பிரதமர் அலுவலகம்

சிக்கிம், அருணாச்சல பிரதேசம் மற்றும் திரிபுராவில் அமைக்கப்படும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்திற்காக, வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பிரதமர் அடிக்கல் நாட்டி ஆற்றிய உரை

Posted On: 07 MAR 2019 5:17PM by PIB Chennai

வடகிழக்கு பிராந்தியத்தில் ஸ்மார்ட் நிர்வாகத்திற்கான இந்த புதிய தொடக்கத்தில் நானும் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கேங்டாக், நமச்சி, பசிகாட், இட்டாநகர் மற்றும் அகர்தலா ஆகிய இடங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையங்களின் தொடக்கம் வரவேற்கத்தக்கதாகும்.

திறமையான மனித வளங்களை கொண்ட வடகிழக்கின் நகர்ப்புற மையங்கள், ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் வளர்ச்சி மையங்களாக உருவாக்கக் கூடிய தகுதியை கொண்டவை.

ஸ்மார்ட் சிட்டி திட்டமானது, நகரங்கள் அவற்றின் ஆற்றல் மற்றும் சவால்களை அடையாளம் காண உதவுகிறது. இது, பொதுமக்கள் ஆலோசனைகளுடன் சவால்களுக்கு ஸ்மார்ட் தீர்வுகளை காண ஊக்குவிக்கிறது.

ஸ்மார்ட் சிட்டி கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையங்கள் வெவ்வேறு சேவை நெட்வொர்க்குகளை ஒருங்கிணைக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன. அவை, போலீஸ், போக்குவரத்து, மின்சாரம், குடிநீர், சுகாதாரம் மற்றும் பொது பாதுகாப்பு பயன்பாடுகள் போன்ற துறைகள் மத்தியில் நிகழ் நேர ஒத்துழைப்பை அளிக்கின்றன.

இங்கு இந்த அமைப்பை நிறுவுவதின் மூலம், நிர்வாகிகள் நகர செயல்பாடுகளை சிறந்த முறையில் கண்காணிக்கவும், சரியான நேரத்தில் பதிலளிக்கவும் முடியும் என நம்புகிறேன்.

ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையங்களை இந்தியா முழுவதும் நிறுவும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 1, 2019 தேதிப்படி, ஏற்கனவே இம்மையங்கள் 15 ஸ்மார்ட் நகரங்களில் செயல்படத் தொடங்கி விட்டன. இதுதவிர, மேலும் 50 நகரங்களில் மையத்தை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

வடகிழக்கு பிராந்தியத்தின் முதல் ஸ்மார்ட் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையம் அக்டோபர், 2019க்குள் நிறுவப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

பொது மக்களின் பாதுகாப்புக்கான சிசிடிவி கண்காணிப்பு அமைப்பு, இந்த மையத்தின் முக்கிய கூறுகளில் ஒன்றாகும். இந்த அமைப்பு குற்றங்களை சமாளிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பு போக்குவரத்து நெரிசலை தளர்த்த உதவும்.

கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்தின் திடக்கழிவு மேலாண்மை, நகரங்களின் சுதத்தை மேம்படுத்தும். ஸ்மார்ட் தெரு விளக்குகள் நம் தெருக்களை பாதுகாப்பானதாகவும், மக்களுக்கு உகந்ததாகவும் செய்துவிடும். மேலும், எல்இடி அமைப்புகளுக்கு மாற்றுவதன் மூலம் ஆற்றல் செயல்திறனையும் அதிகரிக்கும்.

ஸ்மார்ட் நகரங்களில் பொதுமக்கள் குறைதீர் அமைப்புகளும் மற்றும் முக்கிய பொது தகவல்களை கொண்டு செல்ல பல்வேறு தகவல் பலகைகளும் அமைக்கப்படுகின்றன.

டிஜிட்டல் அணுகல் என்பது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முக்கிய அங்கமாகும். பொது ஒய்-வை அமைப்பு, பொதுமக்கள் இலவச இன்டர்நெட் சேவையை வழங்கும்.

வடகிழக்கு பிராந்தியம், சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதியாகும். இங்கு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்பும் மற்றும் பேரிடர் மேலாண்மை தொகுப்புகள் நிகழ்கால தகவல்களை பொதுமக்களுக்கும், அரசுக்கும் வழங்கும். இது, பொதுமக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்தவும் உதவும்.

இந்த அமைப்பின் பல்வேறு கூறுகளை நகரங்களில் நிறுவுவதல் மற்றும் விரிவுபடுத்துதல் மூலம், பொதுமக்களின் வாழ்வை எளிதாக்குவதை மேம்படுத்த முடியும்.

வடகிழக்கு பிராந்தியத்தில் 10 ஸ்மார்ட் நகரங்களில் மொத்தம் 15,000 கோடி ரூபாய் மதிப்பில் 500க்கும் மேற்பட்ட திட்டங்கள் செயல்படுத்த இருப்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். இதில், 59 திட்டங்களுக்கான பணி உத்தரவுகள் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டன.

சிக்கிமின் நமச்சியில் ஒருங்கிணைந்த குடிநீர் வழங்கல் திட்டங்கள், எல்இடி தெரு விளக்குகள் மற்றும் நடைபாதைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டிருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். நமது மலை நகரங்களில் குடிநீரை கொண்டு செல்வது என்பது மிகக் கடினமான சவாலாகும். கேங்டாக்கில் மழைநீர் சேகரிப்பு பணிகள் தொடங்கி இருக்கின்றன. மேலும், போக்குவரத்து நெரிசலை எளிதாக்குவதற்கு, ஸ்மார்ட் பார்க்கிங் கொண்ட பல அடுக்கு கார் நிறுத்துமிடம் கட்டும் திட்டங்களும் நடந்து வருகிறது.

கிண்ண வடிவ புவியியல் அமைப்பு காரணமாக, தனித்துவமான சவால்களை கொண்டிருக்கும் அகர்தலா வெள்ளத்தால் அதிகளவில் பாதிக்கப்படக் கூடியதாக இருக்கிறது. அவைகளையும் அந்த நகர நிர்வாகம் சமாளித்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழான அனைத்து திட்டங்களையும் ஏற்று செயல்படுத்தி வருகிறது.

இட்டாநகர், அதன் ஸ்மார்ட் சாலைகள் மற்றும் நுண்ணறிவு போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து மேலாண்மை அமைப்பு மூலமாக நகர சாலை நெட்வொர்க்கை மேம்படுத்தும் திட்டத்தை கொண்டுள்ளன. ஸ்மார்ட் சிட்ட திட்டங்களின் மூலம் பசிகாட், அதன் வீட்டு வசதி, ஆற்றல் மேலாண்மை மற்றும் வணிக வளர்ச்சி ஆகியவற்றின் சவால்களை அடையாளம் காண்கிறது.

எனவே, ஒவ்வொரு நகரமும் அதன் முக்கிய பிரச்சனைகளை அடையாளம் கண்டு, அப்பிரச்சனைகளுக்கு தீர்வுகளை கண்டுபிடிப்பதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.

வடகிழக்கு பிராந்தியத்தின் குவாஹதி, அய்ஸால் கோஹிமா, இம்பால் மற்றும் ஷில்லாங் ஆகிய பிற 5 நகரங்களும் இதே திசையில் நகர்கின்றன என்பதை இங்கு குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வரும் பணியும் முழு வேகமெடுத்துள்ளது.

நமது வடகிழக்கு பிராந்திய நகரங்கள் நகர்ப்புற மாற்றத்தை நோக்கி வேகமாக முன்னேறி வருகின்றன. இது வாழ்க்கை தரம் மற்றும் இப்பிராந்தியத்தின் பொருளாதார மேம்பாட்டை அதிகரிக்கும் என நம்புகிறேன்.

* * *



(Release ID: 1568465) Visitor Counter : 185