நிதி அமைச்சகம்

மத்திய அமைச்சரவை நவம்பர் 6, 2019-ல் ஒப்புதல் அளித்த நின்று போயுள்ள குறைந்த விலை மற்றும் நடுத்தர வருவாய் வீட்டு வசதி திட்டங்களுக்கு நிதி அளிக்கும் சிறப்புத் திட்டம் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Posted On: 07 NOV 2019 2:12PM by PIB Chennai

குறைந்த விலை மற்றும் நடுத்தர வருவாய் வீட்டு வசதித் துறையில், நின்று போயுள்ள வீட்டு வசதித் திட்டங்களை நிறைவு செய்வதற்கு முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்குவதற்கான சிறப்பு நிதியுதவி திட்டத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

இந்த சிறப்பு நிதியத் திட்டத்தில், அரசு ஆதரவாளராக செயல்படும். அரசு இந்தத் திட்டத்திற்கு அளிக்கும் நிதி ரூ.10 கோடி அளவுக்கு இருக்கும்.

இந்த நிதியம் இரண்டாம் நிலை மாற்று முதலீடு நிதியமாக அமைக்கப்படும். இந்த நிதியம் செபி-யில் பதிவு செய்யப்படும்; தொழில் ரீதியில் நிர்வகிக்கப்படும்.

இந்த சிறப்புத் திட்டத்தின் கீழ் அமையும் முதலாவது மாற்று முதலீடு நிதியத்திற்கு எஸ்பிஐகேப் வென்சர்ஸ் லிமிடெட் நிறுவனம் முதலீட்டு மேலாளராக நியமிக்கப்படும்.

இந்த நிதியம், வீட்டுவசதி நிறுவனங்களுக்கு முற்றுப் பெறாமல் இருக்கும் கட்டுமானத் திட்டங்களை நிறைவு செய்ய தேவையான நிதியை அளிக்கும். இதனையடுத்து வீடு வாங்குவோருக்கு வீடுகள் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்.

வீட்டு வசதித் தொழில், இயல்பாக பல்வேறு இதர தொழில்களுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதால், இத் தொழிலின் வளர்ச்சி இந்தியப் பொருளாதாரத்தின் இதர பெரிய துறைகளில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை அகற்ற உதவும்.

 

பின்னணி

குறைந்த விலை மற்றும் நடுத்தர வருவாய் வீட்டுவசதித் திட்டங்களுக்கு சிறப்பு நிதியத் திட்டம் உருவாக்கப்படும் என்று 2019 செப்டம்பர் 14 அன்று மத்திய நிதியமைச்சர் அறிவித்திருந்தார். இந்த சிறப்பு நிதியத் திட்டம் நின்று போயுள்ள வீட்டுவசதித் திட்டங்களை நிறைவு செய்ய, இறுதி நிலை நிதியுதவியை வழங்கும்.

இதனையடுத்து, அமைச்சகங்களுக்கு இடையேயும், வீட்டுவசதி நிதி நிறுவனங்கள், வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், வீட்டுவசதி நிறுவனங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட பல்வேறு பிரிவினரிடையேயும் ஆலோசனை நடத்தப்பட்டது. வீடு வாங்குவோர், வீட்டுவசதி நிறுவனங்கள், பணம் வழங்குவோர், முதலீட்டாளர்கள் ஆகியோர் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றுக்கு சிறப்பு நிதியத் திட்டத்தின் மூலம் தீர்வு காணப்படும்.

 

மத்திய அமைச்சரவை நவம்பர் 6, 2019-ல் ஒப்புதல் அளித்த, நின்று போயுள்ள குறைந்த விலை மற்றும் நடுத்தர வருவாய் வீட்டு வசதி திட்டங்களுக்கு நிதி அளிக்கும் சிறப்புத் திட்டம் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

 

  1. சிறப்பு நிதியத் திட்டத்தில் அரசு மற்றும் முதலீட்டு மேலாளர்களின் பங்கு என்ன?

பதில்: உத்தேச நிதியத்திற்கு அரசு ஆதரவாளராக செயல்படும். செபி மாற்று முதலீட்டு நிதிய வரன்முறைகள் 2012-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரமும். பொறுப்புகளும் அரசுக்கு இருக்கும். நிதி திரட்டுதல், முதலீடுகள், நிதியக் குழுவினரை நிர்வகித்தல் ஆகியவற்றுக்கு முதலீட்டு மேலாளர் பொறுப்பேற்பார்.

  1. இந்த நிதியத்தின் அளவு என்ன?

பதில்: இத்திட்டத்திற்கு வழங்க அரசு உறுதி அளித்துள்ள தொகை ரூ.10,000 கோடி. அதே சமயம் வங்கிகள், ஆயுள் காப்பீட்டுக் கழகம் மற்றும் இதர நிறுவனங்களிலிருந்து சமஅளவு பங்களிப்பு கோரப்படும். இதனையடுத்து மொத்தமாக சுமார் ரூ.25,000 கோடி இருப்பு நிதியாக உருவாக்கப்படும்.

  1. நிதியத்தை நிர்வகிப்பது யார்?

பதில்: சிறப்புத் திட்டத்தின் கீழ் முதலாவது மாற்று முதலீட்டு நிதிக்கு எஸ்பிஐகேப் வென்சர்ஸ் லிமிடெட் நிறுவனம் முதலீட்டு மேலாளராக நியமிக்கப்படும்.

  1. இந்த நிதியத்திற்கு முதலீடு அளிப்பவர்கள் யார்?

பதில்: சிறப்பு நிதியத் திட்டத்தில் உருவாக்கப்படும் மாற்று முதலீட்டு நிதியம், அரசு மற்றும் பணக்கார நிதி நிறுவனங்கள், சவரன் சொத்து நிதியங்கள், அரசு மற்றும் தனியார் துறை வங்கிகள், உள்நாட்டு ஓய்வூதியம் மற்றும் வருங்கால வைப்பு நிதியங்கள், உலக ஓய்வூதிய நிதியங்கள், நிறுவன முதலீட்டாளர்கள் உள்ளிட்ட இதர தனியார் முதலீட்டாளர்களிடமிருந்து முதலீடுகளைக் கேட்டுப் பெறும்.

  1. செயல்படா நிலைச் சொத்துக்கள் (NPA), தேசிய கம்பெனி சட்ட நடுவர் மன்றம்  (NCLT) ஆகியவற்றின் கீழ் வரும் வீட்டுவசதித் திட்டங்களுக்கு இறுதி நிலை நிதியுதவி வழங்கப்படுமா?

பதில்: ஆம். சம்பந்தப்பட்டோரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில் NPA, NCLT திட்டங்களுக்கும் முதலீடுகள் அளிக்கும் வகையில் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிதியத்திடமிருந்து உதவி பெறுவதற்கான அனைத்து மனுக்களையும் முதலீட்டுக் குழுவினர் ஆய்வு செய்வார்கள். தற்போதுள்ள கடன் வழங்கியோர், சட்ட ஆலோசகர்கள் ஆகியோரிடம் கலந்து பேசி முதலீட்டுக் குழுவினர் இவற்றுக்கு நிதி வழங்க ஒப்புதல் அளிப்பார்கள்.

  1. NCLT நடவடிக்கைகளின் கீழ் வரும் எந்த திட்டங்கள் சிறப்பு நிதியத்தின் கீழ் நிதியுதவி பெறத் தகுதியுடையன?

பதில்: NCLT மூலமான கம்பெனி கலைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களும் சிறப்பு நிதியத் திட்டத்தின் கீழ் நிதி வழங்க பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இது தொடர்பாக கடன் வழங்கியோர் குழுவினரால் ஏற்றுக் கொள்ளப்படாத / நிராகரிக்கப்பட்ட தாவா தீர்ப்பு நிலை வரை நிதி வழங்க பரிசீலிக்கப்படும்.

  1. உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் சம்பந்தப்பட்ட திட்டங்களுக்கு முதலீட்டு நிதி வழங்கப்படுமா?

பதில்: இல்லை. கட்டுமான நிதிப் பற்றாக்குறை காரணமாக நின்று போன திட்டங்களுக்கு மட்டுமே சிறப்பு நிதியம் முக்கிய கவனம் செலுத்தும். NPA-க்களாகவும், NCLT நடவடிக்கையின் கீழ் வருபவைகளாகவும் உள்ள அதே சமயம் நிதி கிடைத்தவுடன் கட்டுமானப் பணிகளை தொடங்கத் தயாராக உள்ள நிறுவனங்களுக்கும், உதவி அளிக்கப்படும்.

  1. நிதி அளிப்பதற்கான திட்டங்களை தெரிவு செய்வதற்கு உரிய தகுதிகள் என்ன?

பதில்: கீழ்கண்ட தகுதிகள் உள்ள திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும்.

 

  • போதுமான நிதி இல்லாத காரணத்திற்காக நின்று போயுள்ளவை.
  • குறைந்த விலை மற்றும் நடுத்தர வருவாய் பிரிவு திட்டங்கள்
  • விலை மதிப்பில் நேர்மறைத்தன்மையுள்ள திட்டங்கள் (NPA-க்களாகவும், NCLT நடவடிக்கையின் கீழ் வருபவைகளாகவும் உள்ளவை உட்பட)
  • வீட்டு வசதி கட்டுப்பாட்டு ஆணையம் RERA-வில் பதிவு செய்யப்பட்டவை
  • முற்றுப் பெறுவதற்கு மிக நெருங்கிய நிலையில் உள்ள திட்டங்கள்

 

  1. குறைந்த விலை மற்றும் நடுத்தர வருவாய் வீட்டுவசதித் திட்டங்கள் என்றால் என்ன?

பதில்: சிறப்புத் திட்டத்தின் முதல் நிதியத் தேவைகளுக்காக குறைந்த விலை அல்லது நடுத்தர வருவாய் வீட்டுவசதி என்பது, 200 சதுர மீட்டர் என்கிற RERA நிர்ணய பரப்பளவுக்கு மிகாத அதே சமயம் கீழ்கண்ட விலை நிர்ணயம் கொண்டுள்ள திட்டங்களாகும்.

 

  • மும்பை பெருநகர மண்டலத்தில் ரூ.2 கோடி வரையோ அதற்கு கீழோ மதிப்பு உள்ளவை
  • தேசியத் தலைநகர மண்டலம், சென்னை, கொல்கத்தா, புனே, ஐதராபாத், பெங்களூரூ, அகமதாபாத் ஆகியவற்றில் ரூ.1.5 கோடி அல்லது அதற்கு கீழே மதிப்பு உள்ளவை
  • இந்தியாவின் இதரப் பகுதிகளில் ரூ.1 கோடி அல்லது அதற்கு கீழே உள்ளவை

 

  1. மொத்த மதிப்பு நேர்மறைத் (Networth positive) திட்டங்கள் என்றால் என்ன?

பதில்: இத்திட்டத்தில் நிதி பெறுவதற்காக, மொத்த மதிப்பு நேர்மறைத்

 திட்டங்கள் என்பவை, வர வேண்டிய தொகை மற்றும் விற்பனையாகாத சொத்துக்களின் மதிப்பு ஆகியன திட்ட நிலையில் நிலுவையில் உள்ள கடன்கள் மற்றும் நிறைவு செய்வதற்கான செலவு  ஆகியவற்றை விட அதிகமாக இருப்பவை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது்.

  1. வீடுகளின் விலை நிலவர அடிப்படையில் இந்த நிதியத்திலிருந்து உதவி பெறக் கூடிய திட்டங்கள் எவை?

பதில்: வினா எண். 9-க்கான பதிலைப் பார்க்கவும்.

  1. பல்வேறு நகரங்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச விலையின் கீழ் எவையெல்லாம் சேர்க்கப்படும்?

பதில்: வீடுகளின் விலை மதிப்பில், சமுதாய வசதிகளான வாகன நிறுத்துமிடம், வீட்டுவசதி சங்கம், தரகர் கட்டணம், வைப்புகள், பதிவுகள், முத்திரை கட்டணங்கள் ஆகியன அடங்காது.

  1. தரைவிரிப்புப் பரப்பு என்பதன் வரையறை என்ன?

பதில்: RERA சட்டத்தின் பிரிவு-2 உட்பிரிவு k-ன்படி தரைவிரிப்புப் பகுதி என்பதன் பொருள் வரையறுக்கப்படுகிறது. அதாவது குடியிருப்பு ஒன்றின் பயன்படுத்தக் கூடிய பகுதி. இதில் வெளிச்சுவர்கள், சேவைகளுக்கான இணைப்பு குழாய் பகுதிகள், பால்கனி அல்லது வராண்டா அல்லது திறந்தவெளி முற்றம் ஆகியன அடங்காது. ஆனால் குடியிருப்பின் உள்பகுதி சுவர்கள் பரப்பு இதில் அடங்கும்.

  1. வில்லா எனப்படும் தனி வீடு திட்டங்களுக்கும் இந்த நிதியம் உதவி வழங்குமா?

பதில்: 200 சதுர மீட்டர் பரப்பளவுக்கு கீழ் உள்ள நகரங்கள் வாரியிலான விலை அளவுகளுக்கு உட்பட்டு, அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை உள்ள திட்டங்களில், நிறைவு பெறாமல் இருக்கும் அனைத்துத் திட்டங்களுக்கும் நிதியுதவி அளிக்கப்படும்.

  1. நாடெங்கும் நின்று போயுள்ள வீட்டுவசதித் திட்டங்களின் எந்த நகரத்திற்கு அதிகபட்சம் கவனம் செலுத்தப்படும்? மண்டல வாரியாக நிதி ஒதுக்கீடு ஏதும் உள்ளதா?

பதில்: இந்த நிதியத்தின் கீழ் மண்டல கட்டுப்பாடுகள் ஏதுமின்றி நாடெங்கும் முதலீடுகள் செய்யப்படும். திட்ட நிலைகள், வீட்டுவசதி நிறுவன நிலைகள், நகர நிலைகள் ஆகியவற்றுக்கு ஏற்ற நிர்வாக நடைமுறை தரத்தின்படியான உச்ச வரம்புகள் இருக்கும்.

  1. நின்று போயுள்ள வீட்டுவசதித் திட்டங்களில் குறைந்த விலை மற்றும் நடுத்தர வருவாய் பிரிவு வீட்டுவசதித் திட்டங்கள் எந்த அளவு உள்ளன?

பதில்: தொழில் துறை மதிப்பீடுகளின்படி நின்று போயுள்ள மொத்த வீட்டுவசதித் திட்டங்களில் 90 சதவீதம் குறைந்த விலை மற்றும் நடுத்தர வருவாய் பிரிவைச் சேர்ந்தவை ஆகும்.

  1. தெரிவு செய்யப்பட்ட திட்டங்களின் சில்லரைக் கடன்கள் மறுசீரமைக்கப்படுமா?

பதில்: இது ரிசர்வ் வங்கியின் நெறிமுறைகள் மற்றும் வங்கி வாரியம் ஒப்புதல் அளித்துள்ள கொள்கைகள் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

  1. இந்த நிதியத்தினால் வீடு வாங்குவோருக்கு எந்தவிதப் பயன்கள் கிடைக்கும்?

பதில்: உழைத்துச் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்துள்ள வீடு வாங்குவோருக்கு உரிய நேரத்தில் வீடுகள் கிடைக்கும் வகையில் நின்று போயுள்ள திட்டங்களுக்கு புத்துயிரூட்டுவதால் அவை விரைவில் நிறைவு நிலையை அடையும்.

  1. ஒதுக்கப்பட்ட நிதி, வீட்டுவசதி நிறுவனத்தால் உரிய திட்டங்களுக்கு செலவிடப்படுகிறதா என்பதை கண்காணிக்க என்ன நடைமுறை உள்ளது?

பதில்: இந்த சிறப்பு நிதியம் நின்று போயுள்ள கட்டுமானத் திட்டங்களை நிறைவு செய்வதற்குரிய மூலதனத்தை வழங்கும். வழங்கப்பட்ட நிதியம் திட்டத்தை நிறைவு செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறதா என்பதை முதலீட்டு மேலாளர் மற்றும் நியமிக்கப்பட்ட திட்ட மேலாண்மை கம்பெனிகள் உறுதி செய்யும். RERA பராமரிக்கும் நிதிக் கட்டுப்பாட்டுத் தரங்கள் கடைபிடிக்கப்படும்.

  1. தற்போது உள்ள கடன் வழங்கியோருக்கு, பணப்பட்டுவாடா மற்றும் திட்ட செயலாக்கத்தை மேற்பார்வையிட அதிகாரம் வழங்கப்படுமா?

பதில்: மூலதனம் வழங்குவதை நிதியம் மேற்பார்வை செய்யும். மேலும் வீட்டுவசதி நிறுவனங்கள் திட்டங்களைச் செயல்படுத்துவதை நேரடியாகவோ அல்லது மூன்றாம் தரப்பு சேவைகள் மூலமாகவோ கண்காணிக்கும். நிதி வழங்கும் நடைமுறைகளின் ஒரு பகுதியாக தற்போதைய கடன் வழங்கியோருடன் ஆலோசனை நடத்தப்படும்.

  1. திட்டங்களைத் தேர்வு செய்த பின்னர்  நிதி ஒதுக்குவதற்கான நடைமுறைகள் என்ன?

பதில்: நிலுவை குறித்து முகமைகள் அளிக்கும் தகவல்கள் உட்பட அனைத்தையும் முதலீட்டு மேலாளர் விரிவான ஆய்வு மேற்கொள்வார். நிதி ஒதுக்குவது மற்றும் நிதி முதலீட்டுக்கான ஒப்புதல் ஆகியவை திட்டத்தை செயல்படுத்துபவர்களுடன் செய்து கொள்ளப்படும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்தக் கண்காணிப்பு முறை இருக்கும். ஆவண நடைமுறைகள் முடிவடைந்ததும் ஒதுக்கீடு செய்யப்படும்.

  1. இந்தத் திட்டத்தின் கீழ் எத்தனை திட்டங்கள் பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது?

பதில்: தொழில்துறை மதிப்பீட்டின்படி, முடங்கிக் கிடக்கும் பிரிவில், சுமார் 4.58 லட்சம் வீடுகளைக் கொண்ட 1,509 வீட்டு வசதித் திட்டங்கள் உள்ளன. முதலீட்டுக்கு தகுதி பெறும் திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும். ஒரு திட்டத்திற்கு அதிகபட்சமாக ரூ.400 கோடி ஒதுக்கப்படும். ஒரு நகரத்தில், ஒரு தனிநபர் வீட்டு வசதி நிறுவனத்திற்கு, விரிவான இறுதித் திட்டத்தின் பகுதியாக வரம்பு நிர்ணயிக்கப்படும்.

  1. பாதியில் முடங்கிக் கிடக்கும் நடுத்தரப் பிரிவுத் திட்டங்களுக்கு மட்டும் நிதியுதவி அளிக்கப்படுகிறது.  சொகுசுப் பிரிவில் முடிக்கப்படாமல் இருக்கும் திட்டங்களுக்கு என்ன நடைமுறை?

பதில்: சிறப்புச் சாளரத் திட்டத்தின் குறிக்கோள், நடுத்தரப் பிரிவு மக்களுக்கான முடங்கிக் கிடக்கும் திட்டங்களுக்குத்தான், இருப்பினும், சொகுசுப் பிரிவு உள்பட, முழுமையான ரியல் எஸ்டேட் வணிகத்தில், கட்டுமானத் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தம் வெகுவாகக் குறைய இந்தத் திட்டம்  மறைமுகப் பலனை அளிக்கும்.

  1. நிதி பெற்றபின் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு எவ்வளவு காலம் பிடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது?

பதில்: முடங்கிக் கிடக்கும் திட்டங்களின் கட்டுமானத்தை கூடிய விரைவில் முடிக்க வேண்டும் என்பதுதான் சிறப்புச் சாளரத்திட்டத்தின் நோக்கமாகும்.  அதன்படி உரிய திட்டங்கள் கட்டி முடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதற்கு ஏதுவாக நிதி ஒதுக்கீடு முறை அமையும்.

  1. கட்டுமானத் தொழில் நிறுவனத்திற்கு தகுதி இல்லை எனில், யார் அந்தத் திட்டத்தை நிறைவு செய்வார்கள்?

பதில்: முதலீட்டு ஆய்வின் ஒரு பகுதியாக, திட்டத்தைச் செயல்படுத்தும் நிறுவனத்தை முதலீட்டு மேலாளர் மாற்ற வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டால், முதலீட்டு மேலாளர் இத்திட்டத்தைத் தொடர்ந்து செய்யக் கூடிய தகுதி உள்ளவர்களுக்கு அழைப்பு விடுப்பார்.

  1. ஒதுக்கப்படும் நிதி குறைபாடின்றி, செலவழிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்யும் பொறுப்பு யாருக்கு உள்ளது?

பதில்: கட்டுமானத்திற்கும், திட்டங்களை முடிப்பதற்கும் ஒதுக்கப்படும் நிதி முறையாகச் செலவழிக்கப்படுகிறதா என்பதை நியமிக்கப்படும் திட்ட மேலாண்மை நிறுவனங்களின் உதவியுடனும், உரிய நிதிக்கட்டுப்பாட்டு முறைகளின்படியும் உறுதி செய்யும் பொறுப்பு முதலீட்டு மேலாளருக்கு உள்ளது.

  1. இந்த நிதி ஒதுக்கீடு சந்தை செயல்பாட்டில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும்?

பதில்: 22-வது பதிலைப் பார்க்கவும்

  1. எந்த வகையில் முதலீட்டு நிதி வழங்கப்படும்?

பதில்: கட்டுமானத்திற்கான முதலீட்டுக்கு, சட்டப்படியான ஒழுங்குமுறைக்கு உட்பட்ட மாற்ற முடியாத கடனீட்டுப் பத்திரங்கள் மூலமாக நிதி ஒதுக்கீடு இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

  1. வீடுகள் கட்டும் பிரிவில் சந்தையில் நிலவும் தேக்க நிலைக்குத் தீர்வு கண்டு முன்னேற்றம் ஏற்படுத்த மத்திய அரசு கூடுதலாக என்ன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது?

பதில்: வீட்டு வசதி மற்றும் கட்டுமானத் தொழிலில் நிலவும் மந்த நிலையைக் கருத்தில் கொண்டு, இதனை ஊக்குவிக்கும் வகையில், கடந்த காலத்தில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. 

  • கட்டுப்படியான விலை, வீடுகளுக்கு வருமான வரிக் கழிவு அளித்தல்,
  • ரெப்போ விகிதம் அறிமுகம் / கடன் திட்டங்களுக்கு வழிமுறை இணைப்பு  
  • பிரதமர் வீட்டுவசதித் திட்ட அமலாக்கம்
  • வீட்டு வசதி நிதிநிறுவனங்களின் ஆதரவு
  • வீட்டு வசதி நிதிநிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்ட சொத்துக்களுக்கு அரசின் பகுதி உத்தரவாதம்
  • வீட்டுக் கட்டுமான முன்தொகைக்கு வட்டி குறைப்பு

 

  1. திட்டம் உருவாகும் போது வீடு வாங்குபவர்களிடம் ஏதாவது பங்களிப்பு தேவைப்படுமா?

பதில்: திட்டத்தை முன்கூட்டியே முடிப்பதற்கு ஏதுவாக வீடு வாங்குபவர்கள், தங்களது நிதி நிறுவனங்கள் அல்லது வங்கிகளிடம் வீட்டுக் கடனுக்கான பாக்கித் தவணைகளை  அளிப்பதன் மூலம், உதவ முடியும்.

  1. வீடு வாங்குபவர்களுக்கு ஏதாவது குறிப்பிட்ட வழிகாட்டுதல் உள்ளதா?

பதில்: வீடு வாங்குபவர்கள் தங்களது கடன் வழங்கும் நிறுவனங்களிடம், கூடுதல் கடனுக்கோ அல்லது தற்போதுள்ள வீட்டுக் கடன்களை உயிர்ப்பித்தோ தருமாறு விதிமுறைகளுக்கு உட்பட்டு கேட்டுக்கொள்வதன் மூலம் கட்டுமானத்தை விரைந்து முடிக்க உதவுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  1. தேர்வுக்கான விதிமுறைக்கு பொருந்தாத திட்டங்கள்,  என்னவாகும்?

பதில்: நிதியுதவி, மறுகட்டுமானம் போன்ற மாற்று வழிமுறைகளின் மூலம் தொடர்ந்து கட்டுமானத்தை முடிக்க ஏற்பாடு செய்யலாம்.

  1. அளிக்கப்படும் நிதிக்கு திரும்ப என்ன கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது?

பதில்:  ஒவ்வொரு திட்டத்தின் அடிப்படையில் ஆய்வு செய்து இதுபற்றி முதலீட்டு மேலாளர் முடிவு செய்வார்

  1. ஏற்கனவே நிதியுதவி வழங்கிய நிறுவனங்களோ அல்லது  கட்டுமானத்தை செயல்படுத்துபவரோ தங்கள் சொந்த முயற்சியில்  அதனைச் செயல்படுத்த முயன்றால், நிதியுதவிக்கு யார் பொறுப்பு?

பதில்: முடங்கிக் கிடக்கும் திட்டங்களை முடிப்பதற்கு மட்டுமே இந்த நிதி வழங்கப்படும். இது திட்டத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் பலன் அளிக்கும்.

  1. முடங்கியிருக்கும் திட்டங்களில் விற்கப்படாத, ரத்து செய்யப்பட்ட பதிவுகள் மூலம் இருக்கும் வீடுகளை விற்க யார் பொறுப்பு?

பதில்: இதன் முதல் பொறுப்பு, திட்டத்தை செயல்படுத்துபவருக்குத்தான் உள்ளது. இருப்பினும் முதலீட்டு மேலாளர் தேவைப்படும் நடவடிக்கைகள் மூலம் இதற்கு வழிவகுக்க முடியும்.

  1. முதலீட்டுக்கு எந்த வகையான சிரத்தை எடுக்கப்படும்?

பதில்: எடுத்துக் கொள்ளப்படும் திட்டம் முதலீட்டுக்கு ஏற்றதுதானா என்பதை முதலீட்டு மேலாளர் முதலில் விரிவாக ஆய்வு செய்வார். பின்னர் பத்திரம், நிதியுதவி, சட்டப்பூர்வமான நடைமுறைகள் உட்பட பல்வேறு அம்சங்களையும் ஆலோசித்து முதலீட்டு  மேலாளர் முடிவு எடுப்பார்.

  1. இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும்  திட்டத்தைச் செயல்படுத்தும் நிறுவனம் அல்லது நபர்கள், முறைகேட்டிலோ அல்லது மோசடியிலோ ஈடுபடமாட்டார்கள் என்பதை அரசு எப்படி உறுதி செய்யும் ?

பதில்: திட்டத்தையும். திட்டத்தை நிறைவேற்றுபவர்களையும் தேர்வு  செய்யும் பிரத்யேக அதிகாரம் முதலீட்டு மேலாளருக்கும், முதலீட்டு நிதிக் குழுவுக்கும் உள்ளது. நிதி வழங்குதல் போன்ற விஷயத்தில் முதலீட்டாளர்களோ, அரசோ தலையிட மாட்டார்கள். முதலீட்டாளர்களுடன் செய்து கொள்ளப்படும் ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டபடி முதலீட்டுக்குழு வழிகாட்டுதல்களை மேற்கொள்ளும்.  மோசடி அல்லது நிதி மாற்றுதல் போன்றவை தொடர்பான திட்டங்கள் நிதியுதவிக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

------



(Release ID: 1591014) Visitor Counter : 408


Read this release in: Gujarati , Urdu , English , Hindi