பிரதமர் அலுவலகம்

இந்தியாவின் முதலாவது அதிவிரைவு ரயிலான “வந்தே பாரத் எக்ஸ்பிரஸை” பிரதமர் நாளை கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.

புதுதில்லி-வாரணாசி ரயில் பயணம் எட்டு மணிநேரம் மட்டுமே
திங்கள், வியாழன் தவிர அனைத்து வார நாட்களிலும் ரயில் ஓடும்
வந்தே பாரத் எக்ஸ்பிரசின் சிறப்பு அம்சங்கள், வேகம், வசதி மற்றும் சேவை
தொடங்குக இந்தியாவின் வெற்றிக்கதை

Posted On: 14 FEB 2019 4:28PM by PIB Chennai

இந்திய ரயில்வேத் துறையின் “தொடங்குக இந்தியா” முயற்சியானது இந்தியாவின் முதலாவது அதிவேக ரயிலான “வந்தே பாரத் எக்ஸ்பிரசாக பரிணமித்துள்ளது. 

புதுதில்லி-கான்பூர்-அலகாபாத்-வாரணாசி வழியாகச் செல்லும் இந்த ரயிலின் முதல் பயணத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை காலையில் புதுதில்லி ரயில் நிலையத்தில் இருந்து கொடியசைத்து  துவக்கி வைப்பார்.  இந்த ரயிலின் வசதிகளை ஆய்வு செய்யும் பிரதமர்,  கூடியிருக்கும் மக்களிடையே உரையாற்றுவார். 

மத்திய ரயில்வேத் துறை மற்றும் நிலக்கரித் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தலைமையில் அலுவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அடங்கிய குழுவினர் நாளை இந்த ரயிலில் பயணிப்பார்கள்.  இந்த ரயில் கான்பூரிலும், அலகாபாத்திலும் நிறுத்தப்பட்டு, அங்கு பொதுமக்களும், பிரமுகர்களும் ரயிலுக்கு  வரவேற்பு அளிப்பார்கள். 

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், மணிக்கு 160 கிலோமீட்டர் என்ற அதிகபட்ச வேகத்தில் செல்லக்கூடியது.  சதாப்தி ரயிலில் உள்ளது போலவே பயண வகுப்புகள்  இருந்தாலும், இந்த ரயிலின் வசதிகள் அதைவிட சிறப்பாக இருக்கும்.  பயணிகளுக்கு முற்றிலும் புதிய பயண அனுபவத்தை தருவதே இதன் நோக்கமாகும். 

புதுதில்லிக்கும், வாரணாசிக்கும் இடையிலான தூரத்தை இந்த ரயில் எட்டு மணிநேரத்தில் கடக்கும்.  திங்கள், வியாழன் தவிர அனைத்து வார நாட்களிலும் இந்த ரயில் ஓடும். 

தானியங்கி கதவுகள், பயணிகளுக்கு ஜிபிஎஸ் அடிப்படையிலான காணொலி தகவல் முறை, பொழுதுபோக்குக்காக ரயிலின் உள்ளே வை-ஃபை வசதி, அதிசொகுசு இருக்கைகள் ஆகிய வசதிகள் அனைத்து ரயில்பெட்டிகளிலும் செய்யப்பட்டுள்ளன.  உயிரி-வெற்றிட முறையில் கழிப்பறைகள்  அமைக்கப்பட்டுள்ளன.  ஒவ்வொரு இருக்கைக்கும்  தனியான விளக்கு வசதியுடன், ரயில்பெட்டி மொத்தத்திற்கும் மிதமான வெளிச்சத்திற்கான விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.  சூடான உணவு, சூடான மற்றும் குளிர்ந்த பானங்களை, பயணிகளுக்கு அளிப்பதற்காக ஒவ்வொரு பெட்டியிலும் பான்ட்ரி வசதி உள்ளது.  பயணிகளுக்கு கூடுதல் வசதியாக, பெட்டியின் உள்ளே, ஒலியும், வெப்பமும் குறைவாக இருக்குமாறு கட்டமைக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் இருக்கும் 16 குளிர்சாதனப் பெட்டிகளில் 2 நிர்வாக வர்க்கப் பெட்டிகளாகும். இந்த ரயில் 1,128 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடியதாகும். சதாப்தி ரயிலை விட அதிகமான பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில், அனைத்து மின்சார சாதனங்களும் பெட்டிகளின் அடிப்பகுதிக்கு மாற்றப்பட்டு இருப்பதோடு ஓட்டுனரின் பெட்டியிலும் இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன.

பசுமை அடிச்சுவடுகளை கூட்டும் வகையில் ரயிலை நிறுத்தும் முறை அமைக்கப்பட்டிருப்பதால் 30 சதவீதம் வரை மின்சக்தி சேமிக்கப்படுகிறது.

வேகம், பாதுகாப்பு, சேவை ஆகியவையே இந்த ரயிலின் சிறப்பு இயல்புகளாகும். சென்னையில் உள்ள ரயில்பெட்டி தொழிற்சாலை, 18 மாதங்களில் பல்வேறு விநியோகஸ்தர்களின் பணியோடு, முழுமையான வடிவமைப்பு, தயாரிப்பு, கணினி வடிவமைப்பு ஆகியவற்றின் பின்னணியில் உள்ள சக்தியாக இருந்துள்ளது.

பிரதமரின் “இந்தியாவில் தயாரிப்போம்” என்ற தொலைநோக்குப் பார்வையை பின்பற்றும் முகமாக இந்த ரயிலின் முக்கியமான முறைமைகள் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் சர்வதேச தரத்தோடு போட்டியிடக் கூடிய செயல்பாடு, பாதுகாப்பு மற்றும் பயணிகளின் வசதி ஆகியவற்றோடு இதற்கான உலகளாவிய செலவில் பாதிக்கும் குறைவாக இருப்பதால், சர்வதேச ரயில் வர்த்தகத்தில் மாற்றத்தை உண்டாக்கும் திறன் பெற்றுள்ளது.

                                    ******



(Release ID: 1564601) Visitor Counter : 496