உள்துறை அமைச்சகம்

‘தீவிரவாதத்திற்கு நிதியுதவி கிடையாது’ என்ற அமைச்சர்கள் அளவிலான மாநாட்டில் பங்கேற்கும் இந்தியக் குழுவிற்கு தலைமையேற்று மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி பயணம்

Posted On: 07 NOV 2019 3:24PM by PIB Chennai

ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் நடைபெறும் ‘தீவிரவாதத்திற்கு நிதியுதவி கிடையாது’ என்ற அமைச்சர்கள் அளவிலான மாநாட்டில்  பங்கேற்கும் ஐந்து உறுப்பினர் இந்தியக் குழுவிற்கு தலைமையேற்று மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி சென்றுள்ளார்.   தேசிய புலனாய்வு முகமையின் தலைமை இயக்குநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். 65 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். மாநாட்டில் பேசிய திரு ரெட்டி, ‘தீவிரவாதத்திற்கு நிதியுதவி கிடையாது’ என்பது பற்றிய அடுத்த மாநாட்டை 2020-ல் இந்தியா நடத்தவிருப்பதாக அறிவித்தார்.

மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய திரு ரெட்டி, தீவிரவாதக் குழுக்களுக்கு சிலநாடுகள் மறைமுக உதவி அளித்து வருவது குறித்த இந்தியாவின் கவலையை வெளிப்படுத்தினார். தீவிரவாதத்தை ஆதரிப்போர் அல்லது தீவிரவாதத்திற்கு நிதி திரட்ட உதவுவோருக்கு எதிராக ஒருங்கிணைந்த உலகளாவிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.  தீவிரவாதத்தை ஒரு போதும் சகித்துக் கொள்ள முடியாது என்ற இந்தியாவின் அணுகுமுறையையும் அவர் தெளிவுபடுத்தினார்.

 

 

2011-ம் ஆண்டிலேயே ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட போதிலும், அல்-கொய்தாவுடன் நெருங்கிய தொடர்புடைய பல்வேறு அமைப்புகள், உலகின் பல பகுதிகளில் இன்னமும் செயல்பட்டு வருவதையும் திரு ரெட்டி சுட்டிக்காட்டினார். அபு பக்கர் அல் பக்தாதி அண்மையில் உயிரிழந்தபோதிலும், அவரது கலிபாக்களை ஒழித்துவிட்டதாக கருத முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாநாட்டுத் தீர்மானத்தில் இடம் பெற வேண்டிய நான்கு அம்சங்களையும் திரு ரெட்டி முன்மொழிந்தார்:

· அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு ஒரே மாபெரும் அச்சுறுத்தல் தீவிரவாதம்தான்.

· ஐ.நா. மேற்பார்வையில் சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான விரிவான உடன்படிக்கை ஒன்றை இறுதி செய்யும் பணியை சம்பந்தப்பட்ட நாடுகள் விரைவுபடுத்த வேண்டும்.

· நிதி செயல்பாட்டு நடவடிக்கைக் குழுவின் தர நிர்ணய முறை  வலுவாக செயல்படுத்தப்படுவதுடன் ஐ.நா. தடை பட்டியல் / நிதி செயல்பாட்டு நடவடிக்கைக் குழுவின் செயல்பாடுகளை அரசியலாக்கக் கூடாது.

· தீவிரவாதமயமாக்கலுக்கான நிதியுதவியைத் தடுப்பது பற்றிய விவாதத்தை மேற்கொள்வதுடன்  தீவிரவாதத்தின் முக்கிய அம்சமாகக் கருதப்படும் தீவிரவாதமயமாதலைத் தடுப்பதாகவும் இருக்க வேண்டும்

தீவிரவாதம் தொடர்பாக, ஆஸ்திரேலிய இணை அமைச்சருடன் நவம்பர் 8 அன்று மெல்பர்னில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கும் திரு ரெட்டி தலைமையேற்கவுள்ளார்.

-----


(Release ID: 1590900) Visitor Counter : 207