பிரதமர் அலுவலகம்

உலகளாவிய சுகாதார சேவை தொடர்பான ஐ.நா. பொதுச்சபையின் உயர்மட்டக் கூட்டத்தில் பிரதமர் உரை

Posted On: 23 SEP 2019 11:50PM by PIB Chennai

உலகளாவிய சுகாதார சேவை தொடர்பான ஐ.நா. பொதுச்சபையின் முதலாவது உயர்மட்டக் கூட்டத்தில் பிரதமர் திரு.நரேந்திர மோடி 23 செப்டம்பர் 2019 அன்று உரையாற்றினார்.

உலகளாவிய சுகாதார சேவையை எட்டுவதற்கு இந்தியா மேற்கொண்ட உறுதியான நடவடிக்கைகளை பிரதமர் தமது உரையில் சுட்டிக்காட்டினார். ஆரோக்கியம் என்பது நோய்களிலிருந்து விடுபடுவது மட்டுமல்ல என்றும் அவர் கூறினார். ஆரோக்கியமான வாழ்க்கை என்பது ஒவ்வொரு மனிதனின் உரிமை. இதனை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டார்.

      இந்தக் குறிக்கோளை அடைய முழுமையான அணுகுமுறை ஒன்றை பின்பற்றி வரும் இந்தியா, சுகாதார சேவையின் கீழ்காணும் 4 முக்கிய அம்சங்களையும் செயல்படுத்தி வருகிறது:

  • தடுப்பு மருத்துவம்
  • குறைந்த கட்டணத்தில் சுகாதார சேவை
  • மருந்து விநியோகத்தில் மேம்பாடு
  • இயக்கமாக நடைமுறைப்படுத்துதல்

 

தடுப்பு மருத்துவ முறையை ஊக்குவித்து, நீரிழிவு, ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற வாழ்வியல் நோய்களைக் கட்டுப்படுத்த, யோகா, ஆயுர்வேதம் மற்றும் கட்டுடல் திட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்தப்படுவதோடு 1,25,000-க்கும் மேற்பட்ட நலவாழ்வு மையங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார். இ - சிகரெட் தடை, தூய்மை இந்தியா இயக்கத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு தடுப்பூசி இயக்கங்களும் சுகாதார மேம்பாட்டிற்கு உதவியுள்ளன.

“குறைந்த கட்டணத்தில் சுகாதார சேவை கிடைப்பதை உறுதி செய்ய, உலகின் மிகப் பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான்பாரத்தை இந்தியா செயல்படுத்தத் தொடங்கி உள்ளது. இத்திட்டத்தின் கீழ், 500 மில்லியன் ஏழை மக்களுக்கு, ஆண்டுக்கு தலா 5 லட்சம் ரூபாய் (7 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு மேல்) வரை இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு மருந்தகங்களில், 800-க்கும் மேற்பட்ட வகைகளை சேர்ந்த உயிர் காக்கும் மருந்துகள் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன” என்றும் பிரதமர் தெரிவித்தார்.

தரமான மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவக் கட்டமைப்பு வசதியை உறுதி செய்ய இந்தியா மேற்கொண்டு வரும் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கைகளையும் அவர் பட்டியலிட்டார்.

சுகாதாரத் துறையில் பல்வேறு திட்டங்கள் மக்கள் இயக்கமாக மேற்கொள்ளப்படுவதை சுட்டிக்காட்டிய பிரதமர், தாய் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவை மேம்படுத்த தேசிய ஊட்டச்சத்து இயக்கம் முக்கிய பங்காற்றுவதாகக் கூறினார். காசநோயை 2025 ஆம் ஆண்டுக்குள் ஒழிக்க உறுதிபூண்டுள்ள இந்தியா, உலகளாவிய இலக்கான 2030 ஆம் ஆண்டுக்கு 5 ஆண்டுகள் முன்பாகவே இந்தியா இந்த நிலையை எட்டி விடும் என்றும் குறிப்பிட்டார். காற்று மாசு மற்றும் விலங்குகள் மூலமாக பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு இயக்கங்கள் மிக முக்கியமானவை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் முயற்சிகளுக்கு எல்லை ஏதும் வரையறுக்கப்படவில்லை. ஆப்பிரிக்க நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளுக்கு தொலை-மருத்துவ முறையில் இந்தியா குறைந்த செலவிலான சுகாதார சேவை கிடைக்க உதவி வருகிறது.

“உலகளாவிய சுகாதார சேவை: ஆரோக்கியமான உலகை நோக்கி” என்பதை மையக் கருத்தாக கொண்டு நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், உலகளாவிய சுகாதார சேவையில் வளர்ச்சியை விரைவுபடுத்துவதே முக்கிய நோக்கமாக இருந்தது. 2030-க்குள் உலகளாவிய சுகாதார சேவையை அடைவதற்கான வளர்ச்சியை விரைவுபடுத்த பல்வேறு நாடுகள் மற்றும் அரசுகளின் தலைவர்களிடம் அரசியல் ரீதியான உறுதியை உலக சமுதாயத்திற்கு பெற்றுத் தருவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

ஐ.நா. சபையில் உறுப்பினராக உள்ள சுமார் 160 நாடுகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளன.

நிதி இடர் பாதுகாப்பு, தரமான அத்தியாவசிய சுகாதார சேவைகள் கிடைக்கச் செய்தல் மற்றும் பாதுகாப்பு, வலுவான, தரமான குறைந்த செலவிலான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய ஏதுவாக 2030-க்குள் உலகளாவிய சுகாதார சேவையை எட்டுவதென, 2015-ல் உலக நாடுகள் மற்றும் அரசுகளின் தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

 

***



(Release ID: 1586026) Visitor Counter : 153