பிரதமர் அலுவலகம்

வாரணாசியில் 2019 தேசிய மகளிர் வாழ்வாதாரக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பு

Posted On: 08 MAR 2019 1:03PM by PIB Chennai

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, உத்திரப்பிரதேசம், வாரணாசியில் உள்ள தீன்தயாள்  ஹஸ்ட்கலா சங்குலில் நடைபெற்ற, 2019  தேசிய பெண்கள் வாழ்வாதாரக் கூட்டத்தில்  பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.

      உத்திரப்பிரதேச ஊரக வாழ்வாதார இயக்கம் ஏற்பாடு செய்திருந்த, சுயஉதவி குழுக்கள் உற்பத்தி செய்த பொருட்களின் கண்காட்சியையும் பிரதமர் பார்வையிட்டார். மின்சாரத்தால் இயங்கும் மண்பாண்ட தயாரிப்புக்கருவி, சூரியசக்தி ராட்டை உள்ளிட்டவைகளை  பெண் பயனாளிகளுக்கு விநியோகித்த பிரதமர், ஐந்து மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு  பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். பாதுகாப்பு படைவீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்திற்கும்  உதவும் “பாரத் கி வீர்” நிதியத்திற்காக, உத்திரப்பிரதேச தீன்தயாள் அந்தியோதயா திட்டத்தால்  உதவி பெறும் பல்வேறு மகளிர் சுயஉதவிக் குழுக்கள் சேகரித்த நிதியான, ரூ.21 லட்சத்திற்கான காசோலையை அவர்கள் பிரதமரிடம் அளித்தனர்.

      சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, அனைத்து பெண்களுக்கும்  தனது  வணக்கத்தையும், மரியாதையையும் தெரிவித்த பிரதமர், புதிய இந்தியாவை உருவாக்குவதில் பெண்களுக்கு முக்கிய பங்கு இருப்பதாகக் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில், 75 ஆயிரம் இடங்களிலிருந்து சுமார் 65 லட்சம் பெண்கள், காணொலி காட்சி மூலம் பங்கேற்றது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். பெண்களுக்கு  அதிகாரம் அளித்தலுக்கான சிறந்த உதாரணமாக வாரணாசி திகழ்வதாக அவர் குறிப்பிட்டார்.

      பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்பதில் அரசு முழுமையான கடப்பாட்டுடன் இருப்பதாக  பிரதமர்  கூறினார். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் நலனுக்காக, குறிப்பாக சுகாதாரம், ஊட்டச்சத்து, துப்புரவு, கல்வி, திறன்மேம்பாடு, சுயதொழில், புதிய சமையல் எரிவாயு இணைப்புகள்,  பெண்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகியவை தொடர்பான பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார். பேறு காலத்தில் ஆறு மாத விடுப்பை அரசு அறிமுகப்படுத்தியிருப்பது, உலகின் மிகச் சிறந்த முன்முயற்சி என்று அவர் குறிப்பிட்டார்.

       மத்திய அரசின் அனைத்துத்திட்டங்களிலும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகத் தெரிவித்த பிரதமர், 15 கோடி முத்ரா கடன் உதவிகளில் 11 கோடி பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

      இந்தியாவில் சுயஉதவிக்குழுக்கள் மேற்கொண்டு வரும் உன்னதமான பணிகளைப் பாராட்டிய பிரதமர், அவர்களது பணி, குடும்ப நலத்திற்கானது மட்டுமல்ல நாட்டின் வளர்ச்சிக்கும் இட்டுச்செல்கிறது என்றார். அதிக வங்கிக் கடன்கள் மற்றும் ஆதரவான செயல்முறைகள் வாயிலாக மத்திய அரசு சுயஉதவிக்குழுக்களுக்கு புதிய ஆற்றலைப் பாய்ச்சி வருவதாக அவர் குறிப்பிட்டார். நமது நாட்டில் சுமார் ஐம்பது லட்சம் சுயஉதவிக்குழுக்கள் இயங்குவதாகவும், அவற்றில் ஆறு கோடி பெண்கள் இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். ஒரு குடும்பத்திலிருந்து குறைந்தபட்சம் ஒரு பெண் உறுப்பினரையாவது சுயஉதவிக்குழுவில் இணைக்க வேண்டும் என்ற தனது அரசின்  தொலைநோக்குப் பார்வையையும் பிரதமர் பகிர்ந்து கொண்டார்.

      புத்தாக்கத்தில் கவனம் செலுத்துமாறும், தமது சந்தையை சிறப்பாகப் புரிந்து கொள்ளுமாறும் அவர் சுயஉதவிக்குழுக்களைக் கேட்டுக் கொண்டார். அரசுக்கு தமது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்காக ஜெம் இணைய முனையத்தை பயன்படுத்துமாறும், வாய்ப்புள்ள புதிய துறைகளில் தமது பணிகளை விரிவுப்படுத்துமாறும் பிரதமர் மேலும் கேட்டுக் கொண்டார்.

      வயதான காலத்தில் நிதிப் பாதுகாப்பை அளிக்கும் திட்டமான, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரதான் மந்திரி ஷ்ரம் மாந்தன் யோஜனாவை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அவர் பெண்களைக் கேட்டுக் கொண்டார்.   பிரதமரின் கிஸான் சம்மான் நிதி, ஆயுஷ்மான் பாரத் யோஜனா ஆகிய திட்டங்களின் பலன்கள் குறித்து பிரதமர் எடுத்துரைத்தார்.

      வாரணாசியில் உள்ள சுயஉதவிக்குழுக்களின் உறுப்பினர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

-----



(Release ID: 1568332) Visitor Counter : 135