராளமான சீக்கியர்கள் தங்கள் வாழக்கையை இந்திய சுதந்திரத்திற்காக அர்ப்பணித்தனர். இதனை அங்கீகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஜாலியன் வாலாபாக் நினைவுச் சின்னம் நவீனமயமாக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். சீக்கிய மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டு சுய வேலைவாய்ப்பு பெற புதிய கவனம் செலுத்தப்படுகிறது. இந்தச் சூழலில் 27 லட்சம் சீக்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

                                       ******


(Release ID: 1591308) Visitor Counter : 177