பிரதமர் அலுவலகம்

ஐ.நா பொதுச்சபையின் 74வது அமர்வில், 2019 பருவநிலை செயல்திட்ட உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை

Posted On: 23 SEP 2019 9:27PM by PIB Chennai

உலக அளவில் பருவநிலை உச்சி மாநாட்டிற்கு  ஏற்பாடு செய்துள்ள ஐ.நா. பொதுச்செயலாளருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஆண்டு புவிசார் சாம்பியன் விருதை பெற்றதைத் தொடர்ந்து, ஐ.நா.வில் நான் இப்போது உரையாற்றுவதை எனக்கு கிடைத்த முதல் வாய்ப்பாகக் கருதுகிறேன். நியூயார்க் நகருக்கு நான் வருகை தந்தபோது, எனது முதல் கூட்டம் பருவநிலை தொடர்பாக இருப்பது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

சான்றோர்களே,

பருவநிலை மாற்றம் குறித்து, போராடுவதற்கு பல்வேறு நாடுகள் பலதரப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

பருவநிலை மாற்றம் போன்ற தீவிரமான சவாலில் இருந்து மீண்டு வரவேண்டுமானால், நாம் இத்தருணத்தில் மேற்கொண்டுவரும் முயற்சிகள் போதுமானதாக இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இன்றைய தேவை என்னவென்றால், ஒருங்கிணைந்த அணுகுமுறையாகும். கல்வியிலிருந்து மதிப்புசார்ந்த திட்டங்கள் வரையிலும், வாழ்க்கை நடைமுறையிலிருந்து வளர்ச்சிக்கான தத்துவம் வரையிலும், அனைத்தையும் இந்த அணுகுமுறை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். நடத்தை முறையில், மாற்றத்தை கொண்டுவரும் வகையில், உலக அளவில், மக்கள் இயக்கம் உருவாக வேண்டும் என்பதுதான் நமது தேவையாகும்.

இயற்கையை மதிப்பது, வளங்களை நியாயமான முறையில் பயன்படுத்துவது, நமது தேவைகளைக் குறைப்பது, நமது வளங்களுக்கு உட்பட்டு வாழ்வது ஆகியவையெல்லாம் நமது பாரம்பரிய மற்றும் தற்போதைய முயற்சிகளின் முக்கிய அம்சங்களாகும். பேராசை கொள்ளத் தேவையில்லை என்பது நமக்கு வழிகாட்டும் கொள்கையாக இருக்க வேண்டும்.

எனவே, இப்பிரச்சினையின் மோசமான நிலை குறித்து, பேசுவதற்காக மட்டுமல்ல, நடைமுறையில் இது தொடர்பான  அணுகுமுறை மற்றும் திட்டம் குறித்தும் பேசுவதற்கும் இந்தியா இன்று முன்வந்துள்ளது. ஒரு அவுன்ஸ் பயிற்சி ஒரு டன் போதனையை விட கூடுதல் மதிப்பு வாய்ந்தது என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

இந்தியாவில் புதை படிவமற்ற எரிபொருளின் பங்கை, நாம் அதிகரிக்க இருக்கிறோம். 2022-ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அளவை 175 ஜிகாவாட்டுக்கு அதிகமாகவும், பின்னர் 450 ஜிகாவாட் வரையிலும் மேம்படுத்த நாம் திட்டமிட்டுள்ளோம்.

இந்தியாவில் நமது போக்குவரத்துத் துறையை மின் இயக்கமாக மாற்றவும் திட்டமிட்டுள்ளோம்.

 பெட்ரோல் மற்றும் டீசலில் உயிரி எரிபொருள் கலவையை போதுமான அளவில் அதிகரிக்கவும், இந்தியா செயலாற்றி வருகிறது.

150 மில்லியன் குடும்பங்களுக்கு தூய்மையான சமையல் எரிவாயு இணைப்பை நாம் வழங்கி இருக்கிறோம்.

தண்ணீரை சேமிக்கவும், மழை நீரை சேமிக்கவும், நீர் ஆதாரங்களை மேம்படுத்தவும், நீர் ஆதார-இயக்கத்தை நாம் தொடங்கியிருக்கிறோம். இதற்காக ஏறத்தாழ 50 பில்லியன் டாலரை அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா செலவிட உள்ளது.

சர்வதேச அரங்கில், சுமார் 80 நாடுகள் நமது சர்வதேச சூரிய சக்தி கூட்டணி இயக்கத்தில் இணைந்துள்ளன. இந்தியாவும், சுவீடனும், இதர பங்குதாரர்களுடன் இணைந்து,  தொழில் மாற்றத்திற்கான வழியில், தலைமைப் பண்புக்கான குழுவை உருவாக்க முனைந்துள்ளதன. இந்த முயற்சி அரசுகளுக்கும், தனியார் துறைக்கும் தொழில்நுட்ப புதிய கண்டுப்பிடிப்பு துறையில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை வழங்கும் அரங்கமாக அமையும். தொழில் துறைக்கு குறைந்த கார்பன் வழிகளை மேம்படுத்துவதற்கு இது உதவும்.

பேரழிவை தடுக்கும் பேரழிவு சீரமைப்பு உள்கட்டமைப்பு கூட்டமைப்பை இந்தியா உருவாக்கி வருகிறது. இந்தக் கூட்டமைப்பில் இணைய உறுப்பு நாடுகளுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்.

இந்த ஆண்டு, இந்தியாவின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று, ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருவதை மக்கள் இயக்கமாக உருவாக்க நாம் அழைப்பு விடுத்துள்ளோம். இந்த பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் மோசமான விளைவுகள் குறித்து உலக அளவில் இது விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நான் நம்புகிறேன்.

சான்றோர்களே,

இந்தியாவின் ஒரு மில்லியன் டாலர் நிதி உதவியோடு, ஐ.நா கட்டிடத்தின் மேற்கூரையில், சூரிய தகடுகள் அமைக்கும் பணியை நாளை நாம் தொடங்கி வைக்க இருப்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

பேசுவதற்கான நேரம் முடிவுற்றது; தற்போது செயலாற்றுவதுதான் உலக நாடுகளின் தேவையாக உள்ளது.

நன்றி, மிக்க நன்றி.

                              ******


(Release ID: 1586005) Visitor Counter : 162