பிரதமர் அலுவலகம்

அமேதியில் இந்திய ரஷ்ய கூட்டு முயற்சியான துப்பாக்கி நிறுவனத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

Posted On: 03 MAR 2019 7:15PM by PIB Chennai

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் உள்ள கவ்ஹாருக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று (03.03.2019) வருகை தந்தார். அவர், கலாஷ்னிகாவ் தாக்குதல் துப்பாக்கி தயாரிப்புக்கான இந்திய – ரஷ்ய துப்பாக்கி நிறுவன கூட்டு முயற்சியை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அவர், அமேதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் துவக்கி வைத்ததுடன் பல திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியையொட்டி ரஷ்ய அதிபர் விளாடிமீர் புட்டின் அனுப்பிய சிறப்பு செய்தியை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்தார். “புதிய கூட்டு முயற்சி உலகப் புகழ்ப்பெற்ற  கலாஷ்னிகாவ் தாக்குதல் துப்பாக்கிகளின் புதிய 200வது தொடரை தயாரிப்பதோடு விரைவில், முழுமையான உள்நாட்டு தயாரிப்புக்கான இலக்கை அடையும். எனவே, மேம்படுத்தப்பட்ட ரஷ்ய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சிறு போர் கருவிகளின் பிரிவில், இந்திய பாதுகாப்பு தொழில்துறை தேசிய பாதுகாப்பு முகமைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வாய்ப்பை பெறும்”

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்த பங்களிப்பிற்கு அதிபர் புட்டினுக்கு நன்றி தெரிவித்தார். அமேதியில் உள்ள இந்த தொழிற்சாலையில் லட்சக்கணக்கான துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டு அது நமது பாதுகாப்புப் படைகளை வலுப்படுத்தும் என்றார்.

இந்த வளர்ச்சி நீண்டகாலம் தாமதிக்கப்பட்டதாக அவர் கூறினார். நமது பாதுகாப்பு வீரர்களுக்கான  நவீன துப்பாக்கிகளின் தயாரிப்பு தாமதப்படுத்தப்பட்டது உண்மையில் நமது வீரர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதற்கு இணையானதாகும் என்றார். 2009-ஆம் ஆண்டில் குண்டு துளைக்காத ஆடைக்கான தேவை சுட்டிக்காட்டப்பட்டதை நினைவுகூர்ந்த பிரதமர், 2014ஆம் ஆண்டு வரை இதுபோன்ற ஆடைகள் வாங்கப்படவில்லை என்றார். இந்த தேவையை தற்போது மத்திய அரசு பூர்த்தி செய்திருப்பதாக அவர் கூறினார். முன்பு,  முக்கியமான போர் தளவாடங்கள் வாங்குவதில் இதுபோன்ற தாமதம் ஏற்பட்டதாக அவர் கூறினார். இச்சூழலில், ரஃபேல் போர் விமானங்கள் பற்றி குறிப்பிட்ட அவர், மத்திய அரசின் முயற்சிகளின் காரணமாக இவை சில மாதங்களில் இந்திய விமானப்படையில் சேர்க்கப்படும் என்றார்.

அமேதியில் இதர வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதிலுள்ள சிக்கல்களை அவர் சுட்டிக்காட்டினார். இந்தச் சிக்கல்கள் நீக்கப்படும் என்று கூறிய அவர், மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு இத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார். அமேதியில் பிரதமர் வீட்டு வசதி திட்டம், உஜ்வாலா திட்டம், சௌபாக்யா யோஜனா மற்றும் கழிப்பறைகளை கட்டுவது ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுவது மக்கள் வசதியான முறையில் வாழ்வதற்கு வழிவகுக்கிறது என்றார்.

மத்திய அரசு ஏழைகளுக்கு அதிகாரமளிப்பதாக கூறிய பிரதமர், அவர்கள் வறுமையை விட்டு வெளியில் வருவதற்கும் உதவுவதாக தெரிவித்தார். அதே போன்று, விவசாயிகளுக்கும் அதிகாரங்கள் அளிக்கப்படுவதாக அவர் கூறினார். இச்சூழலில்,  பிரதமர் விவசாயிகள் உதவித் திட்டம் பற்றியும் அவர் சுட்டிக்காட்டினார்.  அடுத்த பத்தாண்டுகளில் விவசாயிகளுக்கு 7.5 லட்சம் கோடி ரூபாய் சென்று சேருவதை இத்திட்டம் உறுதி செய்யும் என்றார் அவர்.

                                    *****



(Release ID: 1567628) Visitor Counter : 142