உள்துறை அமைச்சகம்

அமைச்சரவைச் செயலர் தலைமையில் தேசிய இடர் மேலாண்மைக் குழு கூட்டம், ஃபானி புயல் தயார் நிலை நடவடிக்கை குறித்து ஆய்வு

Posted On: 29 APR 2019 1:21PM by PIB Chennai

ஃபானி புயல் தயார் நிலை நடவடிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக அமைச்சரவை செயலர் தலைமையில் தேசிய இடர் மேலாண்மைக் குழுக் கூட்டம் புதுதில்லியில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களின்  தலைமைச் செயலர்கள் / முதன்மைச் செயலர்கள் காணொலிக் காட்சி மூலம் கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் தொடர்புடைய மத்திய அமைச்சகங்களும் முகமைகளும், மூத்த அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

புயலினால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து தயார் நிலை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநில அரசு அலுவலர்கள் தெரிவித்தனர்.  மேலும், மாநில அரசுகள், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளதாகவும், இனப்பெருக்க காலம் என்பதால் ஜூன் 14 வரை மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.  இந்தத் தடையை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் மாநில அரசுகளின் வேண்டுகோளுக்கு ஏற்ப, மாநில பேரிடர் நிவாரண நிதியின் முதல் தவணை முன்னதாக வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உறுதி அளித்துள்ளது. 

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வானிலை அறிக்கையின் படி, தற்போது ஃபானி புயல் சென்னையின் தென்கிழக்கிலிருந்து 880 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   நாளை இது அதிதீவிர புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மே 1 ஆம் தேதி வரை இந்த புயல் வடமேற்கு திசைக்கு நோக்கி சென்று, பிறகு வடகிழக்கை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  கிழக்கு கடற்கரையில் உள்ள மாநிலங்களில் இதனால் ஏற்படவுள்ள தாக்கம் குறித்து அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், இந்திய கடற்படையினரும் தயார் நிலையில் இருப்பதாகவும், அவர்கள் மாநில அரசின் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், ஏற்கனவே சென்றிருப்பவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறும், கடந்த 25 ஆம் தேதி முதல்  எச்சரிக்கைகள் தொடர்ந்து விடுக்கப்பட்டுள்ளன.  இந்திய வானிலை ஆய்வு மையம்,  சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும், மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை பருவநிலை அறிக்கைகளை அளித்து வருகிறது.  மத்திய உள்துறை அமைச்சகமும், தொடர்புடைய மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசின் துறைகளுடன்  தொடர்பு கொண்டு நிலைமையைக் கண்காணித்து வருகிறது.

நிலைமையை உன்னிப்பாக கவனித்து வரும் பிரதமரின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப தேசிய இடர் மேலாண்மை குழுவின் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. நாளையும் இந்தக் குழு கூடி,  நிலைமை குறித்து ஆய்வு செய்யும்.

     
**********


(Release ID: 1571277) Visitor Counter : 141