தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

ஐஐஎஸ் அதிகாரிகளின் 2-வது அகில இந்திய வருடாந்திர மாநாடு

Posted On: 05 AUG 2019 5:21PM by PIB Chennai

இந்திய தகவல் பணி அதிகாரிகளின் 2-வது அகில இந்திய வருடாந்திர மாநாடு புதுதில்லியில் உள்ள பிரவாசி பாரதீய கேந்திரியாவில் இன்று (05.08.2019) நடைபெற்றது. மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் அனைத்து ஊடகப் பிரிவுகளிடையே சிறப்பான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி அரசு தகவல் தொடர்பு பணிகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

     ஒருங்கிணைந்த மற்றும் மையக் கருத்து சார்ந்த தகவல் தொடர்பு அணுகுமுறை; சமூக ஊடகங்களின் பயன்பாட்டை பிராந்திய அளவில் விரிவுபடுத்துவது மற்றும் ஒருங்கிணைந்த தகவல் பலகை பயன்பாடு, அரசு தகவல் தொடர்பு விளைவு மதிப்பீட்டு கட்டமைப்பை அங்கீகரித்தல், குருநானக்கின் 550-வது பிறந்த நாள், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள், இந்தியா சுதந்திரம் அடைந்ததன் 75-ஆம் ஆண்டு மற்றும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் பொன்விழா கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இம்மாநாட்டில் தனித்தனி அரங்குகளாக விவாதிக்கப்பட்டது. மேலும், தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகப் பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்தும் இம்மாநாட்டில் ஆய்வு செய்யப்பட்டது.

     இம்மாநாட்டையொட்டி, மத்திய அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவ்டேகர் வெளியிட்டுள்ள செய்தியில், அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்தும், அவை பற்றிய கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தியுள்ளார். இந்திய தகவல்பணி அதிகாரிகள், அரசின் கண் மற்றும் காது போன்று செயல்படுபவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனித்தனியாக செயல்படும் போக்கை கைவிட்டு, அரசின் சகோதர ஊடகப்பிரிவு அதிகாரிகளுடன் இணக்கமாக செயல்பட்டு, தகவல் தெரிவிப்பதற்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையைப் பின்பற்றுமாறும் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். மக்கள் தொடர்பு நிறுவனங்களுடன் நல்லுறவை ஏற்படுத்தி, பணி சார்ந்த பயிற்சித் திட்டங்கள் மூலம், மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப, அரசின் ஊடகத் தொடர்புப் பணிகளை ஈர்க்கத்தக்கவகையில் மாற்றுவதற்கு இளைஞர்களின் திறமையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

     மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை செயலாளர் திரு.அமித் கரே, அரசின் தகவல் தொடர்புப் பணிகளை, துறைவாரியாக அணுகுவதற்குப் பதிலாக ஒட்டுமொத்த, குறிப்பிட்ட அம்சம் சார்ந்த, மக்களுக்கேற்ற வகையில் உள்ளதாக கையாள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.  பொதுமக்களின் பங்களிப்பை உறுதி செய்ய, குறிப்பாக அரசு திட்டப் பயனாளிகளின் பங்களிப்பை உறுதிசெய்யும் விதமாக பொதுமக்களை உள்ளடக்கிய தகவல் தொடர்பு அணுகுமுறையை பின்பற்றுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.  அரசின் தகவல் தொடர்புப் பணிகளில் டிஜிட்டல்மயத்தை பெருமளவுக்கு பின்பற்றி, செய்தி வெளியீடுகளை சுருக்கமான வீடியோ பதிவுகளாக வெளியிடுமாறும் திரு. அமித் கரே வலியுறுத்தினார்.

     நாடுமுழுவதும் பணியாற்றும் முதுநிலை இந்திய தகவல்பணி அதிகாரிகள், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், பிரஸார் பாரதி மற்றும் இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் அதிகாரிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

 

***********

 


(Release ID: 1581298) Visitor Counter : 178