நிதி அமைச்சகம்

தேசிய அளவிலான முன்னுரிமை, நில உற்பத்தி திறனிலிருந்து, நீர்ப்பாசன நீர் உற்பத்தித் திறனுக்கு மாற வேண்டும் - நுண்நீர்ப் பாசனத்திற்கு சிறப்பு ஊக்கம் அளிக்க வேண்டும்

Posted On: 04 JUL 2019 12:11PM by PIB Chennai

2018-19ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை, நில உற்பத்தித் திறனிலிருந்து நீர்ப்பாசன நீர் உற்பத்தித் திறனுக்கு மாறுவதை நோக்கமாக கொள்ள வேண்டும் என்று யோசனை தெரிவித்துள்ளது. விவசாயிகளை ஊக்குவிக்கும் கொள்கைகளை வகுத்து, நீர் பயன்பாட்டை மேம்படுத்துவதை தேசிய முன்னுரிமையாகக் கருத வேண்டும்.  நுண்நீர்ப் பாசனத்திற்கு ஊக்கமளித்து அதன்மூலம் நீர் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்த வேண்டும் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஆசிய நீர் மேம்பாட்டுக் கண்ணோட்டம், 2016” (Asian Water Development Outlook, 2016)-ன்படி இந்தியாவில் 89 விழுக்காடு நிலத்தடி நீர், பாசனத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. இதில் கவலைக்குரிய பிரச்சினை என்னவென்றால், தற்போது நடைமுறையில் உள்ள நிலத்தடி நீரை தொடர்ந்து பயன்படுத்த முடியுமா? என்பதுதான். ஏனென்றால் நிலத்தடி நீரின் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது. நீர் ஆதாரத்தைக் கொண்டுதான் இந்தியாவில் ஏராளமான பயிர்கள் பயிரிடப்படுகின்றன. விவசாயிகளை ஊக்குவிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை, அதிக அளவிலான மானியத்துடன் கூடிய மின்விநியோகம், நீர், உரம் ஆகியவை சீரற்ற பயிரிடும் முறைக்கு முக்கியப் பங்காற்றியுள்ளது. மத்திய நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரங்கள்துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் 2018-19ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.  இந்த ஆய்வறிக்கை, விவசாயம் மற்றும் உணவுத் துறைக்கு சிறப்பு அழுத்தத்தைக் கொடுத்துள்ளது. ஒட்டுமொத்த வளர்ச்சியில் இத்துறையின் சார்பில் பங்களிப்பு குறைவாக இருந்தபோதிலும், மக்கள் தொகையில் பொரும்பாலானவர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் உணவு பாதுகாப்பிற்கு விவசாயம் அத்தியாவசியமானது என்பதை ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

     ஏறத்தாழ 89 விழுக்காடு நிலத்தடி நீரில், 60 விழுக்காட்டுக்கு மேல் நெல் மற்றும் கரும்பு பயிரிடுவதற்கான பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. விவசாயத்தில் ஆதாயம் பெறுவதற்கு உர விலை முக்கிய அளவுகோலாக உள்ளது. 2002ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்து வந்த உரத்தின் பயன்பாடு, 2011ம் ஆண்டிலிருந்து சரிவு நிலையில் உள்ளது. மண்வளம் குறைந்த போதிலும், உரத்தைப் பயன்படுத்துவதற்கான பொறுப்புணர்வு குறைந்துள்ளதால், உரத்தின் பயன்பாட்டு விகிதமும் குறைந்துள்ளது. மண்ணின் ஆரோக்கியத்தைப் பொறுத்து, வேம்பு கலந்த யூரியா, நுண்ணூட்டச்சத்துகள் மற்றும் இயற்கை உர மேம்பாடு, நீரில் கரையும் உரங்கள் ஆகியவற்றை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என பொருளாதார ஆய்வறிக்கை யோசனை தெரிவித்துள்ளது.  செலவற்ற இயற்கை விவசாயம் உள்ளிட்ட பண்ணை விவசாய தொழில்நுட்பங்கள், நீர் பயன்பாட்டையும் மண்வளத்தையும் மேம்படுத்துகிறது.

*****



(Release ID: 1577243) Visitor Counter : 206