நிதி அமைச்சகம்

நிலைத்த வேலைவாய்ப்புகளை உருவாக்க பொது வசதி மையங்கள் ஏற்படுத்தப்படும்

Posted On: 05 JUL 2019 1:22PM by PIB Chennai

பாரம்பரிய தொழில் துறைகள் மேம்பாடு மற்றும் சீரமைப்புக்கான நிதித் திட்டத்தின்கீழ், அதிகளவில் பொது வசதி மையங்களை உருவாக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்தார்.  மக்களவையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை  தாக்கல் செய்து பேசிய அமைச்சர், இந்தத் திட்டம், பாரம்பரிய தொழில் துறைகளை அதிக உற்பத்திமயமானதாக, லாபமயமானதாக, நிலைத்த வேலைவாய்ப்புக்களை உருவாக்கக்கூடியதாக வளர்த்தெடுக்கும் விதத்தில் குழுமம் (கிளஸ்டர்) சார்ந்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று கூறினார்.

இத்திட்டத்தின்கீழ், மூங்கில், தேன் மற்றும் கதர் குழுமத் துறைகளில் கவனம் செலுத்தப்படவுள்ளது.   2019-20-ல் 100 புதிய குழுமங்களை அமைத்து, அவற்றில் 50,000 கைவினைக் கலைஞர்கள் இணையவும் இத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. 

புத்தாக்கம் மற்றும் கிராமப்புற தொழில் முனைவு மேம்பாட்டுக்கான  திட்டத்தில் 80 வாழ்வாதார தொழில் இன்குபேட்டர்களும், 20 தொழில்நுட்ப இன்குபேட்டர்களும்  அமைக்கப்பட்டு, வேளாண் கிராமப்புற தொழில் துறைகளில் 75,000 திறன்மிகு தொழில்முனைவோரை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

பிரதமர் மத்சய சம்பதா திட்டத்தின்கீழ், மீன்வளத் துறை, மீன்வள மேலாண்மை கட்டமைப்பை உருவாக்கும் என்றும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வேளாண் உள்கட்டமைப்பை மேம்படுத்த, அரசு, பரவலாக முதலீடு செய்யும் என்று உறுதிபட தெரிவித்த நிதியமைச்சர், வேளாண் விளைபொருட்களுக்கு மதிப்புக்கூட்டுதல் துறையில் ஈடுபடும் தனியார் தொழில் முனைவு முயற்சிகளுக்கும் ஆதரவு அளிக்கும் என்றார். 

அடுத்த ஐந்தாண்டுகளில் விவசாயிகளின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதற்காக 10,000 புதிய வேளாண் விளைபொருள் நிறுவனங்கள் அமைக்கப்படும் என்றும்  திருமதி நிர்மலா சீதாராமன் அறிவித்தார். 

***********



(Release ID: 1577468) Visitor Counter : 146


Read this release in: English , Marathi , Bengali