கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

உலகிலேயே முதன்முறையாக மாலுமிகள் முகத்தின் வழி பயோமெட்ரிக் அடையாள தகவல் ஆவணத்தை திரு. மன்சுக் மண்டாவியா வெளியிட்டார்

Posted On: 28 AUG 2019 3:57PM by PIB Chennai

உலகிலேயே முதன்முறையாக மாலுமிகள் முகத்தின் வழியான பயோமெட்ரிக் அடையாள ஆவணத்தை வழங்கும் முதல் நாடாகியுள்ளது இந்தியா. இந்த நடைமுறையை புதுதில்லியில் இன்று மத்திய கப்பல் போக்குவரத்து, ரசாயனங்கள் மற்றும் உரத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. மன்சுக் மண்டாவியா தொடங்கி வைத்தார். ஐந்து இந்திய மாலுமிகளுக்கு அடையாள ஆவணங்களையும் அவர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், மாலுமிகளின் செயல்பாடுகள் அதிகரித்துள்ள பின்னணியில், இத்தகைய வளர்ச்சி இன்று மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது என்றார். இந்த ஆவணம் நமது மாலுமிகளை முழுமையாக அடையாளம் காண்பதற்கு உதவுவதோடு, உலகின் எந்தப்பகுதியில் இருந்தாலும் அடையாளம் காணவும் வசதியாக இருக்கும் என்று அவர் கூறினார். 

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 185-வது மாநாட்டில் இந்தப் புதிய அடையாள அட்டைக்கு ஏற்பு அளிக்கப்பட்டது. இந்த மாநாட்டு தீர்மானத்தை இந்தியா அக்டோபர் 2015-ல் ஏற்றுக் கொண்டது.

மாலுமிகளுக்கான இந்தப் புதிய பயோமெட்ரிக் அடையாள ஆவணம் நவீன பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதாகும்.  இந்த ஆவணத்தை வைத்திருப்பவரின் முகத்தோடு பாஸ்போர்ட்டில் உள்ள புகைப்படம் மென்பொருள் மூலம் சரிபார்க்கப்பட்டு அடையாளம் உறுதி செய்யப்படும் என்று அமைச்சர் கூறினார்..

இத்தகைய அடையாள அட்டைகளுக்கான தகவல் சேகரிப்பு மையங்கள் மும்பை, கொல்கத்தா, சென்னை, நொய்டா, கோவா, புதிய மங்களூர், கொச்சி, விசாகப்பட்டினம், கன்ட்லா ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ளன.

மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள தொடர்ச்சியான பணிச் சான்றிதழ் வைத்திருக்கும் இந்திய மாலுமிகள் ஒவ்வொருவரும் இந்த அடையாள ஆவணம் பெறும் தகுதியுள்ளவர் ஆவார். மொத்தமுள்ள 3 லட்சத்து, 50 ஆயிரம் மாலுமிகளுக்கும் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் பயோமெட்ரிக் அடையாள ஆவணம் வழங்கப்பட்டுவிடும்.  இதற்குப் பின், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 ஆயிரம் புதிய மாலுமிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டியிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

-------



(Release ID: 1583267) Visitor Counter : 265