பிரதமர் அலுவலகம்

கொரிய குடியரசுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு முன்பு பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை

Posted On: 20 FEB 2019 6:06PM by PIB Chennai

அதிபர் திரு. மூன் ஜே இன்னின் அழைப்புக்கு இணங்க கொரிய குடியரசுக்கு நான் பயணம் மேற்கொண்டுள்ளேன். இது கொரிய குடியரசுக்கு நான் மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் என்பதோடு அதிபர் மூனுடனான இரண்டாவது உச்சி மாநாடாகும்.

     சென்ற வருடம் ஜூலை மாதம் அதிபர் திரு. மூன் ஜே இன் மற்றும் முதல் பெண்மணி திருமதி கிம் ஜுங்க் சூக் ஆகியோரை வரவேற்கும் மகிழ்ச்சியை நாம்  பெற்றிருந்தோம். கொரிய குடியரசுக்கு நான் மேற்கொண்டுள்ள பயணம் நாங்கள் இருவரும் நமது உறவுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கிறது.

  கொரிய குடியரசை மதிக்கத்தக்க நட்பு நாடாக நாம் கருதுவதோடு அந்நாட்டோடு நமக்கு சிறப்பான உத்தி சார்ந்த பங்களிப்பும் உள்ளது. நட்பு சார்ந்த ஜனநாயங்கள் என்பதால் இந்தியாவும், கொரிய குடியரசும் மண்டல மற்றும் உலகளாவிய அமைதிக்கான பங்களிப்போடு கூடிய மதிப்பும், தொலைநோக்குப் பார்வையும் கொண்டுள்ளோம். சக சந்தைப் பொருளாதாரங்கள் என்பதால் நமது தேவைகளும், வலிமையும் ஒன்றுக்கொன்று சார்புடையதாகவே இருக்கின்றன.  “இந்தியாவில் தயாரிப்போம்” “தொடங்குக இந்தியா” “தூய்மை இந்தியா” போன்ற நமது முன்முயற்சிகளில் கொரியா முக்கிய பங்களிப்பை வழங்குகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் நமது கூட்டுறவு ஊக்கம் தருவதாக உள்ளது என்பதோடு அடிப்படை முதல் வளர்ச்சி பெற்ற அறிவியல் வரை நமது கூட்டு ஆராய்ச்சி விரிந்துள்ளது.

     நமது மக்களுக்கு இடையேயான உறவுகளும் பரிமாற்றங்களும் எப்போதும் போல் நமது நட்புறவுக்கு அடிப்படையாக உள்ளன. சென்ற நவம்பர் மாதம் அயோத்தியாவில் நடைபெற்ற “தீபோட்சவ்” திருவிழாவுக்கு முதல் பெண்மணியை  தனது சிறப்பு பிரதிநிதியாக அனுப்பிய அதிபர் திரு. மூனின் முடிவு நம்மை நெகிழ வைத்தது.

     நமது கிழக்கு நோக்கிய கொள்கை மற்றும் கொரிய குடியரசின் புதிய தெற்குக் கொள்கை ஆகியவற்றுக்கு இடையேயான இணக்கம் நமது உறவின்  ஆழத்திற்கும், வேறுபட்ட தன்மைக்கும் புத்துயிர் அளிக்கிறது. இணைந்து செயல்படுவதன் மூலமாக “நமது மக்கள், வளம் மற்றும் அமைதி” ஆகியவற்றில் எதிர்காலத்திற்கான  பங்களிப்பில் நமது உறவை முன்னெடுத்துச் செல்வதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.

     கொரிய பயணத்தின் போது அதிபர் திரு. மூனோடு நடத்தவிருக்கும் பேச்சுவார்த்தைகள் தவிர, வர்த்தகத் தலைவர்கள், இந்திய சமுதாய  உறுப்பினர்கள்,   அனைத்துத் துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்களையும் நான் சந்திக்கவிருக்கிறேன்.

     இந்த முக்கியமான பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு எனது கொரியப் பயணம் உதவும் என்று நம்புகிறேன்.

-----



(Release ID: 1565726) Visitor Counter : 116