தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

வெளியீட்டுப் பிரிவில் பல்வேறு இ-திட்டங்களை திரு. பிரகாஷ் ஜவடேகர் தொடங்கி வைத்தார்

Posted On: 31 JUL 2019 12:21PM by PIB Chennai

மக்களின் வாசிப்புக் கலாச்சாரத்தை மீண்டும் வலுப்படுத்த வேண்டும்: பிரகாஷ் ஜவடேகர்

புதுதில்லியில் இன்று (31.07.2019) சூச்னாபவனில் புத்தகப் பிரிவைப்  பார்வையிட்ட மத்திய அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர், வெளியீட்டுப் பிரிவின் மறுவடிவம் செய்யப்பட்டுள்ள செயலூக்கம் உள்ள இணையதளம், “டிஜிட்டல் டிபிடி” என்ற செல்பேசி செயலி, வேலைவாய்ப்பு செய்தியின் இ-பதிப்பு, “சத்தியாக்கிரக கீதா” இ-புத்தகம் உள்ளிட்ட பல இ-திட்டங்களைத்  தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு. ஜவடேகர், பிரதமர் மோடி, மனதின் குரல் இரண்டாம் நிகழ்ச்சியில் மக்களுக்கு விடுத்த அழைப்புக்கு ஏற்ப வாசிப்பதை ஒரு பழக்கமாக்கி, வாசிப்புக் கலாச்சாரத்தை மீண்டும் வலுப்படுத்த வேண்டும் என்றார். வாசிப்புக் கலாச்சாரத்தை மேம்படுத்த அக்கம்பக்கத்தில் வாசிப்பதற்கான மன்றங்களை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். வேலைவாய்ப்புச் செய்தி ஏட்டின் பங்களிப்பை மேம்படுத்த வேண்டும் என்று கூறிய அவர், இந்தச் செய்தித்தாளில் தனியார் வேலைவாய்ப்புகள் உட்பட அனைத்து வேலைகளையும் பட்டியலிட வேண்டும் என்றார். வேலைவாய்ப்பு செய்தி ஏட்டினை, கல்லூரிகளில் விநியோகித்தால் மாணவர்கள் தங்களின் திறன்களை மேம்படுத்திக் கொள்ள உதவும் என்றும் வேலைவாய்ப்புச் சந்தையில் பொருத்தமானதை தேர்ந்தெடுப்பவர்களாக அவர்களை மாற்றும் என்றும் அவர் யோசனை கூறினார். வெளியீட்டுப் பிரிவின் சீரமைக்கப்பட்ட இணையதளம் கவர்ச்சிகரமாகவும்,  விரைந்து செயல்படுவதாகவும் உள்ளது என்று குறிப்பிட்ட அவர், தினந்தோறும் புதுப்பித்தால் மக்கள் தொடர்ந்து இதனை கவனிப்பார்கள் என்றார். இ-புத்தகங்கள், கிண்ட்ல் சகாப்தத்தில் வெளியீட்டுப் பிரிவில் செல்பேசி செயலி தொடங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், மக்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த இது உதவும் என்றும் அமைச்சர் கூறினார்.

 

****





(Release ID: 1580820) Visitor Counter : 255