மத்திய அமைச்சரவை

இந்தியாவை சர்வதேச நடுவண் மையமாக ஆக்குவதில் ஆர்வம்

Posted On: 12 JUN 2019 7:41PM by PIB Chennai

சர்வதேச நடுவண் மைய மசோதா 2019க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


சச்சரவு மாற்றுத் தீர்வுக்கான சர்வதேச மையத்தின் பொறுப்புகள் 2019 மார்ச் 2 முதல் புதுடெல்லி சர்வதேச நடுவண் மையத்திற்கு மாற்றப்படும்

அவசரச் சட்டத்திற்குப் பதிலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மசோதா வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும்

சர்வதேச நடுவண் மையமாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்பதே பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முன்னோடியான முன்முயற்சிகளில் ஒன்றாக இருந்தது. நிறுவன மயமாக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச நடுவண் ஏற்பாடுகளைக் கொண்ட சுயேச்சையான, சுயாட்சி மிக்கதொரு சூழலை உருவாக்குவது என்பதே இந்தத் திசைவழியை நோக்கியதொரு நடவடிக்கை ஆகும்.

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை, புதுடெல்லி சர்வதேச நடுவண் மையத்திற்கான மசோதா, 2019-ஐ வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்துவதற்கான தனது ஒப்புதலை வழங்கியது.

தாக்கம்:

நிறுவன மயமான நடுவண் ஏற்பாட்டின் பயன்கள் என்பது அரசுக்கும் அதன் முகமைகளுக்கும் சச்சரவில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பல மடங்காக இருக்கும்.

இதன் விளைவாக இந்தியாவில் தகுதி வாய்ந்த நிபுணர்கள் கிடைப்பார்கள் என்பதோடு இதற்கான செலவும் கூட நமக்குச் சாதகமானதாக இருக்கும்.

நிறுவன ரீதியான நடுவண் ஏற்பாட்டிற்கான மையமாக இந்தியா உருவாவதற்கும் இது வழிவகுக்கும்.

விளைவுகள்;

சுதந்திரமான, சுயாட்சி மிக்க நிறுவன ரீதியான நடுவண் ஏற்பாட்டிற்கான அமைப்பை உருவாக்குவதற்கும், குறிப்பிட்ட நாளிலிருந்து அதாவது 2019 மார்ச் 2-ம் தேதியிலிருந்து சச்சரவு மாற்றுத் தீர்வுக்கான சர்வதேச மையத்தின் பொறுப்புகளை புதுடெல்லி சர்வதேச நடுவண் மையத்திற்கு மாற்றுவதற்கும் இந்த மசோதா வகைசெய்கிறது.

அமலாக்கம்:

உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவிலான சச்சரவுகளைத் தீர்த்து வைக்க சுதந்திரமான, சுயாட்சி மிக்க நிறுவன ரீதியான ஒரு நடுவண் ஏற்பாட்டிற்காகவும், நடுவண் ஏற்பாட்டில் ஒரு சர்வதேச மையமாக இந்தியாவை நிறுவவும் 02.03.2019 அன்று குடியரசுத் தலைவரால் அறிவிக்கப்பட்ட புதுடெல்லி சர்வதேச நடுவண் மையத்திற்கான 2019க்கான அவசர சட்டத்திற்கு மாற்றாக இந்த மசோதா அமைகிறது.

புதுடெல்லி சர்வதேச நடுவண் மையத்திற்கான 2019க்கான அவசர சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் தனக்குள் எடுத்துக் கொள்வதோடு புதுடெல்லி சர்வதேச நடுவண் மையத்திற்கான 2019க்கான அவசர சட்டத்திற்கு மாற்றாகவும் இந்த மசோதா அமைகிறது.

பின்னணி:

மாற்று வழிகளில் சச்சரவுகளைத் தீர்க்கும் வழிகளை மேற்கொண்டு சர்வதேச, உள்நாட்டு வணிக ரீதியான சச்சரவுகளை விரைவாகத் தீர்ப்பதற்கென சுதந்திரமான, சுயாட்சி மிக்க நிறுவன ரீதியான ஒரு நடுவண் ஏற்பாட்டை நிறுவ வேண்டுமென்பதே இந்திய அரசின் முயற்சியாக இருந்து வந்துள்ளது. இந்த வகையில் இந்திய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான திரு. பி.என். ஸ்ரீகிருஷ்ணா அவர்களின் தலைமையில் 2017-ம் ஆண்டில் ஓர் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. பொது நிதியைப் பயன்படுத்தி 1995-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட வணிகரீதியான சச்சரவுகளுக்கு மாற்று வழியில் தீர்வு காண்பதற்கென உருவாக்கப்பட்ட சர்வதேச மையத்தை அரசு மேற்கொண்டு அதனை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஓர் நிறுவனமாக மேம்படுத்த வேண்டுமென இந்த உயர்மட்டக் குழு பரிந்துரை செய்தது.

இந்த உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை கணக்கில் கொண்டு 2018-ம் ஆண்டின் புதுடெல்லி சர்வதேச நடுவண் மைய மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய 2017 டிசம்பர் 15 அன்று கூடிய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. 2018 ஜனவரி 5-ம் தேதியன்று இந்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. 2019 ஜனவரி 4-ம் தேதியன்று மக்களவை இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்து நிறைவேற்றியது. எனினும் இந்த 2018-ம் ஆண்டின் புதுடெல்லி சர்வதேச நடுவண் மைய மசோதாவை மாநிலங்களவையினால் தனது 248வது கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொண்டு நிறைவேற்ற இயலவில்லை. அதன் பிறகு நாடாளுமன்றம் 2019 பிப்ரவரி 13 அன்று மறுதேதி குறிப்பிடப்படாமல் முடிவுக்கு வந்தது.

நிறுவன ரீதியான நடுவண் ஏற்பாடுகளுக்கான மையமாக இந்தியாவை உருவாக்கவும், இந்தியாவில் வர்த்தகம் செய்வதை எளிதாக்குவதை வளர்த்தெடுக்கவுமான இந்த விஷயத்தின் முக்கியத்துவம் மற்றும் அவசரத் தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு 2019 மார்ச் 2-ம் தேதியன்று குடியரசுத் தலைவர் புதுடெல்லி சர்வதேச நடுவண் மையத்திற்கான 2019க்கான அவசர சட்டம் ஒன்றைப் பிறப்பித்தார். அரசியலமைப்புச் சட்டத்தின் 107(5) மற்றும் 123(2) ஆகிய பிரிவுகளில் கூறப்பட்டுள்ள வகையில் புதுடெல்லி சர்வதேச நடுவண் மையத்திற்கான 2019க்கான மசோதாவானது புதுடெல்லி சர்வதேச நடுவண் மையத்திற்கான 2019க்கான அவசர சட்டத்திற்குப் பதிலாக நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

புதுடெல்லி சர்வதேச நடுவண் மையம் – எதிர்கால சர்வதேச நடுவண் ஏற்பாடுகளுக்கான மையம்

புதுடெல்லி சர்வதேச நடுவண் மையத்திற்குத் தலைவராக இருப்பவர் உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ அல்லது உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவோ அல்லது மதிப்பிற்குரிய நபராகவோ இருப்பார். நடுவண் ஏற்பாடுகளுக்கான நிர்வாகத்தை நடத்துவது, அது குறித்த சட்டம் அல்லது நிர்வாகம் ஆகியவற்றில் நல்ல அறிவும் அனுபவமும் மிக்கவராக இருக்கும் அவரை இந்திய உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்து மத்திய அரசு நியமிக்கும். மேலும் உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவன ரீதியான சச்சரவுகளுக்குத்  தீர்வு காண்பதில் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் மிக்க புகழ்பெற்ற நபர்கள் இரண்டு பேரும் முழுநேர அல்லது பகுதி நேர உறுப்பினர்களும் இந்தக் குழுவில் இருப்பர். மேலும் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக மற்றும் தொழில் துறை அமைப்பின் பிரதிநிதி ஒருவரும் பகுதி நேர உறுப்பினராக சுழற்சி முறையில் இந்தக் குழுவில் இடம் பெறுவார். சட்டம் மற்றும் நீதித் துறைக்கான அமைச்சகத்தின் செயலாளர், நிதி அமைச்சகத்தின் செலவுத் துறையினால் பரிந்துரைக்கப்படும் நிதி ஆலோசகர், மற்றும் புதுடெல்லி சர்வதேச நடுவண் மையத்தின் தலைமை செயல் அலுவலர் ஆகியோரும் இந்தக் குழுவில் அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்களாக இருப்பர்.

புதுடெல்லி சர்வதேச நடுவண் மையத்தின் நோக்கங்களும் இலக்குகளும்:-

(அ) உள்நாட்டு மற்றும் சர்வதேச நடுவண் ஏற்பாடுகளை நடத்துவதற்கான ஒரு முன்னோடி நிறுவனமாக இதை வளர்த்தெடுப்பதற்குத் தேவையான சீர்திருத்தங்களைக் கொண்டு வருவது.

(ஆ) சமரசம், நடுநிலை மற்றும் நடுவர் நடவடிக்கைகளுக்குத் தேவையான வசதிகளை செய்து தருதல் மற்றும் நிர்வாக உதவிகள் வழங்குதல்;

(இ) தேசிய மற்றும் சர்வதேச அளவிலான சர்வேயர்கள் மற்றும் புலனாய்வு வல்லுநர்கள் போன்ற நிபுணர்களைக் கொண்ட அங்கீகாரம் பெற்ற நடுவர்கள், சமரசிகள் மற்றும் மத்தியஸ்தர்களின் ஆகியோருக்கான பட்டியல்களைப் பராமரித்தல்;

(ஈ) சர்வதேச மற்றும் உள்நாட்டு நடுவண் ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல் மற்றும் மிகவும் தொழில்முறை ரீதியான சமரச ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல்;

(உ) உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவிலான நடுவண் ஏற்பாடுகள் மற்றும் சமரசப் பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றை பயனுள்ள வகையிலும் சரியான நேரத்திலும் வழங்குதல்;

(ஊ) சச்சரவுகளை மாறுபட்ட வகையில் தீர்ப்பது மற்றும் அவை தொடர்பான விஷயங்களில் ஆய்வுகளை வளர்த்தெடுப்பது; சச்சரவுகளை தீர்க்கும் முறையில் சீர்திருத்தங்களை வளர்த்தெடுப்பது;

(எ) சச்சரவுகளை மாறுபட்ட வகையில் தீர்ப்பதற்கான உள்நாட்டு அல்லது சர்வதேச கழகங்கள், நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றுடனான ஒத்துழைப்பினை வளர்த்தெடுப்பது.



(Release ID: 1574237) Visitor Counter : 249