பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

“உள்நாட்டில் எண்ணெய் மற்றும் எரிவாயு கண்டுபிடித்தல், உற்பத்தியை அதிகரிக்க கண்டுபிடிப்பு மற்றும் உரிமக் கொள்கையில் சீர்த்திருத்தங்கள் செய்ய” அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 19 FEB 2019 9:07PM by PIB Chennai

உள்நாட்டில் எண்ணெய் மற்றும் எரிவாயு கண்டுபிடித்தல், உற்பத்தியை அதிகரிக்க கண்டுபிடிப்பு மற்றும் உரிமக் கொள்கையில் சீர்த்திருத்தங்கள் செய்ய பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்திப் பிரிவில், புதிய முதலீட்டை ஈர்ப்பதும், புதிய பகுதிகளில் அந்தப் பணிகளை விரிவுப்படுத்துவதும், உற்பத்தி செய்யும் வடிநிலப்பகுதிகளில் கொள்கையைத் தளர்த்துவதும் இந்தச் சீர்திருத்தங்களின் நோக்கமாகும். எண்ணெய் மற்றும் எரிவாயுவின் உள்நாட்டு உற்பத்தியில் தேக்கநிலை  / குறைவு, இறக்குமதியை சார்ந்திருப்பது அதிகரித்தல், கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்தியில் முதலீட்டு வாய்ப்புக் குறைவு ஆகியவற்றை சரிசெய்வதற்கு கூடுதலாக கொள்கைச் சீர்த்திருத்தங்கள்  தேவைப்படுவதாக  உணரப்பட்டது.

இந்தக் கொள்கைச் சீர்த்திருத்தங்கள் நான்கு முக்கியமான பிரிவுகளில் கவனம் செலுத்தும். முதலாவதாக புதிய பகுதிகளில் கண்டுபிடிப்புப் பணிகளை அதிகப்படுத்துவதோடு கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விற்பனையில் வெளிப்படையான போட்டி ஒப்பந்தங்கள் நடைமுறையுடன், விலை நிர்ணயம் செய்து சந்தைப்படுத்தும் சுதந்திரத்தை  ஒப்பந்ததாரர்கள் பெற்றிருப்பார்கள்.

இரண்டாவதாக புதிதாக எரிவாயு கண்டுபிடிக்கப்படும் இடங்களில் உற்பத்திக்கான ஊக்கத்தொகையை அதிகப்படுத்துதல், சந்தைப்படுத்துதல், விலை நிர்ணயத்திற்கு சுதந்திரம் வழங்குதல். 

மூன்றாவதாக உற்பத்தியை அதிகப்படுத்த புதிய தொழில்நுட்பத்தையும் முதலீட்டையும் கொண்டுவர தனியார் துறையினருக்கும் தடையில்லாச் சான்றிதழுக்கு  அனுமதி வழங்கப்படும்.

நான்காவதாக வணிகத்தை எளிதாக நடத்துவதற்கு ஒருங்கிணைப்பு நடைமுறையையும், பெட்ரோலிய பொருட்களுக்கான தலைமை இயக்ககத்தின் அனுமதி பெறுவதற்கு எளிமையான விதிகளையும் உருவாக்குதல்.

இத்தகைய கொள்கை சீர்த்திருத்தங்களால் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி அதிகரித்து இறக்குமதியை சார்ந்திருப்பது குறைவதோடு எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தி அந்நியச் செலாவணி சேமிக்கப்படும்.

-----


 



(Release ID: 1565388) Visitor Counter : 198


Read this release in: Kannada , English , Urdu , Hindi