பிரதமர் அலுவலகம்

ஐநா பொது சபையில் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆற்றிய உரை

Posted On: 27 SEP 2019 10:00PM by PIB Chennai

வணக்கம்,

மதிப்புமிகு செயலாளர் அவர்களே,

130 கோடி இந்தியர்களின் சார்பில் ஐக்கிய நாடுகள் சபையின் 74-வது அமர்வில் உரையாற்ற எனக்கு கிடைத்த வாய்ப்பை பெரும் கவுரவமாக கருதுகிறேன்.

இது மிகவும் சிறப்பு வாய்ந்த தருணமும் கூட. ஏனெனில், இந்த ஆண்டில், ஒட்டுமொத்த உலகமும், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த ஆண்டை கொண்டாடி வருகிறது.

சத்தியம் மற்றும் அகிம்சை குறித்த அவரது கருத்துக்கள், உலகின் அமைதி, மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்காக இன்றைய காலத்துக்கும் கூட நமக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது.

செயலாளர் அவர்களே,

இந்த ஆண்டில், உலகின் மிகப்பெரும் தேர்தல் நடைபெற்றது. உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டில், இதுவரை இல்லாத வகையில் எனக்கு அதிக அளவிலான மக்கள் வாக்களித்தனர். இதற்கு முன்பு இருந்ததைவிட, மிகப்பெரும் ஆதரவுடன் எனது அரசு இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ளது.

இதன் காரணமாக, உங்கள் முன்பு மீண்டும் ஒருமுறை நிற்பதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இருந்தாலும், இந்த அமோக ஆதரவு, மிகவும் முக்கியத்துவத்தையும், விரிவான மற்றும் அதிக அளவிலான ஊக்குவிப்பையும் வெளிப்படுத்துகிறது.

செயலாளர் அவர்களே,

ஒரு வளரும் நாடு, தனது நாட்டு மக்களுக்காக வெறும் 5 ஆண்டுகளில் 11 கோடி கழிவறைகளைக் கட்டி, உலகின் மிகப்பெரும் சுகாதார இயக்கத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கும்போது, அதன் அனைத்து சாதனைகளும், பலன்களும் ஒட்டுமொத்த உலகையும் ஊக்குவிக்கும் செய்தியாக உள்ளது.

ஒரு வளரும் நாடு, 50 கோடி மக்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு இலவச சிகிச்சை அளிக்கும் வகையில், உலகின் மிகப்பெரும் சுகாதார காப்பீடு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும்போது; இந்தத் திட்டத்தின் சாதனைகள் மற்றும் முறையான அமைப்புகள், உலகுக்கு புதிய பாதையைக் காட்டுகிறது.

ஒரு வளரும் நாடு, வெறும் 5 ஆண்டுகளில் ஏழை மக்களுக்கு 37 கோடிக்கும் அதிகமான வங்கிக்கணக்குகளைத் தொடங்கி, உலகின் மிகப்பெரும் நிதி உள்ளடக்கத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும்போது, இதன் பலன்கள், ஒட்டுமொத்த உலகில் உள்ள ஏழை மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

ஒரு வளரும் நாடு, தனது மக்களுக்கு உடல்கூறு அடிப்படையிலான அடையாளத்தை வழங்குவதற்கான உலகின் மிகப்பெரும் டிஜிட்டல் அடையாள திட்டத்தை தொடங்குவதன் மூலம், மக்களுக்கு உரிமைகள் கிடைப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஊழலைத் தடுத்து 20 பில்லியன் டாலர்களுக்கும் மேலான தொகையை சேமித்துள்ளது. இந்த நவீன அமைப்பின் பலன்கள், உலகுக்கு புதிய எதிர்பார்ப்பை கொடுத்துள்ளது.

செயலாளர் அவர்களே,

நான் இங்கு வரும்போது, இந்த கட்டிடத்தின் நுழைவுவாயிலில் உள்ள சுவரில், “ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு இடமில்லை” என்று எழுதப்பட்டிருப்பதைப் பார்த்தேன். நான் இங்கு இன்று உரையாற்றிக் கொண்டிருக்கும்போதுகூட, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்க ஒட்டுமொத்த தேசத்திலும் மிகப்பெரும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது என்பதை இந்த அவைக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அடுத்த 5 ஆண்டுகளில், நீர் சேமிப்பை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல், 15 கோடி குடும்பங்களுக்கு நீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதிப்படுத்த உள்ளோம்.

அடுத்த 5 ஆண்டுகளில், 1,25,000 கிலோமீட்டருக்கும் மேலான தொலைவுக்கு புதிய சாலைகளை அமைக்க உள்ளோம்.

இந்தியா, தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் 2022-ம் ஆண்டில், ஏழைகளுக்கு 2 கோடி வீடுகளைக் கட்ட நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

காசநோயை 2030-ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிக்க உலகம் இலக்கு நிர்ணயித்திருந்தபோதிலும், இந்தியாவில் 2025-ம் ஆண்டுக்குள்ளாகவே காசநோயை ஒழிக்கும் வகையில், நாங்கள் செயல்பட்டு  வருகிறோம்.

இந்த அனைத்தையும் எவ்வாறு நம்மால் நிறைவேற்ற முடிந்தது? இந்தியாவில் இவ்வளவு பெரிய மாற்றம் எவ்வாறு ஏற்பட்டது? என்ற கேள்வி எழுகிறது.

செயலாளர் அவர்களே,

இந்தியா ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான மிகப்பெரும் கலாச்சாரத்தைக் கொண்டது. இந்த கலாச்சாரத்துக்கு சொந்தமான பாரம்பரியங்கள் உள்ளன. இது ஒருங்கிணைந்த கனவுகளைத் தாண்டிச் செல்லக் கூடியது. நமது மதிப்புகள் மற்றும் கலாச்சாரம் ஒவ்வொன்றிலும் தெய்வீகத்தன்மையை காண முடியும். அனைவருக்குமான வளத்தை நோக்கி பயணிக்கக் கூடியது.

எனவே, பொதுமக்களின் பங்களிப்புடன் பொதுமக்களின் நலன் என்பதே எங்களது மிகவும் முக்கியமான நிலைப்பாடு. இந்த பொதுமக்கள் நலன் என்பது இந்தியாவுக்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த உலகுக்குமானது.

இதன் காரணமாகவே, ஒருங்கிணைந்த முயற்சி, அனைவருக்கான வளர்ச்சி, ஒவ்வொருவரின் நம்பிக்கை (sabka sath, sabka vikas, sabka vishwas) என்ற நமது குறிக்கோளிலிருந்து ஊக்குவிப்பைப் பெறுகிறோம்.
இதுவும் கூட, இந்திய எல்லைக்குள் மட்டும் அடங்கிவிடவில்லை.

எங்களது முயற்சிகள், இரக்கத்தாலோ, பாவனையின் வெளிப்பாடாகவோ அமைந்ததல்ல. இது எங்களது, கடமை மற்றும் கடமை மட்டுமே என்ற அடிப்படையிலேயே ஊக்குவிக்கப்படுகிறது.

எங்களது அனைத்து முயற்சிகளும் 130 கோடி இந்தியர்களை மையமாகக் கொண்டே அமைகிறது. இந்த முயற்சிகள் நிறைவேற்ற விரும்பும் கனவுகள் என்பது, ஒட்டுமொத்த உலகம், ஒவ்வொரு நாடு, ஒவ்வொரு சமூகம் கொண்டுள்ள கனவாகவே உள்ளது.

முயற்சிகள் என்பது எங்களுடையது, அதன் பலன்கள், அனைவருக்குமானது, ஒட்டுமொத்த உலகுக்குமானது.

இந்த எனது உறுதிப்பாடு, நாள்தோறும் வலுவடைந்து வருகிறது. இந்தியாவைப் போல் உள்ள நாடுகளைப் பற்றி நான் சிந்திக்கும்போது, அவை ஒவ்வொன்றும் வளர்ச்சிக்காக தங்களது சொந்த வழியில் செல்கின்றன என்றே கருதுவேன்.

அவர்களது மகிழ்ச்சிகள் மற்றும் கவலைகளை நான் கேள்விப்படும்போது, அவர்களது கனவுகளை நான் தெரிந்துகொள்ளும்போது, எனது நாட்டை வேகமாக முன்னேற்ற வேண்டும் என்ற எனது உறுதிப்பாடு வலுவடைகிறது. இதன்மூலம், இந்தியாவின் அனுபவங்கள், இந்த நாடுகளுக்கு பயனளிக்கும்.

செயலாளர் அவர்களே,


3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மாபெரும் கவிஞரான கணியன் பூங்குன்றனார், உலகின் மிகவும் பழமையான மொழியான தமிழில் எழுதியுள்ளார்:

“யாதும் ஊரே, யாவரும் கேளிர்”

அனைத்து இடங்களும் நமக்கு சொந்தமானவை மற்றும் அனைவரும் நமது உறவினர்கள் என்பதே இதன் பொருள்.

எல்லையைத் தாண்டிச் செல்லும் இந்த உணர்வு, இந்தியாவின் தனிப்பட்ட செயலாக உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில், தனது நூற்றாண்டு பழமைவாய்ந்த மிகப்பெரும் பாரம்பரியங்களை மற்ற நாடுகளில் வலுப்படுத்துவதற்கு இந்தியா பணியாற்றியுள்ளது. இதேபோல, உலகின் நலனிற்காகவும் பணியாற்றியுள்ளது. இது ஐக்கிய நாடுகளின் முக்கிய நோக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.

இந்தியா கட்டமைக்க விரும்பும் புதிய சர்வதேச கட்டமைப்பில், உலகம் எதிர்கொண்டுவரும் தீவிரமான சவால்கள் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறது.

 

செயலாளர் அவர்களே,

வரலாற்றுப்பூர்வமாகவும், தனிநபர் வாயு வெளியேற்ற அடிப்படையிலும் நீங்கள் பார்த்தீர்களானால், உலக வெப்பமயமாதலுக்கு இந்தியாவின் பங்களிப்பு என்பது மிகவும் குறைவு என்பது தெரியவரும்.

இருந்தாலும், இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில், முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.
ஒரு முனையில், 450 ஜிகாவாட் அளவுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை நிறைவேற்ற பாடுபட்டு வருகிறோம். மற்றொருபுறம், சர்வதேச சூரிய கூட்டமைப்பை ஏற்படுத்தவும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

புவி வெப்பமயமாதலால் ஏற்படும் பாதிப்புகளில் ஒன்றாக, இயற்கை பேரிடர்களின் எண்ணிக்கை மற்றும் தீவிரம் அதிகரிப்பதாக உள்ளது. அதேநேரத்தில், அவை புதிய பகுதிகள் மற்றும் புதிய வடிவில் தோன்றுகின்றன.

இதனைக் கருத்தில் கொண்டு, “இடரை எதிர்கொள்ளும் கட்டமைப்புக்கான கூட்டமைப்பை” (CDRI) உருவாக்கும் முயற்சியை இந்தியா தொடங்கியுள்ளது. இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையிலான கட்டமைப்பை உருவாக்க இந்த கூட்டமைப்பு உதவும்.

செயலாளர் அவர்களே,

ஐநா அமைதிகாப்புப் பணியில் எந்த நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் அதிக அளவில் உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள் என்று பார்த்தால், அது இந்தியா தான்.
உலகுக்கு போரை அல்ல, புத்தரின் அமைதி போதனைகளை வழங்கிய நாட்டைச் சேர்ந்தவர்கள் நாங்கள். இதன் காரணமாகவே, தீவிரவாதத்துக்கு எதிரான எங்களது குரல், இந்த கொடுமையின் தீவிரத்தையும், கொடுமையையும் உலகுக்கு எச்சரிக்கும் வகையில் உள்ளது.

இது எந்தவொரு தனிப்பட்ட நாட்டுக்கும் அல்லாமல், ஒட்டுமொத்த உலகத்துக்கும், மனிதநேயத்துக்கும் மிகப்பெரும் சவால்களில் ஒன்றாக நாங்கள் நம்புகிறோம்.
தீவிரவாதம் மற்றும் அதன் கொள்கைகள் விவகாரத்தில் நமக்கு இடையே ஒற்றுமை இல்லாததே, ஐநா அமைப்பை உருவாக்குவதற்கு அடிப்படையாக அமைந்தது.
இதன் காரணமாகவே, மனிதநேயத்துக்காக, தீவிரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒருங்கிணைய வேண்டும் மற்றும் தீவிரவாதத்துக்கு எதிராக உலகம் ஒன்றாக நிற்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

செயலாளர் அவர்களே,

உலகின் அமைப்பு இன்று மாறியுள்ளது.

21-ம் நூற்றாண்டில் நவீன தொழில்நுட்பங்களால், சமூக வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை, பொருளாதாரம், பாதுகாப்பு, இணைப்பு மற்றும் சர்வதேச நல்லுறவுகளில் மிகப்பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இதுபோன்ற சூழலில், பிளவுபட்ட உலகால், யாருக்கும் பயன் கிடையாது. நமது எல்லைக்குள் நாம் அடங்கிக் கிடப்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல.

இந்த புதிய காலத்தில், பல்துறை அமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகள் அவைக்கு புதிய பாதையையும், சக்தியையும் நாம் வழங்க வேண்டும்.

செயலாளர் அவர்களே,

125 ஆண்டுகளுக்கு முன்பே, சிகாகோவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில், மாபெரும் ஆன்மீக குருவான சுவாமி விவேகானந்தர், உலகுக்கு ஒரு செய்தியை வழங்கினார்.

“நல்லிணக்கம் மற்றும் அமைதி… கருத்து வேறுபாடு கூடாது” என்பதே அந்த செய்தி.

இன்று, சர்வதேச சமூகத்துக்கு உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடு வழங்கும் செய்தி, அதுவாகவே உள்ளது: “நல்லிணக்கம் மற்றும் அமைதி”

உங்களுக்கு மிக்க நன்றி.

*****


(Release ID: 1586658) Visitor Counter : 310