பிரதமர் அலுவலகம்
ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகியவற்றின் தீரம் மிக்க உறுதி வாய்ந்த சகோதர, சகோதரிகளுக்குப் பிரதமர் வணக்கம் தெரிவித்துள்ளார்
ஜம்மு, காஷ்மீர் குறித்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முக்கியமான தருணம் என்றும் அவர் கூறியுள்ளார்
प्रविष्टि तिथि:
06 AUG 2019 8:32PM by PIB Chennai
ஜம்மு, காஷ்மீர் தொடர்பான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதை “நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முக்கியமான தருணம்” என்று குறிப்பிட்டு அதனைப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.
தொடர்ச்சியாகப் பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகளில், “நாம் ஒன்றுபட்டு எழுந்து, ஒன்றுபட்டு 130 கோடி இந்தியர்களின் கனவுகளை நிறைவேற்ற முடியும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகியவற்றின் தீரம் மிக்க, உறுதி வாய்ந்த எனது சகோதர, சகோதரிகளை நான் வணங்குகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
“உணர்ச்சியைத் தூண்டும் குறுக்குவழியில் நம்பிக்கை கொண்ட தன்னலவாதிகள் மக்களுக்கு அதிகாரமளித்தல் பற்றி கவலைப்படாமல் பல ஆண்டுகளாக இருந்தனர். அவர்கள் பூட்டிய விலங்குகளிலிருந்து ஜம்மு, காஷ்மீர் இன்று விடுதலை அடைந்துள்ளது. புதிய விடியல் பிறந்துள்ளது. சிறந்த எதிர்காலத்திற்காகக் காத்திருக்கிறது!” என்று பிரதமர் மேலும் கூறியுள்ளார்.
“ஜம்மு, காஷ்மீர் லடாக் தொடர்பான மசோதாக்கள் ஒருமைப்பாட்டையும், அதிகாரம் அளித்தலையும் உறுதி செய்யும். இந்த நடவடிக்கைகள் இளைஞர்களைப் பிரதான நீரோட்டத்திற்குக் கொண்டுவரும். தங்களின் திறன்களையும், திறமைகளையும் வெளிப்படுத்துவதற்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்கும். உள்ளூர் கட்டமைப்பு வசதிகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு மேம்படும்” என்றும் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார்.
லடாக் மக்களுக்கு சிறப்பான வாழ்த்துகளை அவர் தெரிவித்துள்ளார். “யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்ற அவர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பது மாபெரும் மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். இந்த முடிவு அப்பகுதியின் ஒட்டு மொத்த வளமைக்கு உத்வேகம் அளிக்கும் என்றும், சிறந்த வளர்ச்சி வாய்ப்புகளை உறுதி செய்யும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
“ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகியவை தொடர்பான முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருப்பது இந்தியாவின் ஒற்றுமைக்குப் பாடுபட்ட மாமனிதர் சர்தார் பட்டேல், டாக்டர் பாபா சாஹேப், அம்பேத்கர், அவரது கருத்துக்கள் அனைவரும் அறிந்ததாகும். இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் தமது வாழ்நாளை அர்ப்பணித்த டாக்டர் எஸ்.பி.முகர்ஜி ஆகியோருக்கு செலுத்தும் தகுதி வாய்ந்த மரியாதையாகும்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
“நாடாளுமன்றத்தில் அரசியல் கட்சிகள் சித்தாந்த வேறுபாடுகளைக் கடந்து ஆரோக்கியமான விவாதத்தில் பங்கேற்றது நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் பெருமிதத்தை உயர்த்திய தருணமாகும். இதற்காகப் பல்வேறு அரசியல் கட்சிகள், அவற்றின் தலைவர்கள் மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை நான் பாராட்டுகிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேறுபாடுகளைக் கடந்து, இந்தப் பகுதிகளின் எதிர்காலம் பற்றியும் அங்கு அமைதி, முன்னேற்றம், வளம் ஆகியவற்றை உறுதி செய்வது பற்றியும் விவாதித்தது குறித்து ஜம்மு, காஷ்மீர், லடாக் மக்கள் பெருமிதம் கொள்ளலாம். மாநிலங்களவையில் 125:61, மக்களவையில் 370:70 என்ற இறுதியான எண்ணிக்கை மூலம் விரிவான ஆதரவைத் தெளிவாகக் காண முடியும்” என்று மற்றொரு டுவிட்டர் செய்தியில் பிரதமர் கூறியுள்ளார்.
“இந்தியாவின் குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான திரு.வெங்கையா நாயுடு அவர்களும், மக்களவைத் தலைவர் திரு.ஓம் பிர்லா அவர்களும் இரு அவைகளிலும் மிகச் சிறந்த முறையில் நடவடிக்கைகளை வழிநடத்திச் சென்றனர். இதற்காக ஒட்டு மொத்த தேசமும் பாராட்டும் தகுதியை அவர்கள் பெற்றுள்ளனர்” என்றும் அவர் கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அவர் சிறப்புப் பாராட்டு தெரிவித்துள்ளார். “ஜம்மு, காஷ்மீர். லடாக் மக்களுக்கு சிறந்த வாழ்க்கையை உறுதி செய்வதற்காக நமது உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தொடர்ச்சியாகப் பணியாற்றி வந்துள்ளார். இந்த மசோதாக்கள் நிறைவேறியதில் அவரது உறுதிப்பாட்டையும், ஊக்கத்தையும் தெளிவாகக் காண முடியும். அமித் அவர்களுக்கு சிறப்புப் பாராட்டுக்களைத் தெரிவிக்க நான் விரும்புகிறேன்”.
********
(रिलीज़ आईडी: 1581435)
आगंतुक पटल : 284