நிதி அமைச்சகம்

2018-19 நிதியாண்டு பொருளாதார நிலை – ஒரு விரிவான பார்வை

முதலீடு மற்றும் நுகர்வு வளர்ச்சியினால் 2019-20 ஆண்டில் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும்
2000-01 வருடம் 0.746 லட்சம் கோடியாக இருந்த சேவைகள் ஏற்றுமதி 2018-19 ஆம் ஆண்டில் 14.389 லட்சம் கோடியாக உயர்வு
உலக சேவைகள் ஏற்றுமதியில் 2005-ல் இரண்டு சதவீதமாக இருந்த இந்தியாவின் பங்களிப்பு 2017-ஆம் வருடம் 3.5 சதவீதமாக உயர்ந்துள்ளது
சேவைகள், மோட்டார் வாகனங்கள், ரசாயனம் உள்ளிட்ட துறைகளில் 2015-16 ஆம் ஆண்டில் நேரடி அந்நிய முதலீடு அதிக அளவில் வளர்ச்சி கண்டது
பெரிய, நடுத்தர மற்றும் சிறு, குறு தொழில்களில் கடனுதவி அளிக்கப்பட்டிருப்பது இந்தத் துறைகளின் வளர்ச்சியை உயர்த்தியுள்ளது
பொருட்கள் தயாரிப்பு மற்றும் கட்டுமான தொழில் நடவடிக்கைகளில் மேம்பாடு ஏற்பட்டிருப்பது 2018-19 ஆம் ஆண்டில் தொழில் துறை வளர்ச்சியை துரிதப்படுத்தியுள்ளது

Posted On: 04 JUL 2019 12:33PM by PIB Chennai

2019-20 ஆம் நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.  நிதி மற்றும் கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் 2018-19 ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார்.  இந்த ஆய்வறிக்கை 2019-20 ஆம் ஆண்டில் அரசுக்கு மாபெரும் அரசியல் அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  இது நாட்டில் உயர்ந்த பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய நல்லதோர் செயல் என்று பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. முதலீடு மற்றும் நுகர்வு வளர்ச்சியினால் 2019-20 ஆண்டில் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் ஆய்வறிகை குறிப்பிடுகிறது.

     சர்வதேச பண நிதியம் (IMF) உலகப் பொருளாதார கண்ணோட்டம் பற்றி இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி 7.3 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதை பொருளாதார ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. உலக அளவில் உற்பத்தி 0.3 சதவீத அளவுக்கு குறையக்கூடும் என்று உலகப் பொருளாதார கண்ணோட்டம் தெரிவித்திருக்கும் நிலையில் கூட, நாட்டில் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளது.

     நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம் 2017-18 ஆம் ஆண்டில் 7.2 சதவீதமாகவும், 2018-19 ஆம் ஆண்டில் 6.8 சதவீதமாக இருந்த போதும், 2018-19 ஆம் ஆண்டில் உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா தொடர்ந்து இருந்து வருகிறது. அதேவேளையில், உலக உற்பத்தி வளர்ச்சி விகிதம் 2017-ல் 3.8 சதவீதமும், 2018-ல் 3.6 சதவீதமும் குறைந்துள்ளது. அமெரிக்கா, சீனா இடையேயான வர்த்தகப் பதற்றம், சீனாவின் கடினமான கடன் கொள்கைகள், மிகப்பெரிய முன்னேறிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளில் எடுக்கப்பட்ட கட்டுபாடுடன் கூடிய நிதி மற்றும் பணக் கொள்கைகள் காரணமாக, உலகப் பொருளாதாரம், வளர்ந்து வரும் சந்தை மற்றும் வளரும் பொருளாதாரம் 2018-ம் ஆண்டில் குறைந்துள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

     2014-15 ஆம் நிதியாண்டுக்குப்பின், கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி சராசரியாக 7.5 சதவீதமாக இருந்துவந்தது.  இந்தியப் பொருளாதாரம் 2018-19 ஆம் ஆண்டில் 6.8 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டது.  இது அதற்கு முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் சற்றுக்குறைவான வளர்ச்சியாகும். வேளாண்மை மற்றும் அது தொடர்பான தொழில்களில் ஏற்பட்ட குறைவான வளர்ச்சி, வர்த்தகம், உணவகங்கள், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் ஒலிபரப்புத் துறையில் சேவைகள், பொது நிர்வாகம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் வளர்ச்சியின் வீச்சு சற்றுக் குறைவாக இருந்ததே இந்த நிலைக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  2018-19 ஆம் ஆண்டில் ரபி பருவத்தில் பயிரிடப்பட்ட நிலத்தின் அளவு அதற்கு முந்தைய ஆண்டைவிடக் குறைவாகும். இதனால் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டது. உணவு பொருட்களின் விலைகள் குறைந்ததால், விவசாயிகள் குறைவாக உற்பத்தி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டதாக பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

     2017-18 ஆம் ஆண்டு நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 1.9 சதவீதமாக இருந்த நடப்பு கணக்கு பற்றாக்குறை 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் – டிசம்பர் மாத கால கட்டத்தில் 2.6 சதவீதமாக அதிகரித்தது.  நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்ததற்கு சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017-18 ஆம் ஆண்டில் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 162.1 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்ததாகவும், இது 2018-19 ஆம் நிதியாண்டில் 184 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     2018-19 ஆம் ஆண்டில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7.8 சதவீதமாக குறைந்தது என்றும், ஜப்பானின் யென்னுக்கு நிகராக 7.7 சதவீதமும், ஐரோப்பிய நாடுகளின் யூரோ கரன்சிக்கு நிகராக 6.8 சதவீதமும் குறைந்துள்ளது.  2018 அக்டோபர் மாதத்தில் ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 74.4 ரூபாயாக இருந்ததாகவும், பின்னர், 2019 மார்ச் மாதத்தில்   இந்திய ரூபாயின் மதிப்பு 62.2 ரூபாயாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு இந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி நிலவரப்படி, 422.2 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.

     2018-19 ஆம் ஆண்டில் நாட்டில் நேரடி அந்நிய முதலீடு 14.2 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டது. சேவைகள், மோட்டார் வாகனங்கள் மற்றும் ரசாயன தொழில் துறைகளில் நேரடி அந்நிய முதலீடு அதிக அளவில் ஈர்க்கப்பட்டுள்ளது.  2015-16 ஆம் ஆண்டு முதல் நேரடி அந்நிய முதலீடு அதிக விகிதத்தில் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வந்துள்ளது.  இந்தியப் பொருளாதாரத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கொண்ட நம்பிக்கையை பிரதிபலிப்பதாக இது அமைந்துள்ளது.

     இந்திய வங்கித்துறை அதிகமான நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.  வங்கிகளின் வாராக்கடன் அளவு அதிகரித்து வருவது பொதுத் துறை வங்கிகளுக்கு அதிக நெருக்கடியை ஏற்படுத்துவதோடு, அதன் வரவு-செலவு ஆண்டு அறிக்கைகளிலும் பாதிப்பினை ஏற்படுத்துவதாக பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வலுவான மற்றும் முக்கிய நடவடிக்கையாக நுகர்வு கருதப்படுகிறது.  நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் தனியார் நுகர்வு தொடர்ந்து அதிகமாக உள்ள நிலையிலும், நுகர்வு தொடர்பான அணுகுமுறையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தேவையான பொருட்களை வாங்கும் நிலையிலிருந்து, ஆடம்பரமான பொருள்களையும், சேவைகளையும் பெறும் நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கிறது.

     2011-12 ஆம் நிதியாண்டு முதல் முதலீட்டு விகிதம் மற்றும் நிலையான முதலீட்டு விகிதம் குறைந்து வந்த நிலையில், 2017-18 ஆம் நிதியாண்டில் அதில் மீட்சி ஏற்பட்டது. 2016-17-ல் நிலையான முதலீட்டு வளர்ச்சி விகிதம் 8.3 சதவீதம் இருந்ததாகக் குறிப்பிடும் பொருளாதார ஆய்வறிக்கை, இது அதற்கு அடுத்த நிதியாண்டில் 9.3 சதவீதமாகவும், 2018-19 ஆம் நிதியாண்டில் 10 சதவீதமாகவும் உயர்ந்தது என்றும் சுட்டிக்காட்டுகிறது.  

     நாட்டில் பெரிய, சிறு மற்றும் குறு தொழில் துறை, நடுத்தர தொழில் துறைகளுக்கு அளிக்கப்பட்ட கடனுதவி, வளர்ச்சியை ஊக்குவித்துள்ளது. இந்தத் தொழில் துறைகளுக்கு 2016-17 ஆண்டுகளில் கடனுதவி சற்று குறைந்திருந்தாலும், 2018 ஆம் ஆண்டு கடனுதவி அதிகமாக அளிக்கப்பட்டுள்ளது.  பெரும் தொழில் துறைக்கான கடனுதவி குறைவான அளவே இருந்த நிலையில், 2018 ஆம் ஆண்டு பிற்பகுதியில் அதற்கான கடனுதவியும் அதிகரித்துள்ளது.

     2011-12 ஆம் ஆண்டில் தொழில் துறையில் அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டிருந்ததாகவும், அதற்கு அடுத்து, சேவை துறையில் அதிக அளவு முதலீடு செய்யப்பட்டிருந்ததாகவும் கூறும் பொருளாதார ஆய்வறிக்கை, வேளாண் துறையில் சேவை துறைக்கு அளிக்கப்பட்ட முதலீட்டில் பாதியளவுக்கும் குறைவாக முதலீடு செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கிறது. தொடர்ந்து வேளாண் துறையில் முதலீடு குறைவாக இருப்பதாக பொருளாதார ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.  சேமிப்பு விகிதமும் குறைந்து வருவதாகத் தெரிவிக்கும் ஆய்வறிக்கை, 2011-12-ல் 23.6 சதவீதமாக இருந்த சேமிப்பு விகிதம் 2017-18-ல் 17.2 சதவீதமாகக் குறைந்திருப்பதாகக் குறிப்பிடுகிறது.

     2018-19 ஆம் ஆண்டில் நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வளர்ச்சி நிலை ரூபாய் மற்றும் அமெரிக்க டாலரில் சற்று வித்தியாசம் காணப்பட்டது. அமெரிக்க டாலர் நிலையில் ஏற்றுமதி-இறக்குமதி  வளர்ச்சி குறைந்ததாகவும், தற்போதைய விலை நிலவரப்படி இந்திய ரூபாய் மதிப்பில் அதிகரித்தாகவும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 2018-19 ஆம் ஆண்டில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததே இதற்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     2017-18 ஆம் ஆண்டில் 6.9 சதவீதமாக இருந்த மொத்த மதிப்புச் சேர்ப்பு (GVA), 2018-19-ல் 6.6 சதவீதமாக குறைந்திருப்பதாகவும், மொத்த மதிப்புச் சேர்ப்பு குறைவது பொருளாதார நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டிருப்பதைப் பிரதிபலிப்பதாக உள்ளது என்றும் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

     சேவைத் துறை தொடர்ந்து பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கியத் துறையாக இருந்து வருவதாகத் தெரிவிக்கும் ஆய்வறிக்கை, இது மொத்த மதிப்புச் சேர்ப்பு நடவடிக்கைக்கு பெருமளவு பங்களிப்பதோடு, இந்திய ஏற்றுமதிக்கும், உரிய வகையில் பங்களிக்கிறது.  சேவைகள் ஏற்றுமதி இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் பல மடங்கு உயர்ந்திருப்பதாக சுட்டிக்காட்டும் ஆய்வறிக்கை 2000-01 வருடம் 0.746 லட்சம் கோடியாக இருந்த சேவைகள் ஏற்றுமதி 2018-19 ஆம் ஆண்டில் 14.389 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிடுகிறது. மொத்த ஏற்றுமதியில் சேவைகள் துறையின் பங்களிப்பு 38.4 சதவீதமாக உள்ளது. 2005 ஆம் ஆண்டு உலகளவில் சேவைகள் ஏற்றுமதியில் 2 சதவீதமாக இருந்த இந்தியாவின் பங்களிப்பு 2017 ஆம் ஆண்டு 3.5 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. இது உற்பத்தித் துறையின் ஏற்றுமதியை விட, மிகவும் அதிகமாகும்.

     வேளாண்மை மற்றும் அது சார்ந்த தொழில் துறையில் 2018-19 ஆம் ஆண்டில் 2.9 சதவீதம் என்ற அளவில் குறைந்த வளர்ச்சி வீதம் இருந்ததாகவும், இந்த ஆண்டில் நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தி 283.4 மில்லியன் டன்னாக இருந்ததாகவும், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் வெளியிட்ட கணக்கீடு தெரிவிப்பதாக ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.  இந்த கால கட்டத்தில் உணவு பொருட்களின் விலை குறிப்பிடத்தக்க அளவு குறைந்ததாகவும், இதனால் நுகர்வோர் உணவுபொருட்கள் விலை தொடர்பான பணவீக்க விகிதம் பூஜ்யமாக இருந்ததாகவும் தெரிவிக்கிறது.  உற்பத்தி மற்றும் கட்டுமானத் தொழில் நடவடிக்கைகளில் 2018-19 ஆம் ஆண்டில் மேம்பாடு காணப்பட்டதை அடுத்து, தொழில் துறையில் வளர்ச்சி அதிகரித்தது. நாட்டின் மொத்த மதிப்புச் சேர்ப்பில் உற்பத்தித் துறை 16.4 சதவீதம் என்ற அளவில் பங்களிப்பதாகவும், இது வேளாண்மை மற்றும் அது சார்ந்த தொழில் துறையின் பங்களிப்பைவிட அதிகமாக இருப்பதாகவும் ஆய்வு அறிக்கை கூறுகிறது.

     2018-19 ஆம் ஆண்டில் உற்பத்தித் துறையின் வளர்ச்சி துரிதப்படுத்தப்பட்டது.  இருப்பினும், இந்த நிதியாண்டின் இறுதி காலாண்டில் வளர்ச்சி 3.1 சதவீத்ம் என்ற அளவில் குறைந்தது.  இது முதல் காலாண்டில் 12.1 சதவீதமாகவும், இரண்டாவது காலாண்டில் 6.9 சதவீதமாகவும் 3-வது காலாண்டில் 6.4 சதவீதமாகவும் இருந்தது. வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவது குறைந்ததே 4-வது காலாண்டில் உற்பத்தி வளர்ச்சி சற்று குறைய காரணமாக அமைந்தது.

     நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சிமெண்ட் மற்றும் உருக்கு கம்பிகளின் நுகர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டுமானத் துறையின் வளர்ச்சி கணக்கிடப்படுகிறது. கடந்த நிதியாண்டில் சிமெண்ட் உற்பத்தி 13.3 சதவீதமாகவும், உருக்கு கம்பிகளின் நுகர்வு 7.5 சதவீதமாகவும் இருந்தது.  இது அதற்கு முந்தைய ஆண்டைவிட அதிகமாக இருப்பதால், துறையின் வளர்ச்சியை பிரதிபலிப்பதாக உள்ளது.  2018-19 ஆம் நிதியாண்டில் நிதி, ரியல் எஸ்டேட் மற்றும் தொழில் ரீதியிலான சேவைகள் துறை 7.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட அதிகமாகும் என்று பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

*****


(Release ID: 1577218) Visitor Counter : 993