பிரதமர் அலுவலகம்

ஆரோக்கிய மந்தன்’ நிறைவு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 01 OCT 2019 8:53PM by PIB Chennai

மேடையில் அமர்ந்திருக்கும் எனது அமைச்சரவை சகாக்கள் டாக்டர் ஹர்ஷ்வர்தன்ஜி, அஸ்வினி குமார் சௌபேஜி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும், நிறுவனங்களில் இருந்தும் வந்திருக்கும் பிரதிநிதிகள், ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து நண்பர்கள், திட்டத்தின் பயனாளிகள் அனைவருக்கும் வணக்கம்.

     இன்று நவராத்திரியின் மூன்றாவது நாள், சந்திரகாந்தா அன்னையை வணங்கும் நாள். நிலவின் குளிர்ச்சியையும், மென்மையையும் பயன்படுத்தி 10 கரங்களைக் கொண்ட சந்திரகாந்தா, உலகத்தின் துன்பங்கள் அனைத்தையும் அழிக்கிறார். இந்தியாவின் 50 கோடிக்கும் மேற்பட்ட ஏழை மக்கள் துன்பங்களை அழிக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் முதலாண்டு இதனுடன் பொருந்தி வருவது சிறப்பாகும்.

உலகின் மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் அனைவரது ஈடுபாட்டாலும், நல்லெண்ணத்தாலும், உறுதிப்பாட்டாலும் பெரும் வெற்றியை அடைந்துள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இந்தப் பெருமை சேரும். இதில் தொடர்புடைய ஆயிரக்கணக்கான அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், அதன் ஊழியர்கள், மருத்துவர்கள், ஆயுஷ்மான் மித்ரா, ஆஷா பணியாளர்கள், சமூக அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள் என அனைவரும் இந்த வெற்றிக்குக் காரணமாவார்கள்.

இந்த ஈடுபாடு காரணமாக நாடு நம்பிக்கையுடனும், பெருமிதத்துடனும் – “ஓராண்டு, ஆயுஷ்மான் அநேகர்” என்று சொல்லமுடிந்துள்ளது. 

நாடு முழுவதும் நோயால் நம்பிக்கையிழந்திருந்த 46 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை என்னும் நம்பிக்கையை இது அளித்திருப்பது  உண்மையிலேயே மிகப் பெரிய சாதனையாகும். இந்த ஓராண்டில் மருத்துவ சிகிச்சைக்காக யாருடைய நிலமோ, வீடோ அல்லது நகையோ, வேறு எந்தப் பொருளோ விற்கப்படுவதிலிருந்து அல்லது அடமானம் வைக்கப்படுவதிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளது.    இதன் காரணமாக ஆயுஷ்மான் இந்தியாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் சற்றுமுன்பு, சில பயனாளிகளிடம் பேசும் வாய்ப்பை நான் பெற்றேன்.  கடந்த ஓராண்டில் தேர்தல் நேரத்தில் கூட நான் நாடு முழுவதும் உள்ள இத்தகைய நண்பர்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தேன்.  இந்தப் பயனாளிகளிடம் பேசியதிலிருந்து, ஆயுஷ்மான் பாரத் அவர்களது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதை உணரமுடிந்தது. இந்தத் திட்டம் அந்த அளவுக்கு வெற்றியைப் பெற்றுள்ளது.  ஏழைக் குடும்பத்தில் குழந்தை ஆரோக்கியமாக இருந்தால், அந்தக் குடும்பத்தில் சம்பாதிப்பவர் ஆரோக்கியமாக வேலைக்குச் சென்றுவர முடியும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை வெற்றி பெறச் செய்த அனைவரையும் நான் வாழ்த்துகிறேன்.

ஆயுஷ்மான் பாரத் புதிய இந்தியாவின் புரட்சிகரமான நடவடிக்கைகளில் ஒன்றாகும். நாட்டின் ஏழைகள் மற்றும் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை காப்பாற்றுவதில் இது முக்கியப் பங்கு வகிப்பதுடன், இந்தியாவின் 130 கோடி மக்களின் ஒட்டுமொத்த உணர்வாக இது விளங்குகிறது. அதனால்தான், ஏழை மக்களுக்கு குறைந்த செலவில் சிறந்த மருத்துவ சிகிச்சையை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வழங்க முடியும் என்று நான் ஏற்கவே கூறியிருந்தேன்.  ஒவ்வொரு மாநிலமும், யூனியன் பிரதேசமும் இதை வெற்றிகரமாகச் செயல்படுத்த இயன்ற அனைத்தையும் செய்துள்ளன.  நாட்டின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஆயுஷ்மான் பாரத் அவருக்கு பயனளிக்கிறது.  முன்பெல்லாம் இது இயலாத காரியமாகவே இருந்தது. கடந்த ஓராண்டில் 50,000 பயனாளிகள் அடுத்த மாநிலங்களில் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். தங்கள் மாநிலத்திற்கு வெளியே சிறந்த மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சைப் பெற்றுள்ளனர்.

ஆயுஷ்மான் பாரத் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதற்கான முழுமையான தீர்வாகும்.  சில நாட்களுக்கு முன்பு, ஐநா சபையில் உலகளாவிய மருத்துவ காப்பீடு குறித்த நிகழ்ச்சியில், இந்தியா பற்றி பேசும் வாய்ப்பை நான் பெற்றேன்.  இந்தியாவின் மருத்துவக் காப்பீடு குறித்து அறிந்து உலகமே வியப்படைந்தது.

நோய்த்தடுப்பு குறைந்த செலவில் மருத்துவ சிகிச்சை, விநியோக சீர்திருத்தங்கள், தேசிய ஊட்டச்சத்து பிரச்சாரம் ஆகிய நான்கு வலுவான தூண்களின் மேல் ஆரோக்கியமான இந்தியா கட்டமைக்கப்பட்டுள்ளதாக நான் உலகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த பிரதிநிதிகளிடம் கூறினேன். 

நாட்டில் 75 புதிய அரசு      மருத்துவக் கல்லூரிகள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.  இந்த மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்ட பிறகு மருத்துவத்துறை மிகப்பெரிய பயன்பெறுவது உறுதி.

புதிய இந்தியாவின் மருத்துவக் காப்பீட்டு முறை உலகம் முழுவதுக்கும் உண்மையான சிறந்த உதாரணமாக இருக்கப் போகிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் இதற்கு முக்கிய பங்களிப்பாக இருக்கும். நமது உறுதிப்பாடு கோடிக்கணக்கான நம்நாட்டு மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பயன்படுவதன் மூலம் நமது முயற்சிகள் வெற்றி பெறுவது நிச்சயம்.

உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.   

 

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1589220) வருகையாளர் எண்ணிக்கை : 185
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , Punjabi , Bengali , Kannada , Assamese , English , Marathi