பிரதமர் அலுவலகம்

மார்ச் 6, 2019 அன்று கர்நாடகாவில் காலபுராகி மற்றும் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் ஆகிய இடங்களுக்கு பிரதமர் வருகை தரவிருக்கிறார். பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் துவங்கப்படவுள்ளன

இடுகை இடப்பட்ட நாள்: 05 MAR 2019 3:02PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் நாளை கர்நாடக மாநிலத்தில் உள்ள காலபுராகி மற்றும் தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டம் ஆகிய இடங்களுக்கு வருகைதரவுள்ளார். இந்த இரு இடங்களிலும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் அவர் தொடங்கி வைப்பார்.

காலபுராகி, கர்நாடகா

காலபுராகியில் எரிசக்தி, சுகாதாரம், கல்வி ஆகிய பல்வேறு துறைகளிலும் கர்நாடக மாநில மக்களின் நலனுக்கான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைப்பார்.

இவற்றில் அடங்குவன:

சுகாதார துறையில்

கர்நாடக மாநிலத்தில் மருத்துவ சேவைத் துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் பெங்களூரு நகரத்தில் இஎஸ்ஐசி மருத்துவ மனை மற்றும் மருத்துவக் கல்லூரியை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிப்பார். ஹுப்பள்ளியில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவத் துறைகளுக்கான வளாகத்தையும் அவர் நாட்டிற்கு அர்ப்பணிப்பார். இந்த திட்டங்கள் கர்நாடக மாநில மக்கள் தரமான, தகுதியான மருத்துவசேவையைப் பெறுவதை உறுதிப்படுத்துவதாக அமைகின்றன.

எரிசக்தித் துறை

ரெய்ச்சூரில் உள்ள பிபிசிஎல் கிடங்கை காலபுராகிக்கு மாற்றுவதற்கான திட்டத்திற்கு திரு. மோடி அவர்கள் அடிக்கல் நாட்டுவார்.

மேலும் பெங்களூரு நகரில் உள்ள வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திற்கான முனையத்தையும் பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிப்பார்.

வடகிழக்குப் பகுதியிலிருந்து வந்து பெங்களூர் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கான பெண்கள் விடுதியையும் அவர் தொடங்கி வைப்பார்.

எளிதாக வாழ்வதை உறுதி செய்வது என்ற மத்திய அரசின் உறுதிபாட்டை தொடர்ந்து வலியுறுத்துவதாக இந்த திட்டங்கள் அமைகின்றன.

காலபுராகியில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பயனடைந்தோருடனும் பிரதமர் உரையாடுவார்.

 

காஞ்சிபுரம், தமிழ்நாடு

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் நகரில் சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, எரிசக்தி ஆகிய துறைகளில் பல்வேறு திட்டங்களை பிரதமர் தொடங்கி வைப்பார். இந்தத் திட்டங்கள் மாநிலத்தில் உள்ள சாலை மற்றும் ரயில்வே போக்குவரத்துக்கான கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதாக அமையும். தமிழ்நாட்டு மக்கள் சிறப்பாகவும், விரைவாகவும், விலைமலிவாகவும் போக்குவரத்து வசதியைப் பெற இத்திட்டங்கள் வழியமைக்கும்.

இவற்றில் அடங்குவன:

சாலைப்போக்குவரத்து துறை

தமிழ்நாட்டில் சாலைப் போக்குவரத்து கட்டமைப்புக்கு மேலும் ஊக்கம் தரும்வகையில் தேசிய நெடுஞ்சாலை எண் 45-சியில் விக்ரவாண்டி- சேத்தியாத்தோப்பு பிரிவு, சேத்தியாதோப்பு-சோழபுரம் பிரிவு, சோழபுரம்-தஞ்சாவூர் பிரிவு ஆகியவற்றை நான்கு வழி சாலையாக மாற்றும் வேலைகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.

தேசிய நெடுஞ்சாலை எண் 4 இல் காரைப்பேட்டை- வாலாஜாபேட்டை பிரிவை ஆறுவழிப் பாதையாக மாற்றும் வேலைகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டுவார்.

தேசிய நெடுஞ்சாலை எண் 234-ஐ வலுப்படுத்தும் வகையில் சாலைகளை விரிவுபடுத்துவது, வலுப்படுத்துவது மற்றும் குறுக்குப் பாலங்களைக் கட்டுவது ஆகிய வேலைகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். தேசிய நெடுஞ்சாலை எண் 381-இல் அவினாசி-திருப்பூர்-அவினாசிப்பாளையம் பிரிவின் சாலைகளை விரிவுபடுத்தல், வலுப்படுத்தல், அதை நான்கு வழிப்பாதையாக மாற்றல் ஆகிய பணிகள் முடிந்துள்ள நிலையில் இப்பிரிவை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிப்பார்.

ரயில்வே துறை

ஈரோடு-கரூர்-திருச்சிராப்பள்ளி பிரிவிலும் சேலம்-கரூர்-திண்டுக்கல் பிரிவிலும் ரயில்வே பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் பாதைகளை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிப்பார்.

இத்தகைய மின்மயமாக்கல் புவியை வெப்பமயமாக்கும் வாயுக்கள் வெளிப்படுவதை குறைப்பதோடு, இந்தப் பாதையில் செல்லும் பயணிகள் மற்றும சரக்கு போக்குவரத்திற்கான பயணநேரம்  குறையும்.

எரிசக்தி துறை

எண்ணூரில் அமைந்துள்ள திரவ இயற்கை எரிவாயு முனையத்தையும் பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிப்பார்.

ஆண்டுக்கு 5 மில்லியன் மெட்ரிக் டன்களை கையாளும் திறன்படைத்த இந்த எண்ணூர் திரவ இயற்கை எரிவாயு முனையம் தமிழ்நாடு மற்றும் அருகமை மாநிலங்களின் திரவ இயற்கை எரிவாயு தேவைகளை நிறைவேற்றுவதாக இருக்கும்.

மேலும் சென்னையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கலை-அறிவியல் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள டாக்டர் எம் ஜி ராமச்சந்திரன் அவர்களின் திருவுருவச் சிலையை பிரதமர் காணொளிக் காட்சியின் மூலம் திறந்துவைப்பார்.

நடிகரும் அரசியல்வாதியுமான டாக்டர் எம் ஜி ராமச்சந்திரன் 1977 முதல் 1987 வரையில் 10 ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதல்வராக பணியாற்றியவர் ஆவார். அவருக்கு பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் நகரில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயனடைந்தோருடனும் பிரதமர் கலந்துரையாடுவார்.

 

***


(வெளியீட்டு அடையாள எண்: 1567565) வருகையாளர் எண்ணிக்கை : 242
இந்த வெளியீட்டை படிக்க: Assamese , Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati