பிரதமர் அலுவலகம்
பிரதமரின் விவசாய வெகுமதி நிதித் திட்டத்தை உத்தரப்பிரதேசம், கோரக்பூரில் பிரதமர் துவக்கி வைத்தார்
பிரதமர், கோரக்பூர் மற்றும் கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் வளர்ச்சித் திட்டங்களையும் துவக்கி வைத்தார்
Posted On:
24 FEB 2019 6:39PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி, பிரதமரின் விவசாய வெகுமதி நிதித்திட்டத்தை (பிரதமர்-கிஸான்) கோரக்பூரிலிருந்து இன்று (24.02.2019) துவக்கி வைத்தார்.
இத்திட்டம் இன்று துவக்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதல் தவணையாக ரூ. 2000 தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளான விவசாயிகளுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
பிரதமரின் விவசாய வெகுமதி நிதித்திட்டம் தொடங்கப்பட்டிருப்பது குறித்து விவசாயிகளை பிரதமர் பாராட்டினார். பால்பண்ணை மற்றும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் குடும்பத்தினரைப் பாராட்டிய அவர், விவசாயிகள் கடன் அட்டைத் திட்டத்தை அவர்கள் தற்போது பயன்படுத்தலாம் என்பதை சுட்டிக்காட்டினார்.
மக்களிடையே உரையாற்றிய பிரதமர், நாடு விடுதலையான பிறகு, விவசாயிகளுக்கான மிகப் பெரிய திட்டம் இன்று தொடங்கப்பட்டிருப்பதால் இந்நாள் வரலாற்றில் இடம்பெறும் என்று தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு அதிகாரங்களைப் பரவலாக்க அரசு உறுதிபூண்டுள்ளதாக்க் கூறிய பிரதமர், 2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்க அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக எடுத்துரைத்தார்.
சுமார் 12 கோடி விவசாயிகள் பிரதமரின் விவசாய வெகுமதி நிதித்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள். ரூ.75,000 கோடியை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ஆண்டுதோறும் வரவு வைக்க இத்திட்டம் வகைசெய்கிறது. பயனாளிகளான விவசாயிகளின் பட்டியலை மாநில அரசுகள், மத்திய அரசுக்கு விரைவாக அனுப்பிவைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதன்மூலம், குறித்த நேரத்தில் விவசாயிகள் பயன்பெற வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
இதற்கு முந்தைய அரசுகள் கடன் தள்ளுபடி குறித்து அவ்வப்போது அறிவிப்பு வெளியிட்டிருந்தபோதிலும், விவசாயிகளுக்கு நீண்டகால அல்லது ஒட்டுமொத்த நிவாரண உதவி எதையும் வழங்கவில்லை என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். பிரதமர் கிஸான் திட்டம் விவசாயிகளுக்கு நிவாரணம் மட்டுமல்ல, ஊரகப் பொருளாதாரத்தில் அதிக அளவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பையும் அளிக்கும் என்றார்.
பிரதமரின் விவசாய வெகுமதி நிதித்திட்டம், நேரடி பரிமாற்றத் திட்டம் என்பதால் உதவித் தொகை முழுவதும் பயனாளியை சென்றடையும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
நிலுவையில் உள்ள நீண்டகால நீர்ப்பாசனத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற, அரசு 1 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். இத்திட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்றும் அவர் கூறினார். 17 கோடி மண் வள அட்டைகள், வேம்பு கலந்த யூரியா, 22 வகை பயிர்களுக்கு, 50 சதவீதத்திற்கும் மேலான அடக்கவிலையில், குறைந்தபட்ச ஆதரவு விலை, பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் மற்றும் தேசிய வேளாண் சந்தை (ஈ-நாம்) ஆகியவற்றையும் பிரதமர் குறிப்பிட்டார்.
கிஸான் கடன் அட்டைகள் திட்டத்தின் மூலம் விவசாயிகள் தற்போது ரூ. 1.60 லட்சம் வரை கடன் பெறமுடியும் என்றும் குறிப்பிட்ட பிரதமர், விவசாயிகளின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களையும் பட்டியலிட்டார்.
கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் அனைத்துப் பகுதிகளும் அதிவேகமாக மேம்பாடு அடைந்து வருவதாக பிரதமர் தெரிவித்தார். தொழிற்சாலைகள், சாலை வசதிகள், சுகாதார மேம்பாடு ஆகியவை இந்த மாற்றத்தின் வெளிப்பாடுகள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கோரக்பூர் மற்றும் கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் மேம்பாட்டுக்காக 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களை அறிவித்த பிரதமர், அவற்றில் சில திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், பலவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இந்தத் திட்டங்கள் அனைத்தும் எளிதான வாழ்க்கையை மேம்படுத்தும் என்றும் அவர் கூறினார். பிரதமரின் வீட்டுவசதித் திட்டம், உஜ்வாலா திட்டம், ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்டவை ஒன்றாக இணைவோம், ஒன்றாக உயர்வோம் என்ற எழுச்சியின் அடையாளமாகும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
*****
(Release ID: 1566184)
Visitor Counter : 356