பிரதமர் அலுவலகம்

குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை (எம்.எஸ்.எம்.ஈ.)-க்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆதரவு மற்றும் உதவித் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.

Posted On: 02 NOV 2018 8:54PM by PIB Chennai
  • 12 முக்கிய திட்டங்களைப் பிரதமர் தொடங்கினார்.
  • எம்.எஸ்.எம்.ஈ-க்களுக்கு எளிதாக கடன் கிடைக்க 59 நிமிட கடன் இணையப்பக்கம்.
  • மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் 25 சதவீதம்  எம்.எஸ்.எம்.ஈ-க்களிடம் இருந்து கொள்முதல் செய்வது கட்டாயம்.
  • கம்பெனி சட்டத்தின்கீழ் சிறு குற்றங்களுக்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த அவசரச் சட்டம்.

 

குறு-சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள்  துறை (எம்.எஸ்.எம்.ஈ)-க்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆதரவு மற்றும் உதவித் திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (02.11.2018) தொடங்கி வைத்தார்.  இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக நாடுமுழுவதும் உள்ள எம்.எஸ்.எம்.ஈ-க்களின் வளர்ச்சி, விரிவாக்கம் மற்றும் வசதிகளுக்கு உதவி செய்ய 12 முக்கியமான அறிவிப்புகளையும் பிரதமர் வெளியிட்டார்.

இன்று நான் அறிவித்துள்ள 12 முடிவுகள் எம்.எஸ்.எம்.ஈ துறைக்கு புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.  இந்தியாவில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் முதன்மையாக விளங்குபவை எம்.எஸ்.எம்.ஈ-க்கள் என்று குறிப்பிட்ட பிரதமர், லூதியானாவின் பின்னலாடை, வாரணாசியின் சேலைகள் உட்பட சிறு தொழில் துறையில் இந்தியாவின் புகழ்மிக்கப் பாரம்பரியங்களை அவர் நினைவு கூர்ந்தார். 

மத்திய அரசால் தொடங்கப்பட்ட வெற்றிகரமான பொருளாதார சீர்திருத்தங்களால் கடந்த நான்காண்டுகளில் எளிதாக வர்த்தகம் செய்தல் எனும் தரவரிசையில் 142-லிருந்து 77-க்கு முன்னேறியிருப்பதில் இருந்து இந்தியாவின் வளர்ச்சி கணக்கிடப்படுகிறது என்றார். 

எம்.எஸ்.எம்.ஈ துறைக்கு வசதிகள் அளிக்க ஐந்து முக்கிய அம்சங்கள் இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.  எளிதாக கடன் கிடைப்பது, எளிதாக சந்தை வாய்ப்பு கிடைப்பது, தொழில்நுட்ப மேம்பாடு எளிதாக வர்த்தகம் செய்தல், தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த உணர்வு போன்றவை முக்கிய அம்சங்களாகும்.  இந்த துறையினருக்கு இது தீபாவளி பரிசாகும் என்று கூறிய அவர், தாம் வெளியிட்ட 12 அறிவிப்புகளும், இந்த 5 பிரிவுகளிலும் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும் என்றார். 

எளிதாகக் கடன்

எம்.எஸ்.எம்.ஈ-க்களுக்கு எளிதாகக் கடன் கிடைக்க வசதியாக 59 நிமிட  கடன் இணையப் பக்கம் தொடங்கப்படுவதை முதல் அறிவிப்பாக பிரதமர் வெளியிட்டார்.  இந்த இணையப் பக்கத்தின் மூலம் வெறும் 59 நிமிடங்களில் ரூ.1 கோடி வரை கொள்கை அளவில் கடன் அனுமதி பெற முடியும் என்று அவர் கூறினார்.  ஜி.எஸ்.டி இணையப் பக்கம் மூலம் இந்த இணையப் பக்கத்திற்கு தொடர்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.  புதிய இந்தியாவில் மீண்டும் மீண்டும் வங்கிக் கிளைக்கு செல்ல எவர் ஒருவரும் நிர்பந்திக்கப்பட மாட்டார் என்று பிரதமர் உறுதியளித்தார். 

ஜி.எஸ்.டி பதிவு செய்யப்பட்ட எம்.எஸ்.எம்.ஈ-க்கள் பெறுகின்ற புதிய அல்லது கூடுதல் கடன்களுக்கு இரண்டு சதவீத வட்டி என்பது  இரண்டாவது அறிவிப்பு என பிரதமர் சுட்டிக்காட்டினார்.  ஏற்றுமதிக்கு முந்தைய அல்லது ஏற்றுமதிக்குப் பிந்தைய காலத்தில் ஏற்றுமதியாளர்கள் பெறுகின்ற கடன்களுக்கு வட்டித் தள்ளுபடி 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது என்றும் பிரதமர் அறிவித்தார்.

ரூ.500 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் அனைத்து நிறுவனங்களும் டி.ஆர்.ஈ.டி. முறையின் கீழ் கொண்டு வரப்படுவது தற்போது கட்டாயமாக்கப்படும் என்பது பிரதமரின் மூன்றாவது அறிவிப்பாகும்.  இந்த இணையப் பக்கத்தில் சேர்வதன் மூலம் தொழில் துறையினர், தங்களின் வரவிருக்கும் வருவாய் அடிப்படையில் வங்கிகளிடம் இருந்து கடன் பெறுவது எளிதாகும். ரொக்கப் பணச் சுழற்சி பிரச்சினைக்கு இது தீர்வாக அமையும்.

எளிதாக சந்தைகள்

தொழில் முனைவோருக்கு எளிதாக சந்தை வாய்ப்புகள் கிடைக்க மத்திய அரசு ஏற்கனவே பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக பிரதமர் கூறினார்.  இந்த நிலையில், அவர் தமது நான்காவது அறிவிப்பை வெளியிட்டார்.  பொதுத் துறை நிறுவனங்கள் தங்களின் மொத்தக் கொள்முதலில் 20 சதவீதத்திற்கு பதிலாக 25 சதவீதம் எம்.எஸ்.எம்.ஈ-களிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

பிரதமரின் ஐந்தாவது அறிவிப்பு பெண் தொழில் முனைவோர் சம்பந்தமானது.  எம்.எஸ்.எம்.ஈ-களிடம் இருந்து கொள்முதல் செய்ய கட்டாயமாக்கப்பட்டுள்ள 25 சதவீதத்தில் 3 சதவீதம் பெண் தொழில் முனைவோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

அரசின் மின்னணு சந்தை (ஜி.ஈ.எம்)வுடன்  தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள 1.5 லட்சம் விநியோகிப்பாளர்களில் 40 ஆயிரம் பேர் எம்.எஸ்.எம்.ஈ-களைச் சேர்ந்தவர்கள் என்று பிரதமர் தெரிவித்தார்.  ஜி.ஈ.எம் மூலம் இதுவரை ரூ.14 ஆயிரம் கோடி மதிப்புள்ள பரிவர்த்தனைகள் நடைபெற்று இருப்பதாக அவர் கூறினார்.  மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் ஜி.ஈ.எம்-ன் ஒரு பகுதியாக கட்டாயம் இருக்க வேண்டும் என்பது அவரது ஆறாவது அறிவிப்பாகும்.  ஜி.ஈ.எம்-ல் பதிவு செய்யப்பட்டுள்ள விற்பனையாளர்கள் அனைவரையும் அவர்களும் பெற முடியும் என்று திரு மோடி தெரிவித்தார்.

தொழில்நுட்ப மேம்பாடு

தொழில்நுட்ப மேம்பாடு பற்றி பேசிய பிரதமர், நாடுமுழுவதும் உள்ள கருவி அறைகள், பொருட்களை வடிவமைக்கும் முக்கியமான பகுதியாகும் என்றார்.  நாடுமுழுவதும் 20 குவிமையங்கள் அமைக்கப்படும் என்பதும், கருவி அறைகள் வடிவில் 100 கம்பிகள் அவற்றுடன் இணைக்கப்படும் என்பதும் அவரின் 7-ஆவது அறிவிப்பாகும். 

எளிதாக வணிகம் செய்தல்

எளிதாக வணிகம் செய்வது குறித்த பிரதமரின்  8-ஆவது அறிவிப்பு மருந்து நிறுவனங்கள் தொடர்புடையதாக இருந்தது. எம்.எஸ்.எம்.ஈ-க்களில் மருந்து நிறுவனங்கள் கொத்தாக அமைய வேண்டும் என்று அவர் கூறினார்.  இவ்வாறு அமைக்கப்படுவதற்கான செலவில் 70 சதவீதத்தை மத்திய அரசு ஏற்கும் என்று அவர் தெரிவித்தார்.

அரசின் விதிமுறைகளை எளிமையாக்குவது 9-ஆவது அறிவிப்பு என்று பிரதமர் கூறினார்.  8 தொழிலாளர் சட்டங்கள் மற்றும் 10 சங்க விதிமுறைகளின் கீழ் படிவங்கள் தாக்கல் செய்வது தற்போது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தாக்கல் செய்தால் போதும் என்பதாக 9-ஆவது அறிவிப்பு உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். 

நிறுவனம் ஒன்றுக்கு ஆய்வாளர் ஒருவர் செல்வது கணினி மூலம் திடீரென ஒதுக்கீடு செய்யப்படும் முறையில் அமைய வேண்டும் என்பது 10- ஆவது அறிவிப்பாகும் என பிரதமர் தெரிவித்தார். 

ஒருதொழில் நிறுவனத்தை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதியும், கட்டுமான அனுமதியும் பெறுவது தொழில் முனைவோருக்கு அவசியமாகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.  காற்று மாசு மற்றும் தண்ணீர் மாசு தொடர்பான  விதிகளுக்கு தனித்தனியாக ஒப்புதல் பெறுவதற்கு பதிலாக இவை இரண்டும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே அனுமதியாக மாற்றப்படுவது 11-ஆவது அறிவிப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார்.  கணக்குத் தாக்கல் செய்வதற்கு அவரவரே சான்றிதழ் அளிப்பது ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் கூறினார். 

கம்பெனி சட்டத்தின்கீழ், சிறு விதிமீறல்கள் ஏற்பட்டால், இனிமேல் தொழில்முனைவோர் நீதிமன்றங்களுக்கு செல்லத் தேவையில்லை என்பதும் எளிதான நடைமுறைகள் மூலம் அவர்களை சரி செய்ய முடியும் என்பதும் 12 ஆவது அறிவிப்பு என பிரதமர் குறிப்பிட்டார். 

எம்.எஸ்.எம்.ஈ துறையின் ஊழியர்களுக்கான சமூகப் பாதுகாப்பு

எம்.எஸ்.எம்.ஈ துறையின் ஊழியர்களுக்கான சமூகப் பாதுகாப்பு பற்றியும் பிரதமர் பேசினார்.  இவர்கள் ஜன்-தன் கணக்குகள், வருங்கால வைப்பு நிதி, காப்பீடு ஆகியவற்றை உறுதி செய்ய இயக்கம் ஒன்று தொடங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்தியாவில் எம்.எஸ்.எம்.ஈ துறையை வலுப்படுத்த இந்த முடிவுகள் உதவும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.  இந்த உதவித் திட்டத்தின் அமலாக்கம் அடுத்த 100 நாட்களுக்கு தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

•••••••••



(Release ID: 1576598) Visitor Counter : 146