வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்தியா – பங்களாதேஷ் வர்த்தக அமைப்புக் கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது

Posted On: 04 OCT 2019 1:17PM by PIB Chennai

இந்தியாவும் பங்களாதேஷும் போட்டியாளர்கள் அல்ல, இருநாடுகளையும் வளமுள்ளதாக செய்து இருநாட்டு மக்களின் சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்வதில் இந்த இரு நாடுகளும் ஒத்துழைக்கும் என்று மத்திய வர்த்தக, தொழில்துறை மற்றும் ரயில்வே அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியிருக்கிறார். புதுதில்லியில் இன்று (04.10.2019) நடைபெற்ற இந்தியா – பங்களாதேஷ் வர்த்தக அமைப்புக் கூட்டத்தில் அவர் பேசினார். இக்கூட்டத்தில்  பங்களாதேஷ் பிரதமர் திருமதி ஷேக் ஹசீனா பங்கேற்றார்.

பங்களாதேஷின் அடிப்படை வசதி,  தொழில்நுட்பம், எரிசக்தி, வளர்ச்சியில் இந்தியத் தொழில்துறையினர் கூடுதல் மூலதனத்துடன்  பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட, திரு பியூஷ் கோயல் அந்நாட்டில் பெரிய வாய்ப்புகள் காத்திருப்பதாகக் கூறினார்.   இதனையடுத்து இருநாடுகளுக்கும் இடையே சமச்சீரான வர்த்தகம் நிலவும் என்று அமைச்சர் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய பங்களாதேஷ் பிரதமர், தமது அரசு மற்றும் தொழில்துறையினர் இந்திய வர்த்தகத் தலைவர்களை சந்தித்துப் பேச வாய்ப்பளித்த இந்திய அரசு மற்றும் இந்தியாவின் 3 தொழில்வர்த்தகச் சபைகள் ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்தார்.  பங்களாதேஷில் இந்திய முதலீட்டாளர்களுக்கென 3 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இதனால் பங்களாதேஷின் ஏற்றுமதித் தளம் விரிவடையும் என்றார்.

இந்தக் கூட்டத்தின்போது அரசிடமிருந்து வர்த்தகத்துறைக்கான இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. பங்களாதேஷ் தொடக்க நிறுவனம் மற்றும் டெக் மஹிந்திரா இடையே ஒன்றும், பங்களாதேஷ் பொருளாதார மண்டல ஆணையம் மற்றும் அதானி துறைமுக நிறுவனத்துக்கும் இடையே ஒன்றுமாக இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

   தெற்காசியாவில் பங்களாதேஷ்தான் இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளி. கடந்த பத்தாண்டுகளில் இந்தியா – பங்களாதேஷ் இடையே இருதரப்பு வர்த்தகம் சீராக பெருகிவருகிறது.

 

----


(Release ID: 1587256)