நிதி அமைச்சகம்
உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அதிக முதலீடு தேவை
Posted On:
05 JUL 2019 1:26PM by PIB Chennai
இந்தியாவை ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்துவதற்கு, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அதிக முதலீடு செய்ய வேண்டியது அவசியம் என்று 2019-20 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை வலியுறுத்தியுள்ளது. இன்று நாடாளுமன்றத்தில் இந்த அறிக்கையைத் தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், கடந்த ஐந்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரத்தில் ஒரு டிரில்லியன் டாலர் இணைந்திருப்பதாகவும், நடப்பு ஆண்டில் 3 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இது வளரும் என்றும் தெரிவித்தார்.
இந்த இலக்கை எட்டுவதற்கு இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கான பல்வேறு திட்டங்களை முன்மொழிந்துள்ளார்.
· பிரதமர் கிராம சாலைத் திட்டம், தொழில் துறை வழித்தடம், சரக்கு வழித்தடம், பாரத் மாலா, சாகர் மாலா, ஜல் மார்க் விகாஸ், உடான் போன்ற திட்டங்கள் போக்குவரத்து செலவை குறைத்து உள்ளூரில் உற்பத்தியாகும் சரக்குகளுக்கான போட்டித்தன்மையை அதிகப்படுத்தும்.
· சிவில் விமானப் போக்குவரத்துத் துறை - விமானங்களுக்கான நிதி மற்றும் குத்தகை தொடர்பான பணிகளில் இந்தியாவை ஒரு குவிமையமாக மாற்றுவதற்குத் தேவையான அத்தியாவசிய நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தும்.
· ரயில்வேத் துறை – வழித்தடங்களை மேம்படுத்தவும், பணிகளை விரைவாக முடிக்கவும், பயணியர் சரக்கு சேவைகளுக்காகவும், பொது, தனியார் கூட்டிணைப்பினை நிதிநிலை அறிக்கை முன்மொழிகிறது. நாடெங்கிலும் 657 கிமீ நீளத்திற்கு மெட்ரோ ரயில் கட்டமைப்பு இயங்கி வருகிறது.
· ஃபேம் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் மின்சார வாகனங்களுக்கு ஊக்கமளிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு ஏற்ற, நவீன பேட்டரி மற்றும் பதிவு செய்யப்பட்ட மின்சார வாகனங்களுக்கு இத்திட்டத்தின்கீழ் ஊக்கத் தொகை அளிக்கப்படும்.
· நெடுஞ்சாலைத் துறை – தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தை விரிவாக கட்டமைக்கும் பணியை அரசு மேற்கொள்ளும். பாரத் மாலா திட்டத்தின் முதல் கட்டம் நிறைவடைந்தவுடன் மாநில சாலை கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு மாநிலங்களுக்கு உதவும்.
· கங்கை நதியை போக்குவரத்துக்கு பயன்படுத்துவதற்கான ஜல் மார்க் விகாஸ் திட்டம் பற்றி குறிப்பிட்ட மத்திய நிதியமைச்சர், சாஹிப்கஞ்ச், ஹல்தியா ஆகிய இரண்டு இடங்களில் பன்மாதிரி முனையங்கள் அமைக்கும் பணி இந்த ஆண்டு நிறைவுறும் என்றார்.
· போக்குவரத்து உள்கட்டமைப்பை அடுத்த மட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்காக, எரிவாயு தொகுப்பு, நீர் தொகுப்பு, ஐ-வேஸ், பிராந்திய விமான நிலையங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான செயல் திட்டத்தை அரசு உருவாக்கும்.
· பழைய மற்றும் செயல் திறனற்ற தொழிற்சாலைகள், எரிவாயு கூடங்கள், இயற்கை எரிவாயு இல்லாததால் தனது திறனுக்கும் குறைவாக இயங்கும் எரிவாயு ஆலைகள் ஆகியவற்றை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரைகள் தற்போது செயல்படுத்தப்படும்.
· மின்துறை கட்டணம் மற்றும் அமைப்பு சீர்திருத்தங்களுக்கான திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.
· வீட்டு வசதித் துறை – வாடகை வீட்டுவசதியை மேம்படுத்துவதற்கான பல்வேறு சீர்திருத்தங்களையும், மாதிரி வாடகைதாரர் சட்டம் விரைவில் இறுதியாக்கப்பட்டு மாநிலங்களுக்கு அனுப்பப்படும் என்பதையும் நிதியமைச்சர் அறிவித்தார்.
· 2019-20 நிதியாண்டில், சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு ரூ.350 கோடி, மானிய வட்டி திட்டத்தின் கீழ், ஒதுக்கப்பட்டுள்ளது.
· சில்லரை வணிகர்கள் மற்றும் சிறிய கடை வைத்திருப்போருக்கு ஓய்வூதியத் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. பிரதமர் கரம் யோகி மந்தன் என்ற புதிய திட்டத்தின் கீழ், ரூ.1.5 கோடிக்கும் குறைவான வருடாந்திர பணப்புழக்கம் உள்ள சுமார் 3 கோடி பேர் பயனடைவர். இத்திட்டத்தில் சேர ஆதார் அட்டையும், வங்கிக் கணக்கும் போதுமானது.
***********
(Release ID: 1577483)
|