மத்திய அமைச்சரவை
பேரிடர் மறுசீரமைப்பு கட்டமைப்புக்கான சர்வதேச கூட்டமைப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
2019 செப்டம்பர் 23 அன்று, நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா. பருவநிலை
மாநாட்டின் போது பிரதமர் இந்த கூட்டணியை தொடங்கிவைக்க உள்ளார்
Posted On:
28 AUG 2019 7:42PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பேரிடர் மறுசீரமைப்பு கட்டமைப்புக்கான சர்வதேச கூட்டமைப்பை உருவாக்கவும், அதற்கான செயலகத்தை புதுதில்லியில் அமைக்கவும் பின்னேற்பு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு 2019 ஆகஸ்ட் 13 அன்று பிரதமர் அனுமதி அளித்துள்ளார்.
இந்த பேரிடர் மறுசீரமைப்பு கட்டமைப்பு கூட்டமைப்பு, அமெரிக்காவின் நியூயார்க்கில், 23 செப்டம்பர் 2019 அன்று நடைபெறவுள்ள ஐ.நா. பருவநிலை மாநாட்டின் போது தொடங்கிவைக்கப்பட உள்ளது. ஐ.நா. பொதுச் செயலாளரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடு, ஏராளமான நாடுகளின் தலைவர்களை ஓரிடத்தில் திரளச் செய்வதோடு, பருவநிலை மாற்றம் மற்றும் அதன் காரணமாக ஏற்படக் கூடிய பேரிடர் விளைவுகளை எதிர்கொள்வதற்கான வாக்குறுதிகளை வழங்குவதற்கும் பேரிடர் மறுசீரமைப்பு கட்டமைப்பு கூட்டணிக்குத் தேவையான உயர்மட்ட கண்காணிப்பு நிலையை வழங்குவதற்கும் உதவும்.
கீழ்கண்ட நடவடிக்கைகளுக்கும் இந்த ஒப்புதல் வகை செய்கிறது.
- சர்வதேச அளவிலான “பேரிடர் மறுசீரமைப்பு கட்டமைப்பு கூட்டமைப்பை” உருவாக்கி, அதன் செயலகத்தை புதுதில்லியில் அமைத்தல்;
- பேரிடர் மறுசீரமைப்பு கட்டமைப்பு கூட்டமைப்புக்கான செயலகத்தை, சங்கங்கள் பதிவுச் சட்டம் 1860-ன்படி, புதுதில்லியில் செயல்படும் ஒரு சங்கமாக, அதாவது “சிடிஆர்ஐ சொஸைட்டி” அல்லது இதே பொருள்படும் பெயரில் பதிவு செய்வது. “சிடிஆர்ஐ சொஸைட்டி”-க்கான சட்டத்திட்ட விதிகள் மற்றும் சங்கப் பதிவு குறிப்புகளை தயாரித்தல் மற்றும் வருங்காலத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் ஒப்புதல் அளிக்கப் பெறுவது;
- மத்திய அரசு சார்பில் பேரிடர் மறுசீரமைப்பு கட்டமைப்பு கூட்டமைப்புக்குத் தேவையான செயல்பாட்டின் நிதியாக ரூ.480 கோடி வழங்கவும் கொள்கை அளவில் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிதியைக் கொண்டு தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதோடு, ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும், செயலக அமைப்பு பணிக்கு 2019-20 முதல் 2023-24 வரையிலான ஐந்தாண்டுகளுக்குத் தேவைப்படும் தொடர் செலவினத்திற்கும் பயன்படுத்தப்படும்; மற்றும்
- ஒப்புதல் அளிக்கப்பட்ட பட்டய ஆவணங்கள், பேரிடர் மறுசீரமைப்பு கட்டமைப்பு கூட்டமைப்புக்கான தொடக்கக் கால ஆவணங்களாக பயன்படுத்தப்படும். இந்த பட்டய ஆவணத்திற்கான கருத்துருக்கள், வெளியுறவு அமைச்சகத்தின் ஆலோசனையுடன், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால், முக்கிய உறுப்பு நாடுகளிடமிருந்து பெறப்படும்.
முக்கிய விளைவுகள்:
பேரிடர் மறுசீரமைப்பு கட்டமைப்பு கூட்டமைப்பு, பல்வேறு அறிவாற்றல் உருவாகக் கூடிய மற்றும் பேரிடர் மற்றும் பருவநிலை மறுசீரமைப்பு கட்டமைப்புக்கான பல்வேறு அம்சங்கள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் அமைப்பாகத் திகழும். பல்வேறு உறுப்பு நாடுகளின் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை ஓரணியில் திரட்டவும் இது உதவும். அதுபோன்று செய்வதன்மூலம், கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் தத்தமது செயல்பாட்டை மேம்படுத்திக் கொள்வதுடன், அவரவர் பாதிப்புக்கு ஏற்றவாறும், பொருளாதாரத் தேவைகளுக்கும் ஏற்ற கட்டமைப்புகளை உருவாக்கிக் கொள்ளவும் வழிவகுக்கும்.
இந்த முன்முயற்சி சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் பயனளிப்பதாக இருக்கும். குறிப்பாக, பேரிடர்களின் போது பெரும் பாதிப்புக்கு ஆளாகக் கூடியவர்களான, பொருளாதார ரீதியான நலிவடைந்த பிரிவினர், பெண்கள் மற்றும் குழந்தைகளை மீட்டெடுக்க இது உதவிகரமாக இருக்கும். அடிக்கடி நிலநடுக்க பாதிப்புக்கு ஆளாகக் கூடிய இந்தியாவின் வடகிழக்கு மற்றும் இமயமலைப் பிராந்தியங்களிலும், புயல், சுனாமி மற்றும் வறட்சிக்கு ஆளாகக் கூடிய மத்திய தீபகற்பப் பகுதிகளுக்கும் இது பேருதவியாக அமையும்.
கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in. என்ற இணையதளத்தைக் காணவும்.
*****
(Release ID: 1583373)
Visitor Counter : 251