தேர்தல் ஆணையம்

தேர்தலில் பதிவான வாக்குகளோடு வாக்குப்பதிவு எந்திரங்கள் முற்றிலும் பாதுகாப்பான அறைகளில் வைக்கப்பட்டுள்ளது- தேர்தல் ஆணையம் விளக்கம்

Posted On: 21 MAY 2019 2:56PM by PIB Chennai

   மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கி்ய வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும்  ஒப்புகைச் சீட்டு வழங்கும் எந்திரம் ஆகியவை பாதுகாப்பான அறைகளில் வைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறைகள் வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் பார்வையாளர்கள் முன்னிலையில், இரண்டு பூட்டுகள் மூலம் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் நிகழ்வுகள் மற்றும் சீலிடப்படுவது அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குகள் எண்ணி முடிக்கப்படும் வரை தொடர்ந்து கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மத்திய  படைப்பிரிவு காவலர்கள் மூலம் 24 மணி நேரமும் இந்த அறைகள் பாதுகாக்கப்படுவதாகவும், வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறைகள் முன்னர் வேட்பாளர்களோ அல்லது அவர்களது முகவர்களோ 24 மணி நேரமும் விழிப்புடன் இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  

 வாக்குகள் பதிவான எந்திரங்களை மாற்றுவதற்காக வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்துச் செல்லப்படுவதாக வரும் புகார்களை திட்டவட்டமாக மறுத்துள்ள தேர்தல் ஆணையம் ஊடகங்களில் வரும் இது போன்ற குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானது, உண்மைக்கு புறம்பானது என்று தெரிவித்துள்ளது. ஒருசில ஊடகங்களில் காட்டப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள், தேர்தலின்போது பயன்படுத்திய வாக்குப்பதிவு எந்திரங்கள் அல்ல என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

 

   வாக்கு எண்ணும் நாளன்று வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறை வேட்பாளர்கள், அல்லது அவர்களது முகவர்கள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் திறக்கப்படும் என்றும் இதுவும் காட்சிப்படுத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குப் பதிவு எந்திங்களில் உள்ள வாக்குகளை எண்ணுவதற்கு முன்பு வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை  குறித்து வேட்பாளர்கள் அல்லது அவர்களது முகரவர்கள் திருப்தி அடையும்  வகையில் வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள முகவரி சீட்டுகள், முத்திரை மற்றும் வரிசை எண் ஆகியவை காண்பிக்கப்படும் என்றும்  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

    வாக்குகளை எண்ணுவதற்கு உண்டான ஏற்பாடுகளை  வேட்பாளர்களுக்கு விளக்குமாறு தலைமைத் தேர்தல் அதிகாரிகள்  மற்றும் மாவட்ட தேர்தல்  அதிகாரிகள்  அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள தேர்தல் ஆணையம், இந்த விரிவான ஏற்படுகளால் வாக்குப்பதிவு எந்திரங்களில் தவறுகள் நடைபெற வாய்ப்பே இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    

-----



(Release ID: 1572334) Visitor Counter : 290