பிரதமர் அலுவலகம்

இந்தியா டுடே மாநாட்டில் பிரதமர் உரை

Posted On: 02 MAR 2019 9:00PM by PIB Chennai

புதுதில்லியில் இன்று (02.03.2019) நடைபெற்ற இந்தியா டுடே மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றினார்.

தூய்மை இந்தியா இயக்கம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக முயற்சி மேற்கொண்ட இந்தியா டுடே குழுமத்தை அவர் பாராட்டினார்.

தற்போது வரையான தமது பதவிக்காலம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், தேசிய அளவில் போதிய அனுபவம் இல்லாத தம்மால் ஒரு மறைமுக ஆசீர்வாதத்தை வழங்க முடிவதாக கூறியுள்ளார்.

வெளியுறவுக் கொள்கைகளை வகுப்பதில் காட்டப்பட்ட தயக்கத்தை சுட்டிக்காட்டிய அவர், கடந்த சில தினங்களாக நடைபெற்று வரும் சம்பவங்கள், இது போன்ற சந்தேகங்களுக்கு முடிவு கட்டியுள்ளதாக தெரிவித்தார்.

தற்போதுள்ள இந்தியா புதிய மற்றும் மாறுபட்ட இந்தியா என்று அவர் உறுதிபட தெரிவித்தார். ஒவ்வொரு வீரரின் உயிரும் விலை மதிப்பற்றது என்று கூறிய அவர், தற்போது இந்தியாவை சீண்டிப் பார்க்க யாரும் விரும்ப மாட்டார்கள் என்றார். ஒவ்வொரு முடிவையும் தேச நலன் கருதி மேற்கொள்ள இந்தியா உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டிற்கு உள்ளேயும், வெளியேயும், நாட்டிற்கு எதிராக செயல்படும் சில சக்திகள் இந்தியாவில் காணப்படும் ஒற்றுமை உணர்வைக் கண்டு அச்சமடைந்துள்ளதாக கூறினார். இது போன்ற அச்ச உணர்வு உண்மையிலேயே சிறந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் வீரத்தை கண்டு எதிரிகள் அச்சமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், ஊழல்வாதிகள் சட்டத்தை கண்டு அச்சமடைவதாகவும், இது போன்ற அச்ச உணர்வு நல்லது என்றும் கூறினார். புதிய இந்தியா தனது திறமைகள் மற்றும் வளங்களின் மீது நம்பிக்கை வைத்து பீடு நடை போடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசு மற்றும் ஆயுதப்படைகளின் நோக்கம் குறித்து சந்தேகமடையும் சிலரது நிலைப்பாடு குறித்து அவர் கேள்வி எழுப்பினார். நரேந்திர மோடியை எதிர்ப்பதாக கருதிக் கொண்டு, இது போன்ற நபர்கள் இந்தியாவையும் எதிர்க்கத் தொடங்கி  விட்டதாகவும், நாட்டு நலனுக்கு ஊறுவிளைவிப்பதாகவும் கூறினார். இந்தியாவின் ஆயுதப்படைகள் மீது சந்தேகம் எழுப்பும் இது போன்ற நபர்கள், இந்தியாவில் பயங்கரவாதத்தை தூண்டி விடுபவர்கள் மீது நம்பிக்கை வைப்பதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, ரபேல் போர் விமானங்கள் இந்தியாவின் கைவசம் இல்லாததை சுட்டிக் காட்டிய அவர், அந்த விமானங்களின் மீது ஏராளமான அரசியல் தலையீடு எழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இது போன்ற எதிர்மறையான நபர்களின் செயல்பாடுகள், நாட்டின் பாதுகாப்பை வெகுவாக சீர்குலைப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

நாட்டை பல்லாண்டு காலமாக ஆட்சி செய்தவர்கள், பொம்மை அறிவிப்புகள் மற்றும் ஒப்பந்தங்களில்தான் கவனம் செலுத்தி வந்ததாக அவர் கூறினார். இது போன்ற அணுகுமுறைகளால் பாதுகாப்பு வீரர்களும், விவசாயிகளும்தான் பெரும் இன்னலுக்கு ஆளாகினர் என்றும் அவர் தெரிவித்தார்.

சிலர் மேற்கொண்ட ஒப்பந்தங்களால் பாதுகாப்புத் துறை வெகுவாக பாதிக்கப்பட்டதாக கூறிய அவர், பொம்மைகளை தாண்டி உறுதியான கொள்கை ஏதும் இல்லாததால் வேளாண் துறையும் பாதிக்கப்பட்டது என்றார். அரசியல்வாதிகளின் கருணையால் ஏழைகள் தொடர்ந்து ஏழைகளாகவே இருக்க வேண்டுமென்பதால், பொம்மைகள் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இதற்கு மிகச் சிறந்த உதாரணம், விவசாய கடன் தள்ளுபடி என்றும் அவர் தெரிவித்தார். பிரதமரின் கிசான் சம்மான் நிதி, விவசாயிகளின் நலனுக்கான ஒரு விரிவான திட்டம் என்று விளக்கமளித்த அவர், விவசாயிகளுக்கு அதிகாரமளிக்கும் அரசின் பல்வேறு அணுகுமுறைகளில் இதுவும் ஒரு பகுதி என்று கூறினார். இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட 24 நாட்களுக்குள்ளாகவே தொடங்கப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தமது 55 மாத கால ஆட்சியும், மற்றவர்களின் 55 ஆண்டு கால ஆட்சியும், ஆளுமைக்கு இருவேறு முரண்பட்ட அணுகுமுறைகளை கையாண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர்கள் “டோக்கன் அணுகுமுறை”-யை கொண்டிருந்தனர், நாங்கள் “ஒட்டுமொத்த அணுகுமுறை”-யை கொண்டிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். அந்த வகையில், ராணுவ வீரர்களுக்கான ஒரு பதவிக்கு ஒரு ஓய்வூதியம்; ஏழைகளுக்கு உள்ளார்ந்த நிதி சேவை; தூய்மையான சமையல் எரிவாயு (உஜ்வாலா திட்டம்) ; அனைவருக்கும் மற்றும் அனைத்து வீடுகளுக்கும் மின்சார வசதி போன்ற அம்சங்களில் மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சிகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது வரை இந்தியா திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக மாறாதது ஏன்? பல்லாண்டு காலமாக போர் நினைவுச் சின்னம் அல்லது காவலர் நினைவுச் சின்னம் கட்டப்படாதது ஏன்? என்பது உள்ளிட்ட பல்வேறு தொடர் கேள்விகளையும் அவர் எழுப்பினார்.

வறுமை ஒழிப்பில் இந்தியா தற்போது துரித கதியில் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாகவும் உள்ளது என்றார். அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் எவ்வாறு வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் விளக்கமளித்தார். பல்வேறு சட்டங்களை (சட்டம் அல்லது முன்முயற்சிகள்) தமது அரசு உறுதியான செயல்பாடு மூலம் ஒருங்கிணைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.  2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில், அனைத்துத் தரப்பினரின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கவனம் செலுத்தப்பட்டதாகவும், 2019 முதல் மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்து முன்னேற்றத்தில் புதிய உச்சத்தை அடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

***



(Release ID: 1567246) Visitor Counter : 148