குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை மனிதகுலத்தின் நன்மைக்காக பயன்படுத்த வேண்டும் : குடியரசு துணைத் தலைவர்
Posted On:
02 JUL 2019 11:51AM by PIB Chennai
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் பலனை மனித குலத்தின் நன்மைக்காக பயன்படுத்த வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் திரு. எம். வெங்கைய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் நடைபெற்ற சர்வதேச விண்வெளி நிலைய வடிவமைப்புப் போட்டியில் பங்கேற்று திரும்பிய தில்லி ஆர்.கே.புரம் பப்ளிக் பள்ளி மாணவர்களிடையே கலந்துரையாடிய அவர், விண்வெளி தொழில்நுட்பம்தான் வருங்காலத்தில் அதிக கவனம் செலுத்தக்கூடியதாக இருக்கும் என்றார். எனவே, இளைஞர்கள் இத்துறையில் புதுமைகளை கண்டுபிடிக்க முன்வரவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
விண்வெளி அனைத்து நாடுகளாலும் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு வளம் என்றும், விண்வெளி மூலம் கிடைக்கக்கூடிய நற்பயன்களை பெறுவதற்கு தடையற்ற அணுகுமுறை தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு நாட்டினரால் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளின் பலன் அனைத்து நாடுகளுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமுதாயம் பயன் அடையச் செய்வதும், சாமான்ய மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதுமே, அறிவியல் முன்னேற்றங்களின் அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டும் என்றும், திரு வெங்கைய்யா நாயுடு தெரிவித்தார். விண்வெளி தொழில்நுட்பத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் தயாரிப்புகள் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், வேளாண்மை போன்ற முக்கிய துறைகளின் மேம்பாட்டிற்கு விண்வெளி போன்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
பருவநிலை மாற்றம், பசுமைப்படல குறைவு, சுற்றுச்சூழல் சீர்கேடு போன்றவற்றுக்கும் விண்வெளி தொழில்நுட்பத்தின் மூலம் தீர்வு காண வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தினார்.
1975ஆம் ஆண்டு நாட்டின் முதலாவது செயற்கைக்கோளான ஆரியபட்டா-வை விண்ணில் செலுத்தியதிலிருந்தே, விண்வெளி சார்ந்த தொழில்நுட்பங்களில் இந்தியா முன்னணி நாடாக திகழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியா தனக்கென ஒரு தனிஇடத்தை பிடித்துள்ளதாக கூறிய அவர், மிகவும் சிக்கலான மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைத்த இந்திய விண்வெளி விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
*****
(Release ID: 1576613)
Visitor Counter : 295