பிரதமர் அலுவலகம்

நாக்பூர் நகர மெட்ரோ சேவையை பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்

Posted On: 07 MAR 2019 6:30PM by PIB Chennai

நாக்பூர் நகர மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று புது டில்லியில் இருந்து காணொளிக் காட்சியின் மூலம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். நாக்பூர் மெட்ரோவின் காப்ரி முதல் சிதாபுல்தி பிரிவு வரையிலான 13.5 கிலோமீட்டர் நீள ரயில் சேவை தொடங்குவது குறித்த கல்வெட்டு டிஜிட்டல் முறையில் திறக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே காணொளிக் காட்சியின் மூலம் பேசிய பிரதமர் மகாராஷ்ட்ர மாநிலத்தின் இரண்டாவது மெட்ரோ சேவையாக அமையும் இந்த வசதிக்காக நாக்பூர் நகர மக்களுக்கு பாராட்டுதல்களைத் தெரிவித்தார். நாக்பூர் நகர மெட்ரோ சேவைக்காக 2014-ம் ஆண்டில், தான் அடிக்கல் நாட்டியதை நினைவு கூர்ந்த அவர் இது தனக்கு சிறப்பானதொரு தருணமாகும் என்றும் குறிப்பிட்டார். இந்த மெட்ரோ சேவையானது நாக்பூர் நகர மக்களுக்கு சிறந்த, விலை மலிவான, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான போக்குவரத்தாக விளங்கும் என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

நாக்பூர் நகரின் எதிர்காலத் தேவைகளை மனதில் கொண்டு அதன் வளர்ச்சிக்காக மத்திய அரசும் மாநில அரசும் தொடர்ந்து பாடுபட்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த மெட்ரோ சேவையானது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதோடு, நகரின் எதிர்கால வளர்ச்சிக்கும் உதவி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடு முழுவதிலும் நவீன போக்குவரத்து முறையை வளர்த்தெடுப்பதில் மத்திய அரசின்  முன்முயற்சிகளைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர் கடந்த நான்கரை ஆண்டுகளில் 400 கிலோமீட்டர் அளவுக்கு செயல்படும் வகையிலான மெட்ரோ சேவை உருவாக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். நாடு முழுவதிலும் தற்போது 800 கிலோமீட்டர் அளவிற்கான மெட்ரோ சேவைக்கான வேலைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பொதுவான போக்குவரத்துக்கான அட்டையான ஒரு நாடு ஒரே அட்டை என்ற திட்டத்தின் பயன்களையும் பிரதமர் சுட்டிக் காட்டினார். உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த அட்டையானது வங்கிக் கணக்கில் இருந்து கழித்துக் கொள்ளும் வங்கி அட்டையுடன் இணைந்து செயல்படுவதாக அமைந்துள்ளதாகவும் இது போன்ற அட்டையை உருவாக்க மற்ற நாடுகளை இந்தியா நம்பியிருக்க வேண்டிய நிலை இனி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். போக்குவரத்துக்காக இது போன்ற பொது அட்டை வசதிகளை உலகில் ஒரு சில நாடுகள் மட்டுமே கொண்டுள்ளன என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

பிரச்சனைகளுக்கான தீர்வுகளைக் கண்டறிவதில் ஒருங்கிணைந்த ஓர் அணுகுமுறையை மத்திய அரசு கொண்டுள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.  நாட்டின் குடிமக்கள் அனைவரும் வசதியாக வாழ்வதை உறுதி செய்வதில் அரசு உறுதி பூண்டுள்ளதையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

 

 

*****



(Release ID: 1568347) Visitor Counter : 129