பிரதமர் அலுவலகம்
தேசிய போர் நினைவுச் சின்னத்தை பிரதமர் நாளை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்
Posted On:
24 FEB 2019 5:00PM by PIB Chennai
நாளை, பிப்ரவரி 25 அன்று நடைபெறும் எளிய நிகழ்ச்சியில், தேசிய போர் நினைவுச் சின்னத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது முன்னாள் படை வீரர்களிடமும் பிரதமர் உரையாற்றவுள்ளார்.
புதுதில்லியில் உள்ள இந்தியா கேட் அருகே அமைக்கப்பட்டுள்ள தேசிய போர் நினைவுச் சின்னம், சுதந்திரத்திற்கு பிறகு நாட்டைக் காக்கும் பணியில் தங்கள் இன்னுயிரை ஈந்த நமது வீரர்களுக்கு செலுத்தும் தகுந்த மரியாதையாக இருக்கும்.
அமைதி காக்கும் படைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப் பணிகளில் பங்கேற்று, அதிகபட்ச தியாகம் செய்த வீரர்களை நினைவுகூறுவதாகவும் இந்த தேசிய போர் நினைவுச் சின்னம் திகழும்.
அதிநவீன வடிவில் உலகத்தரம் வாய்ந்த நினைவுச் சின்னமாக தேசிய போர் நினைவுச் சின்னம் அமைய வேண்டும் என்ற தமது விருப்பத்தை 2014 ஆம் ஆண்டு பிரதமர் வெளியிட்டார்.
இந்த தேசிய போர் நினைவுச் சின்னம், ‘அமர் சக்ரா’ அல்லது அழியா வட்டம், ‘வீர்த்த சக்ரா’ அல்லது துணிச்சல் வட்டம், ‘தியாக சக்ரா’ அல்லது தியாக வட்டம், ‘ரக்ஷா சக்ரா’ அல்லது பாதுகாப்பு வட்டம் என்ற நான்கு வட்டங்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மத்தியில் அமைந்த நினைவுத்தூண், அணையா விளக்கு, இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படைகள் சந்தித்த முக்கிய போர்களை சித்தரிக்கும் வெண்கலத்தாலான ஆறு சித்திரங்கள் இந்த தேசிய போர் நினைவுச் சின்னத்தில் இடம்பெற்றுள்ளன.
தற்போது உயிருடன் உள்ள சுபேதார் மேஜர் பானா சிங் (ஓய்வு), சுபேதார் மேஜர் யோகேந்திர சிங் யாதவ், மற்றும் சுபேதார் சஞ்சய் குமார் ஆகிய 3 பேர் உட்பட பரம்வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் மார்பளவு சிலைகள், போர் வீரர்கள் நினைவிடத்தில் இடம்பெற்றுள்ளன.
தேசிய போர் நினைவுச் சின்னம், தனது தியாகிகளுக்கு தகுந்த மரியாதை செலுத்தும் பெருமை மிக்க நாட்டின் ஒட்டுமொத்த விருப்பத்தை பிரதிபலிப்பதாக அமையும்.
*****
விகீ/எம்எம்/உமா
(Release ID: 1566148)
Visitor Counter : 330