இடுகை இடப்பட்ட நாள்:
30 APR 2019 11:25AM by PIB Chennai
தீவிர புயலாக வங்காள விரிகுடாவின் தென் கிழக்கு மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள தென்மேற்கு பகுதிகளில் மையம் கொண்டிருந்த ஃபானி புயல் கடந்த ஆறு மணிநேரத்தில் மணிக்கு 16 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு-வடமேற்கை நோக்கி நகர்ந்து மிகத் தீவிர புயலாக மாறியுள்ளது. இது சென்னையின் கிழக்கு - தென்கிழக்கிலிருந்து 690 கிலோமீட்டர் தூரத்திலும், ஆந்திரப் பிரதேசத்தின் மசூலிப்பட்டினத்தின் தென்கிழக்கிலிருந்து 760 கிலோமீட்டர் தூரத்திலும், இலங்கையின் திரிகோணமலையின் கிழக்கு-வடகிழக்கிலிருந்து 670 கிலோமீட்டர் தூரத்திலும் மையம் கொண்டுள்ளது. அடுத்த 36 மணிநேரத்தில் இது மிகத்தீவிர புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே 1-ஆம் தேதி மாலை வரை வடமேற்கை நோக்கி நகர்ந்து பிறகு ஒடிசா கடலோரப் பகுதியையொட்டி வடக்கு – வடகிழக்கை நோக்கி ஃபானி புயல் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் ஒரு சில வடகடலோரப் பகுதிகளிலும், ஆந்திராவின் தென்கடலோரப் பகுதிகளிலும் அடுத்த 24 மணிநேரத்திற்கு லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
தற்போது வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு மற்றும் அதனைச் சுற்றியுள்ள தென்மேற்கு பகுதிகளில் 100 – 110 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் காற்று, 125 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இன்று காலை முதல் 120 – 130 கிலோமீட்டர் வரை வீசும் காற்று மெதுவாக அதிகரித்து 150 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும். வடதமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திரப்பிரதேசத்தின் தெற்கு கடலோரப் பகுதிகளான வங்காள விரிகுடாவின் மேற்கு மத்திய மற்றும் அதனை சுற்றியுள்ள தென் மேற்கு பகுதிகளில் மே 1 ஆம் தேதி மாலை முதல், மணிக்கு 160 - 170 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடிய காற்று, 190 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மே 1 ஆம் தேதிவரை தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திரப்பிரதேசத்தின் தென்கடலோரப் பகுதிகளில் கடல் அதிக சீற்றத்துடன் காணப்படும்.
வங்காள விரிகுடாவின் தென்மேற்கு மற்றும் அதனைச் சுற்றியுள்ள மேற்கு மத்தியப் பகுதிகளான தமிழகம், புதுச்சேரி, இலங்கை மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் தெற்கு கடலோரப் பகுதிகளில் உள்ள மீனவர்கள் மே 1 ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் கரைக்கு திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
*******