பிரதமர் அலுவலகம்

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்தார் பிரதமர்

அகமதாபாத் மெட்ரோ-வின் முதல் கட்டத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார்; புதிய அரசு மருத்துவமனை மற்றும் புதிய புற்றுநோய் மருத்துவமனையையும் தொடங்கிவைத்தார்

Posted On: 04 MAR 2019 8:29PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி, அகமதாபாத்துக்கு இன்று பயணம் மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்தார்.

அகமதாபாத் மெட்ரோ ரயில் சேவையின் முதல் கட்டத்தை வஸ்த்ரால் காம் மெட்ரோ நிலையத்தில் பிரதமர் தொடங்கிவைத்தார். அகமதாபாத் மெட்ரோ ரயிலின் இரண்டாவது கட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டிவைத்தார். “ஒரு தேசம், ஒரே அட்டை”யின் முன்மாதிரி அடிப்படையில் இந்தியாவின் முதலாவது தனிப்பட்ட பணம் செலுத்துதல் அமைப்பு மற்றும் தானியங்கி கட்டணம் வசூலிக்கும் அமைப்பு தொடங்கிவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மெட்ரோ ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்த பிரதமர், மெட்ரோ ரயிலிலும் பயணம் மேற்கொண்டார்.

அகமதாபாத்தில் 1,200 படுக்கைகளைக் கொண்ட புதிய அரசு மருத்துவமனை, புதிய புற்றுநோய் மருத்துவமனை, பல் மருத்துவமனை மற்றும் கண் மருத்துவமனையைப் பிரதமர் தொடங்கிவைத்தார். தாகோத் ரயில்வே பணிமனை மற்றும் பதன்-பிண்டி ரயில்வே பாதை ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், லோத்தல் கடல்சார் அருங்காட்சியகத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிவைத்தார்.

பிஜே மருத்துவக் கல்லூரி மைதானத்தில் கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டம் என்ற கனவு நனவாகியிருக்கும் இன்றைய தினம், வரலாற்றுப்பூர்வமான நாள் என்று கூறினார். அகமதாபாத் மக்களுக்கு எளிய மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான போக்குவரத்து முறையாக மெட்ரோ ரயில் திட்டம் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். 2014-ம் ஆண்டுக்கு முன்பு, நாட்டில் 250 கிலோமீட்டர் தொலைவுக்கு மட்டுமே மெட்ரோ ரயில் செயல்பட்டு வந்தது. தற்போது 655 கிலோமீட்டர் அளவுக்கு மெட்ரோ ரயில் இயங்கிவருகிறது என்று பிரதமர் கூறினார்.

இன்று தொடங்கிவைக்கப்பட்டுள்ள பல ஓர் போக்குவரத்துக்கும் பயன்படுத்தும் வகையிலான பொதுவான அட்டை மூலம், நாடு முழுவதும் மெட்ரோ மற்றும் பிற வகைப் போக்குவரத்துகளை பயன்படுத்துவதற்கு பல்வேறு வகையான அட்டைகளை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது என்று பிரதமர் தெரிவித்தார். இடம்பெயர்வதற்கு “ஒரு தேசம்-ஒரே அட்டை” என்பதை இந்த அட்டை உறுதிப்படுத்தும் என்று அவர் கூறினார். உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இந்த அட்டை, இதுபோன்ற அட்டைகளை தயாரிப்பதற்கு சர்வதேச நாடுகளை சார்ந்திருக்க வேண்டிய தேவையை நீக்கியிருப்பதாகவும் பிரதமர் கூறினார். உலக அளவில் போக்குவரத்துக்காக “ஒரு தேசம்-ஒரே அட்டை” முறையை கொண்டுள்ள ஒரு சில நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியிருப்பதாகவும் பிரதமர் மேலும் கூறினார்.

குஜராத் மாநிலத்தின் வளர்ச்சிக்காக குடிநீர் விநியோகத் திட்டங்கள், அனைவருக்கும் மின்சாரம், கட்டமைப்பு மேம்பாடு, அனைவருக்கும் வீடு மற்றும் ஏழைகளுக்கான திட்டங்கள் போன்ற பல்வேறு முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுவருவதை பிரதமர் குறிப்பிட்டார். மாநிலத்தில் உள்ள ஆதிவாசி சமூகத்தினரின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களையும் பிரதமர் விரிவாக விளக்கினார்.

கடந்த பல ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்துக்கு சிறப்பான திட்டமிடல் மற்றும் மாநிலத்தில் உள்ள மக்களின் கடின உழைப்பே காரணம் என்று பிரதமர் குறிப்பிட்டார். வளர்ச்சிப் பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த ஆய்வுக்கான இடமாக குஜராத் இருக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். பெருமளவில் மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள், குஜராத் மாநிலத்தில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

லோத்தல் கடல்சார் பாரம்பரிய வளாகத்துக்கான பணிகள் முடிவடைந்தால், அது பழங்கால இந்தியாவின் கடல்சார் பலத்தை வெளிப்படுத்தும் என்று பிரதமர் கூறினார். இந்த அருங்காட்சியகம், உலகத்தரம் வாய்ந்த வசதிகளைக் கொண்டிருக்கும் என்றும், மாநிலத்தின் சுற்றுலாத் திறனை அதிகரிக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

சுகாதாரத்துக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்துவருவதாக தெரிவித்த பிரதமர், நாடு முழுவதும் நலவாழ்வு மையங்கள் முதல் மருத்துவக் கல்லூரிகள் வரை, தரமான மருத்துவ கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார். குஜராத் மாநிலம் முழுவதும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தப் பணிகள் முடிவடைந்ததும், மருத்துவ நகரம், சுமார் 10,000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் என்று அவர் மேலும் கூறினார். 

ஊழல் முதல் தீவிரவாதம் வரை, நாட்டில் உள்ள அனைத்து அச்சுறுத்தல்களையும் எதிர்த்து போரிட அரசு உறுதிபூண்டுள்ளதாக நரேந்திர மோடி தெரிவித்தார். தேசத்துக்கு எதிராக செயல்படும் சக்திகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாட்டு மக்களுக்கு அவர் உறுதியளித்தார். நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் வாக்குவங்கி அரசியலை நடத்த வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளை அவர் கேட்டுக் கொண்டார். இதுபோன்ற நடவடிக்கைகள், பாதுகாப்புப் படையை பலவீனமடையவே செய்யும் என்றும், எதிரிகளை பலப்படுத்தும் என்றும் பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறினார்.

******



(Release ID: 1567496) Visitor Counter : 300