பிரதமர் அலுவலகம்

இந்தியக் கட்டுமானத் தொழில்நுட்ப நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார்.

Posted On: 02 MAR 2019 1:55PM by PIB Chennai

விஞ்ஞான் பவனில் இன்று (02.03.2019) நடைபெற்ற இந்தியக் கட்டுமானத் தொழில்நுட்ப நிகழ்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி  உரையாற்றினார்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வீடு என்கிற கனவு நனவாவதை நோக்கிய மத்திய அரசின் உறுதிக்குப் பிரதமர் அழுத்தம் கொடுத்தார்.

இந்தியாவில் அதிவேகமாக நகர்மயம் உருவாகும் நிலையில் உலக அளவிலான வீட்டு வசதி தொழில்நுட்பத்தின் தேவை உணரப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறினார்.  பிரதமர் வீட்டுவசதித் திட்டம், ஹ்ருதய், அம்ருத் உள்ளிட்ட பல திட்டங்களின் செயல்பாடுகள் வீட்டு வசதிப் பிரிவில் மாற்றம் கொண்டு வருவதாக உள்ளன என்று அவர் தெரிவித்தார்.  மாறுபட்ட புவித் தன்மைகளுக்கு ஏற்ப தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதும் ஒரு சவாலாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். 

குறைந்த செலவில் வீட்டு வசதி, மனை வணிகப் பிரிவு, திறன் மேம்பாடு, வீட்டு வசதித் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று பிரதமர் கூறினார். 

2022-க்குள் ஒவ்வொரு இந்தியனும் முறையான வீட்டு வசதியைப் பெற வேண்டும் என்ற தமது கனவை வலியுறுத்திக் கூறிய பிரதமர், இந்த காலகட்டத்திற்குள் 1.3 கோடி வீடுகள் கட்டப்படவுள்ளன என்றார்.  ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து திறமைகளை  விரிவுப்படுத்த ஒவ்வொருவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற அவர் அழைப்பு விடுத்தார். 

வரி மற்றும் இதர சலுகைகள் மூலம் மக்கள் வீடுகள் வாங்குவதையும் தமது அரசு எளிதாக்கி வருகிறது என்று பிரதமர் கூறினார்.  மனை வணிக (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டம் வீடு கட்டுவோர் இடையே பயனாளிகளுக்கான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்து, மனை வணிகப் பிரிவில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.  பெரும் எண்ணிக்கையில் திறமையான மனிதவளம் குறிப்பாக ஊரகப் பகுதிகளில் உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.  கட்டுமானத் துறையில் தற்போது பேரழிவுகளில் தாக்குப்பிடிப்பது எரிசக்தித் திறன், உள்ளூர் கண்டுபிடிப்பு ஆகியவற்றுக்கு பெரும் கவனம் செலுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். 

உலக வீட்டு வசதித் தொழில்நுட்ப சவால் என்ற அமைப்பு இந்தியாவின் கட்டுமானத்தில் சர்வதேச தரத்திற்கு சூழலியலை மேம்படுத்த உதவும் என்று பிரதமர் கூறினார்.  ஏப்ரல் 2019 முதல் மார்ச் 2020 வரையிலான காலம் கட்டுமானத் தொழில்நுட்ப ஆண்டாக கடைபிடிக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

*************



(Release ID: 1567161) Visitor Counter : 172