பிரதமர் அலுவலகம்
ஐ நா பொதுச்சபைக் கூட்டத்தில் கரீபிய சமுதாய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் சந்திப்பு
Posted On:
26 SEP 2019 3:30AM by PIB Chennai
நியூயார்க்கில் ஐ நா பொதுச்சபைக் கூட்டத்திற்கு இடையே செப்டம்பர் 25-ஆம் தேதி கரீபிய சமுதாயக்குழுவின் நாடுகளைச் சேர்ந்த 14 தலைவர்களை பிரதமர் திரு மோடி சந்தித்தார். கரீபிய நாடுகளுடனான இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க இனிய உறவுகளின் புதிய உத்வேகத்தை இந்தச் சந்திப்பின்போது காண முடிந்தது. செயின்ட் லூசியாவின் பிரதமரும், கரீபிய நாடுகள் குழுவின் தலைவருமான திரு ஆலன் செஸ்டனெட் இந்த கூட்டத்தின் இணைத் தலைவராக கலந்துகொண்டார். ஆன்டிகுவா மற்றும் பார்புடா, பார்படாஸ், டொமினிக்கா, ஜமைக்கா, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், செயின்ட் லுசியா, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரேனடியன்ஸ், ட்ரினிடாட் மற்றும் டெபாக்கோ ஆகிய நாடுகளின் தலைவர்கள், சுரினாமின் துணை அதிபர், பஹாமாஸ், பெலிஸ், கிரெனடா, ஹைத்தி, கயானா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கரீபிய சமுதாய நாடுகளின் தலைவர்களை பிராந்திய அளவில் பிரதமர் மோடி சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இந்தியாவுக்கும், கரீபிய நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மட்டுமல்லாமல், பிராந்திய அளவிலும் உறவுகளைத் தொடர்ந்து வலுப்படுத்த இந்தக் கூட்டம் பயன்படுத்தப்பட்டது. கரீபிய நாடுகளுடன் அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சார ரீதியாக உறவை வலுப்படுத்த இந்தியா உறுதிபூண்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். கரீபிய நாடுகளில் 10 லட்சம் இந்திய சமுதாயத்தினர் இருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்த நாடுகளுடன் துடிப்புமிக்க நட்புப்பாலமாக அவர்கள் திகழ்வதாகத் தெரிவித்தார்.
அரசியல் உறவை பலப்படுத்துவது, பேச்சுவார்த்தை நடைமுறைகளை ஏற்படுத்துவது, பொருளாதார ஒத்துழைப்பை ஊக்குவிப்பது, வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது, மக்களுக்கு இடையிலான உறவுகளை மேலும் வேகமாக மேம்படுத்துவது குறித்து இந்தக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. திறமைகளை வளர்த்தெடுப்பது, மேம்பாட்டுக்கான உதவி, பேரிடர் மேலாண்மையில் ஒத்துழைப்பு ஆகியவற்றில் கரீபிய நாடுகளுடன் கூட்டாக செயல்படுவதன் அவசியம் குறித்து பிரதமர் மோடி விளக்கினார். சர்வதேச சூரிய சக்தி கூட்டணி, பேரிடர் தடுப்பு கட்டமைப்பு ஆகியவற்றில் சேருமாறு கரீபிய நாடுகளுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். கரீபிய பிராந்தியத்தை தாக்கிய டோரியன் புயலால் ஏற்பட்ட பேரழிவு குறித்து பிரதமர் தமது இரங்கலை தெரிவித்துக் கொண்டார். இந்த புயலால் மிகவும் பாதிக்கப்பட்ட பஹாமா தீவுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் உடனடி நிதியுதவியை இந்தியா வழங்கியதை அவர் சுட்டிக்காட்டினார்.
பிரதமர் மோடி கரீபிய நாடுகளின் சமுதாய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 14 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்குவதாக அறிவித்தார். சூரிய சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான திட்டங்களுக்கு மேலும் 150 மில்லியன் டாலர் கடனுதவி வழங்குவதாக அவர் தெரிவித்தார். கயானாவில் உள்ள ஜார்ஜ் டவுனில் தகவல் தொழில்நுட்பத் திறன் பிராந்திய மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். பெலிசில் இந்தியாவின் நிதியுதவியுடன் செயல்படும் மையங்களை மேம்படுத்தும் வகையில், பிராந்திய தொழிற்பயிற்சி மையம் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். கரீபிய நாடுகளின் தேவைகளை கருத்தில்கொண்டு, இந்தியத் தரப்பில் பிரத்யேக திறன்மேம்பாட்டு வகுப்புகள், பயிற்சி மற்றும் இந்திய நிபுணர்களை பணியமர்த்துதல் போன்றவை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. கரீபிய நாடுகளின் நாடாளுமன்றக்குழு விரைவில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்புவிடுத்தார்.
இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் உறவுகளை வலுப்படுத்த பிரதமர் மோடி அறிவித்துள்ள முன்முயற்சிகளை கரீபிய நாடுகளின் தலைவர்கள் வரவேற்றனர். இந்த நடவடிக்கைகளுக்கு தங்களது நாடுகளின் அரசாங்கங்கள் முழு ஆதரவு அளிக்கும் என்று அவர்கள் உறுதியளித்தனர்.
இருதரப்பு ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் உள்ள பகுதிகளை விரைந்து அடையாளம் கண்டு தொடர்ந்து முன்னேற்றம் காண்பது பற்றிய ஆய்வை மேற்கொள்ள கூட்டு பணிக்குழு ஒன்றை அமைப்பது என இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
***
(Release ID: 1586389)
Visitor Counter : 268